கிண்ணியா தனித்து விட்டது: கலவர நிலைமைகள்கூட ஏற்படலாம்! (photo)
கிண்ணியா பிரதேசத்தில் ஒருவகை காய்ச்சல் நோய் காரணமாக இறுதியாக ஒருவர் உயிரிழந்துள்ள தோடு, 2000க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்ணியாவில் பரவியிருப்பது டெங்கு காய்ச்சலா? அல்லது வேறு ஏதாவது ஒரு காய்ச்சலா? என்ற சந்தேகமும் பிரதேசவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நோய் பரவத்தொடங்கி இரு மாதங்களாக கிண்ணியாவில் மேற்கொள்ளப்பட்ட முற் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இந்த காய்ச்சல் பரவியவண்ணமுள்ளது.
நேற்று மட்டும் கிண்ணியா வைத்தியசாலையில் 1200க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுதவிர கந்தளாய், திருமலை பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஆரம்ப வைத்திய அறிக்கைகளின்படி பரவியுள்ள காய்ச்சல் டெங்கு என்றே கூறப்படுகின்றது. மக்கள் இது வேறு ஒருவகை நோயோ என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றிய மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சுகாதார திணைக்களம் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
கிண்ணியா வைத்தியசாலை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கு போதிய வசதிகளற்றதாகவே இருக்கின்றது. இங்குள்ள வைத்தியர்களும் பெரும் சிரமங்களுடன் சிகிச்சையளித்து வருகின்றனர்.
சுகாதார அமைச்சு தேவையான வைத்தியர்களை உடன் கிண்ணியாவுக்கு அனுப்பவேண்டும். நிரந்தரமாக வைத்தியர்களை நியமிக்கும்வரை அவசர நிவாரணத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வெளிப் பிரதேசங்களில் இருந்து வைத்தியர்களை அனுப்பி இந்த நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
கிண்ணியா மக்களிடம் குடிகொண்டுள்ள அச்ச நிலைமையை அகற்றுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டும். உடனடியாக இப்பிரதேசம் அனர்த்த பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
கிண்ணியா தனித்து விட்டது போன்ற தகவலே எமக்கு கிடைக்கின்றது. இந்நிலை தொடருமாக இருந்தால் பிரதேசத்தில் கலவர நிலைமைகள்கூட ஏற்படலாம். கிண்ணியாவிலும் பல்வேறு அமைப்புகள் இன்று தனித்து செயற்பட்டு வருகின்றன. இப்பணிகள் ஒருங்கிணைக்கப்படுதல் வேண்டும்.
12 மரணங்கள் ஏற்பட்டு, முழுப் பிரதேசத்திலும் ஒருவகை மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அர் இப்பிரதேசம் குறித்து கூடுதலான கவனத்தைச் செலுத்தவேண்டும்.


Comments
Post a Comment