கிண்ணியா தள வைத்தியசாலைக்கு சீன தொழிநுட்பக் குழு விஜயம்

(ihzana fareed)

கிண்ணியா தள வைத்தியசாலையில் நிலவி வரும் பெளதீக வள பற்றாக்குறை சம்பந்தமாக கள ஆய்வு செய்து நோயாளர்களுக்கான விடுதி வசதி நிர்மாணித்துக் கொடுப்பதற்காக சீன நாட்டின் குழுவொன்று இன்று (4) வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர்

மத்திய சுகாதார பிரதி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்தக் குழு, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸின் வழிகாட்டலின் கீழ், வைத்தியசாலையின் தேவைகளை அடையாளம் காண்பதற்காக நோயா ளர் விடுதி உட்பட பெரும்பாலான இடங்களைச் சுற்றிப் பார்வையிட்டனர்.

பின்னர் இந்த வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடல் இடம் பெற்றன.

இதன் போது வைத்தியசாலையின் உடனடித் தேவைகள் குறித்து, குழவினருக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டன. இதில் மாவட்ட வைத்திய அதிகாரி எச்.எம். சமீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்குழுவின் விஜயம் குறித்து, சுகாதார பிரதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய சுகாதார பிரதி அமைச்சினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் இது.கிழக்கு மாகாணத்தின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், கிண்ணியா , மூதூர் ஆகிய வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக நவீன வசதிகளுடன் நான்கு கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதற்கான நிதியினை சீனக் குடியரசின் CTIC என்ற நிறுவனத்திடம் கோரியிருக்கிறோம். அந்த நிறுவனத்தின் கட்டட நிர்மாண பொறியியலார் ,கட்டடக் கலைஞர், திட்ட மதிப்பீட்டு அதிகாரி, திட்ட அமுலாக்க அதிகாரி ஆகியோர் இன்று வருகை தந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

Comments