காத்தான்குடி மோதல் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்
பொலிஸ் மா அதிபருக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்
காத்தான்குடி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி சட்டத்தை நிலைநாட்டுமாறு முஸ்லிம் கவுன்சில், பொலிஸ் மா அதிபரைக் கோரியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காத்தான்குடியில் தீவிரப் போக்குடைய இரு சிறு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பிலும் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இன்று ஊடகங்களில் தொடராக முக்கியத்துவமளிக்கப்பட்டு செய்திகள் வெளியிடப்படுகின்றன.
எனினும் இந்த துரதிஷ்டவசமான சம்பவமானது இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கிடையிலான மோதலாகவும் காத்தான்குடி மக்களிடையேயான மோதலாகவும் சித்திரிக்கப்படுகிறது.
முஸ்லிம் கவுன்சில் ஒரு போதும் இந்த வன்முறைச் சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை ஒன்றை நடத்துமாறும் இந்த சம்பவத்திற்குக் காரணமாகவிருந்தவர்களை கண்டறிந்து நீதியின் முன் நிறுத்துமாறும் உங்களை வேண்டிக் கொள்கிறது என அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment