கிண்ணியா டெங்குத் தாக்கம்: முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்பட்ட சதியாம்


(Mujeeb Ibrahim)

12 மரணங்கள் பலர் உயிருக்கான போராட்டம், அவசர சிகிச்சை பிரிவில் இருக்கவேண்டியவர்கள்
கட்டிலும் அற்ற நிலையில் சாதாரண வார்டுகளில் அல்லல்படுகிற அவலமென துயரம் தொடர்கிறது…

ஒரு முஸ்லிமின் நம்பிக்கை பிரகாரம் மரணம் எப்போதும் எந்த வடிவிலும் வரும்!

கிண்ணியாவை விட குப்பைகளால் சூழ்ந்து நிறைந்த பகுதிகளில் டெங்கும் இல்லை மரணங்களும் இல்லை….

கிண்ணியாவில் டெங்கு பரவி மரணங்கள் நிகழ்வது டெங்கு நுளம்பினாலும், அசுத்தமான சூழலாலும் மாத்திரமே என்று ஒரு முஸ்லிம் விசுவாசிக்கமாட்டான்.

இவைகள் வெறும் காரணங்கள். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இது சோதனை.
இவ்வாறான சூழலில் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்?

1. பெளதீக காரணங்களாக சொல்லப்படுகிற டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் அடிப்படை நடவடிக்கையான நமது சுற்று சூழலை தூய்மையாக வைத்திருக்கும் கடமையினை சரிவர நிறைவேற்ற வேண்டும்.

அது இந்த அபாய சீசனுக்கு மாத்திரம் செய்கிற வேலையாக இல்லாமல் வாழ்வு முறையாக மாறவேண்டும்.

2. இது ஒரு சோதனையாக இருப்பதால் அதனை நிகழ்த்துகிற இறைவனின் பக்கம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும். இறைவனுக்கு பொருத்தமாக நமது நிலவரங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு எங்கோ தூரத்திலிருக்க முஸ்லிம் உம்மத் சமூக வலைத்தளங்களில் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு செய்தியை பார்த்தால் மனசு பற்றி எரிகிறது…!
அது என்ன?

” கிண்ணியாவில் பரவுவது type 2 டெங்குவாம், இதுவரை இலங்கையில் type 1 டெங்குதான் இருந்ததாம். இது யாரோ வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு செய்கிற சதியாம்”
முஸ்லிம்களுக்கு சதி செய்ய வேறு யாரும் தேவையில்லை. முஸ்லிம்களே போதும்…!

Comments