சாய்ந்தமருதிலிருந்த மாகாண அலுவலகம் முஸ்லிம்களிடமிருந்து பறிபோய்விட்டது

(இப்னு ஷெரீப் )

சாய்ந்தமருதிலிருந்து திருமலைக்கு தற்காலிகமாக எடுத்துச் செல்லப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் யொவுன்புர நிகழ்வு முடிந்து தற்போது அம்பாறை நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மாகாண அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் கடமைக்காக சென்றுள்ளனர்.

இதுகுறித்து முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு பலமுறை புகார் செய்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் சாய்ந்தமருதிலிருந்த இம் மாகாண அலுவலகமும் தற்போது பறிபோயுள்ளது.

இனவாத செயற்பாடுகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்த முடியாது நமது அரசியல் தலைமைகள் காட்டிய மெளனம் அடுத்த தோல்வியை நமது சமூகத்துக்கு ஏற்படுத்தியிருப்பதாக இளைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சாய்ந்தமருதிலுள்ள அலுவலக ஆவணங்கள், உபகரணங்கள் எதுவும் தமக்கு தேவையில்லை என்ற நோக்கில் திருமலையிலிருந்து எடுத்து வந்த ஆவணங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு இவ்வாரம் முதல் அம்பாறையிலுள்ள மாவட்ட அலுவலகத்தின் ஒரு பகுதியில் மாகாண அலுவலகம் இயங்கி வருகிறது.

உத்தியோகபூர்வமான அறிவுறுத்தல் எதுவுமின்றி இனவாத அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகள் அலுவலகம் ஒன்றினை தேவைக்கேற்றவாறு இடமாற்றம் செய்யுமளவிற்கு நிலமை மாறியிருப்பதை தட்டிக்கேட்கவும் தடுத்து நிறுத்தவும் முடியாத நிலையில் நமது அரசியல் இருக்கிறதா என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளே! முஸ்லிம் அரசியல்வாதிகளே!
நமது இளைஞர் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமானத்தை எப்படி கழுவப் போகிறீர்கள்.

அலுவலகம் கைமாறப் போகிறதென்று பலமுறை நாம் கதறியும் அரசியல்வாதிகளே உங்களிடமிருக்கும் அதிகாரங்களைக் கொண்டு நீங்கள் செய்த காரியங்கள் என்வென்று சொல்லப் போகிறீர்கள் என்று கிழக்கு மாகாண இளைஞர் சமூகம் 
கண்ணீருடன் கேட்கின்றது.

Comments