பலவந்தமாக பறிக்கப்படும் முஸ்லிம்களின் பூர்வீகம்

-ARA.Fareel

புத்த பெருமான் அகிம்­சையையும், கரு­ணை­யை­யுமே  போதித்தார். அடா­வ­டித்­த­னங்­க­ளையும், பலாத்­கா­ரங்­க­ளையும் எதிர்த்தார். கௌதம புத்தர் இன்று உயி­ருடன் இருந்­தி­ருந்தால் பௌத்த நாடான  இலங்­கையில், அவ­ரது சீடர்­க­ளான பௌத்த தேரர்­களின் நிலை கண்டு நிச்­சயம் கண்­க­லங்­கி­யி­ருப்பார். 

''இது பௌத்த நாடு. இந்­நாடு எமக்­குத்தான் சொந்தம். எமது நாட்­டினை முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் ஆக்­கி­ர­மித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். மாயக்­கல்லி மலை­ய­டி­வார  காணியை போலி உறு­தி­க­ளுடன் முஸ்­லிம்கள் அப­க­ரித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் காணி­களை விட்டுச் செல்ல வேண்டும்.'' 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  அம்­பாறை, மாவட்ட செய­ல­கத்தில் அம்­பாறை மாவட்ட அரச அதிபர் துசித்த வணி­க­சிங்க தலை­மையில் நடை­பெற்ற  கூட்­டத்தில் பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரும் கலந்து கொண்­டி­ருந்தார். அங்கு அவர்  தெரி­வித்த கருத்­து­களில் சிலவே இவை. 

இறக்­காமம், மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தின் காணியை சுவீ­க­ரிப்­ப­தற்­காக ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்த உயர்­மட்டக் கூட்­டத்தில் மாகாண காணி ஆணை­யாளர் டீ.டீ.அனுர தர்­ம­தாச, மாவட்ட உதவி காணி ஆணை­யாளர் டீ.டீ.எஸ்.தக் ஷிலா குண­ரத்ன, இறக்­காமம் பிர­தேச செய­லாளர் எம்.எம்.நஸீர், மாவட்ட நில அளவைத் திணைக்­கள  அதி­கா­ரிகள், பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், தீக­வாபி மாணிக்­க­மடு, பரி­வார சைத்­திய ரஜ­ம­கா­வி­கா­ரையின் மகா­நா­யக்க அம்­ப­க­ஹ­பிட்­டியே சீல­ரத்ன தேரர். சிங்­கள ராவய மற்றும் சிங்­ஹலே அமைப்­பு­களின்  தேரர்கள் கலந்து கொண்­டனர். 

குறிப்­பிட்ட மாநாட்டில் முஸ்லிம் தரப்­பினர் கலந்து கொள்­ள­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மாயக்­கல்லி மலை­ய­டி­வார காணி­களின்  உரி­மை­யா­ளர்கள் மற்றும் பிர­தேச முஸ்­லிம்­க­ளுக்கு  அழைப்பு விடுத்தும் அவர்கள் கூட்­டத்தில் கலந்து கொள்­ள­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

கிழக்கு மாகா­ணத்­திற்­கென ஒரு முத­ல­மைச்சர் பத­வியில் இருக்கும் போது அவ­ரிடம் இவ்­வி­வ­காரம் கலந்­து­ரை­யா­டப்­ப­டாமல் கூட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டமை பல சந்­தே­கங்­களை   ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

மாயக்­கல்லி மலை 
அம்­பாறை  மாவட்­டத்தில் இறக்­கா­மத்­திலே முஸ்­லிம்கள்  ஆரம்­பத்தில் குடி­யே­றி­ய­தாக வர­லாறு தெரி­விக்­கி­றது. இறக்­காமம் வரி­பத்­தான்­சேனை சந்­தியில் இருந்து கிழக்கே வயல்கள் மற்றும் சிறு மலை­க­ளி­னூ­டாக பிர­தான பாதை­யொன்று ஊட­றுத்துச் செல்­கி­றது. 
வரிப்­பத்தான் சேனை சந்­தியில் இருந்து குடுவில் கிராமம் செல்லும் வரை வலது பக்­க­மாக நல்ல தண்ணி எனும் இடத்தில் முஸ்­லிம்­களும், மாணிக்­க­மடு எனும்  இடத்தில் இந்­துக்­களும் வாழ்­கி­றார்கள். இப்­பி­ர­தே­சங்கள் எவற்­றிலும் பௌத்­தரின் வாழ்­வி­டங்கள் இல்லை. 
இங்கே  இருக்கும் மேட்டு நிலங்கள், வயல் காணிகள் அனைத்தும் முஸ்­லிம்­க­ளுக்கு அர­சினால்  சட்­ட­பூர்­வ­மாக  வழங்­கப்­பட்ட இடங்­க­ளாகும். இக்­கா­ணி­க­ளுக்கு 1980 களில் காணி உத்­த­ரவு பத்­தி­ரங்­களும் 1990 ஆம் ஆண்­டு­களில் LDO  காணி அனு­ம­திப்­பத்­தி­ரங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. 

இந்த காணிகள் தொடர்ச்­சி­யாக மழை பெய்தால் வெள்­ளத்தில் மூழ்கக் கூடி­ய­ன­வாகும். இங்கு வீதியின் இடது பக்­க­மாக சில குன்­றுகள் காணப்­ப­டு­கின்­றன. 

குன்­று­களின் அடி­வா­ரத்தில் நெற்­கா­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. இக்­கா­ணி­க­ளுக்கும் LDO உத்­த­ரவு பத்­தி­ரங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இக்­குன்­று­களில் சில சிதை­வ­டைந்து படிக்­கட்­டுகள், நீர்த்­த­டாகம் போன்ற அமைப்­புகள்  காணப்­ப­டு­கின்­றன. இவை பண்­டைய  ராஜ­தா­னி­களின் சுவ­டு­க­ளாக இருக்­கலாம் என்று தொல்­பொருள்  திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. 

அம்­பாறை மாவட்டச் செய­லக கூட்­டத்தில் தீர்­மானம்
அம்­பாறை மாவட்டச் செய­ல­கத்தில் அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர்  தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­னுள்ள  முஸ்­லிம்கள் இரு­வ­ருக்குச் சொந்­த­மான 2 ½ ஏக்கர் காணியை பௌத்த விகாரை நிர்­மா­ணிப்­ப­தற்கு  சுவீ­க­ரிப்­ப­தென  தீர்­மா­னிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. காணிகள் பள்­ளியான் செயி­னுதீன் மற்றும் ஆதம்­லெவ்வை  சமீமா  ஆகி­யோ­ருக்குச் சொந்­த­மா­ன­வை­யாகும். 

சுவீ­க­ரிக்­கப்­ப­ட­வுள்ள  காணி­களின் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு எதிர்த்திசையில் பாதைக்கு அருகில் மாற்றுக் காணிகள் வழங்­கப்­ப­டு­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கூட்­டத்தில் இறக்­காமம் பிர­தேச செய­லாளர் எம்.எம்.நஸீ­ரைத் ­த­விர முஸ்லிம் தரப்பில் எவரும் கலந்து கொள்­ளா­ததால் காணிச் சொந்தக் காரர்கள்  இரு­வ­ருக்கும் கடந்த புதன்­கி­ழமை  இறக்­காமம் பிர­தேச செய­லாளர்  காரி­யா­ல­யத்­துக்கு பேச்­சு­வார்த்­தை­யொன்­றுக்கு சமு­க­ம­ளிக்­கும்­படி  அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

காணி சுவீ­க­ரிப்பு மற்றும் மாற்றுக் காணிகள் வழங்கல் தொடர்­பாக காணிச் சொந்­தக்­கா­ரர்கள் இரு­வ­ரு­டனும் உதவி காணி  ஆணை­யாளர் பேச்­சு­வார்த்தை நடத்த ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் குறிப்­பிட்ட இரு­வரும் அங்கு செல்­ல­வில்லை.
அவர்கள் வீடு­களில் இல்லை. வெளியில் சென்­றி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­ட­தாக இறக்­காமம் பிர­தேச செய­லாளர் எம்.எம்.நஸீர் தெரி­வித்தார். மீண்டும் அவர்­க­ளுக்கு பதி­வுத்­தபால் மூலம்  கடி­தங்கள் அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். 

விகா­ரைக்­கான காணி அள­வீடு 
கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற கூட்­டத்­தி­னை­ய­டுத்து  மறு­தினம் கடந்த புதன்­கி­ழமை மாயக்­கல்லி மலை­ய­டி­வார காணி அள­வீடு ஆரம்­பிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

புதன்­கி­ழமை காலை இறக்­காமம் பிர­தேச  செய­ல­கத்­துக்கு திடீ­ரென வரு­கை­தந்த  மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் எஸ்.குண­சே­கர இறக்­காமம் பிர­தேச செய­லாளர் எம்.எம்.நஸீ­ருடன் கலந்­து­ரை­யா­டிய பின்பு நில அளவைத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளினால் புதன்­கி­ழமை காணி அள­வீ­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 

முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான 2 ½  ஏக்கர் காணி பௌத்த விகாரை அமைப்­ப­தற்­காக  அள­வீடு செய்­யப்­பட்டு எல்­லை­யி­டப்­பட்­டுள்­ளன. அம்­பாறை மேல­திக மாவட்ட நீதி­மன்றம் எதிர்­வரும்  மே மாதம் 17 ஆம் திகதி வரை குறிப்­பிட்ட மாயக்­கல்லி மலைப் பிர­தே­சத்­திற்குள் உள்­நு­ழை­ய கூடாது என  இடைக்­கால  தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்ள  நிலை­யிலே  காணி அள­வீ­டுகள் இடம்­பெற்­றுள்­ளன. 

 காணி அள­வீடு நடை­பெறும் போது இறக்­காமம் பிர­தேச அபி­வி­ருத்திக் குழுத் தலைவர்  பொறி­யி­ய­லாளர் எஸ்.ஐ.மன்சூர் காணிச் சொந்­தக்­கா­ரர்கள்  மற்றும் பொது­மக்கள் சார்­பாக  பலத்த எதிர்ப்­பினைத் தெரி­வித்தார். அங்கு சமு­க­ம­ளித்­தி­ருந்த பொலிஸ்  உயர் அதி­கா­ரி­களும்  நில அள­வை­யா­ளர்களும்  உயர் அதி­கா­ரி­களின்  பணிப்­பு­ரைக்­க­மை­யவே  காணி அள­வீடு  மேற்­கொள்­வ­தாகத் தெரி­வித்­தனர். நில அளவைத் திணைக்­கள பட  வரைபில் குறிப்­பிட்­ட­தற்­க­மை­வாக பிரிவு 52  தொடக்கம் 55 வரை (4 LOT) 2.5 ஏக்கர் காணி அள­வி­டப்­பட்டு  எல்­லை­கற்கள் பதிக்­கப்­பட்­டன. 

கிழக்கு மாகாண சபையில் அவ­சர பிரே­ரணை 
மாயக்­கல்லி மலையில் 06  மாதங்­க­ளுக்கு முன்பு  அமைக்­கப்­பட்ட புத்தர் சிலையும் அதன் அண்­மை­யி­லுள்ள  காணிப்­பி­ணக்­கு­களும் தொடர்­பாக கடந்த செவ்வாயன்று ஆம் திகதி நடை­பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் சபை உறுப்­பினர் ஆரிப் சம்­சு­தீ­னினால்  அவ­சர பிரே­ரணை  ஒன்று சமர்ப்­பிக்­கப்­பட்டு விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது. 

இவ்­வி­வ­கா­ரத்தை  ஆராய்­வ­தற்­காக கிழக்கு  முத­ல­மைச்சர் ஏ.நஸீர் அஹமட்  தலை­மையில்  குழு­வொன்றும் சபையால் நிய­மிக்­கப்­பட்­டது. இக்­கு­ழுவின் அங்­கத்­த­வர்­க­ளாக கிழக்கு மாகாண வீதி அபி­வி­ருத்தி, காணி மற்றும் காணி அபி­வி­ருத்தி அமைச்சர் ஆரி­ய­வதி கலப்­பதி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்­டா­யு­த­பாணி, மாகா­ண­சபை உறுப்­பினர் எம்.எஸ்.சுபைர் மற்றும் அம்­பாறை மாவட்­டத்தைச் சேர்ந்த அனைத்து மாகாண சபை  உறுப்­பி­னர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். குழு அவ­ச­ர­மாகக் கூடி ஆராய்ந்து அடுத்த சபை அமர்வு மே மாதம் 23 ஆம் திக­திக்கு முன்பு  அறிக்கை சமர்ப்­பிக்க  வேண்டும் எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

குழுவின்  கூட்­டத்­திற்கு அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர், இறக்­காமம் பிர­தேச செய­லாளர், மாகாண காணி ஆணை­யாளர், மாகாண காணி திணைக்­கள அதி­கா­ரிகள், இறக்­காமம் பிர­தேச சபை செயலாளர், அம்பாறை தொல்பொருள் திணைக்கள உதவி பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், தமண பொலிஸ்  நிலைய  பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர். 

எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது
கிழக்கு முதலமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு பொருத்தமான தீர்மானமொன்றினை மேற்கொள்ளும்வரை குறிப்பிட்ட இடத்தில் எந்தத் தரப்பினருக்கும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பில் அறிவித்து அவ்விடத்தில் எவ்வித நடவடிக்கைகளுக்கும் அனுமதிகள் வழங்கக்கூடாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதன்கிழமை மாயக்கல்லி மலையடிவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நில அளவீடுகள் பூர்த்தியானதன் பின்பே குறிப்பிட்ட அறிவித்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம்
மாயக்­கல்லி மலை விவ­கா­ரத்தில் தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் தெரி­வித்­துள்ள கருத்­துகள் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். நாட்­டி­லுள்ள தொல்­பொ­ருட்­களை சாதி, சமய பேத­மின்றி பாது­காப்­பதே தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் கடமை. தொல்­பொருள் பிர­தே­சங்­களில் மதஸ்­த­லங்­களை நிறுவ வேண்டும் என தொல்­பொருள் சட்டம் தெரி­விக்­க­வில்லை.

மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் தொல்­பொருள் பிர­தே­சத்தை மாத்­திரம் நாம் எல்­லை­யிட்டு பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். சிலை வைப்­ப­தற்கும் அத்­தோடு விகாரை அமைக்கும் முயற்­சிக்கும் எமக்கும் எவ்­வித தொடர்­பு­க­ளு­மில்லை. இவ்­வி­ட­யத்தில் மதங்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டுகள் உரு­வா­வது நல்­ல­தல்ல என அவர் தெரி­வித்­துள்ளார்.

இது போன்ற கருத்­தி­னையே தொல்­பொருள் திணைக்­கள உத­விப்­ப­ணிப்­பா­ளர் நீல்மல்கொடவும் தெரி­வித்­துள்ளார். 

“தொல்­பொருள் திணைக்­களம் மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் தொல்­பொருள் பகு­தி­களை எல்­லை­யிட்டு சுற்றி வேலி­யிட்­டுள்­ளது. இந்த எல்­லைக்குள் எவ்­வித நிர்­மாணப் பணி­க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. காணி ஆணை­யா­ள­ரினால் எல்­லை­யி­டப்­பட்டு வழங்­கப்­படும் பகு­தி­யிலே நிர்­மாணப் பணி­களை முன்­னெ­டுக்க முடியும்” என்று தெரி­வித்­துள்ளார்.

அம்­ப­கஹபிட்­டியே  சீல­ரத்ன தேரர்
தீக­பாவி மாணிக்­க­மடு பரி­வார சைத்­திய ரஜ­மகா விகா­ரையின் மகா­நா­யக்க அம்­ப­கஹ­பிட்­டியே சீல­ரத்ன தேரர் எதிர்­வரும் மே மாதம் 1 ஆம் திகதி விகாரை நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்­கான பூஜை வழி­பா­டு­க­ளையும் மத வழி­பா­டு­க­ளையும் நடத்­த­வுள்­ள­தாக சூளு­ரைத்­துள்ளார். அர­சாங்க அதி­பரின் எழுத்து மூல உத்­த­ரவு கிடைத்­ததும் விகாரை நிர்­மா­ணப்­ப­ணிகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் தெரி­வித்­துள்ளார்.

இது பௌத்த நாடு. பௌத்த மக்­க­ளுக்கு உரித்­தான  காணியில் விகா­ரை­ய­மைக்க எவரும் எதிர்ப்பு தெரி­விக்க  முடி­யாது எனவும் அதி­கார தோர­ணையில்  தெரி­வித்­துள்ளார்.

முஸ்­லிம்­களில் அடிப்­படை வாத குழு­வி­னரே மதஸ்­த­லங்கள் நிறு­வு­வதை எதிர்க்­கின்­றனர். முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் தமது அர­சியல் சுய­நலம் கருதி நல்­லவோர் காரி­யத்தை தவ­றா­ன­தாகச் சித்­தி­ரிக்­கின்­றனர்.   கிழக்கில் முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் விட்டுக் கொடுப்­புடன் இன நல்­லு­ற­வுடன் வாழ வேண்­டு­மென்­ப­தையே நாம் விரும்­பு­கிறோம்.

மதஸ்­த­லங்கள் தீவி­ர­வா­தத்தைப் பரப்­பு­வ­தற்­காக நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தில்லை. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. இப்­பி­ர­தேசம் பௌத்­தர்­களின் வர­லாற்றுப் பிர­தே­ச­மென்­பதை முஸ்­லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

மு.கா.வின் முன்னாள் பொதுச் செய­லாளர்
மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிக்­கப்­பட்டு விகாரை நிர்­மா­ணிப்­ப­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் பொதுச் செய­லளர் எம்.ரி. ஹசன் அலி வன்­மை­யாகக் கண்­டித்­துள்ளார்.

கிழக்கில் பல பிர­தே­சங்­களில் முஸ்லிம் காணிகள் தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளன. மாயக்­கல்லி மலை­ய­டி­வாரம் போல் எதிர்­கா­லத்தில் பல காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு இதுவே ஆரம்­ப­மாக அமை­யலாம்.

தொல்­பொருள் பிர­தேசம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பதில் எமக்கு மாற்­றுக்­க­ருத்து இல்லை. என்­றாலும் மத ரீதி­யான காணி ஆக்­கி­ர­மிப்­பு­க­ளுக்கு இட­ம­ளிக்கக் கூடாது இவ்­வா­றான செயல்கள் இனி மேல் இடம்­பெ­றக்­கூ­டா­தென்றே முன்­னைய மஹிந்த ராஜபக் ஷ வின் அர­சாங்­கத்தை முஸ்­லிம்கள் எதிர்த்­தார்கள். தோல்­வி­ய­டையச் செய்­வதில் பங்­கு­தா­ரர்கள் ஆனார்கள்.

என்­றாலும் முஸ்­லிம்கள் தொடர்பில் கடந்த கால அர­சாங்­கத்­துக்கும் இன்­றைய அர­சாங்­கத்­துக்கும் எந்த வேறு­பா­டு­க­ளு­மில்லை என்று ஹசன் அலி தெரி­வித்­துள்ளார்.

கிழக்கு மாகாண எதிர்க்­கட்சித் தலைவர்
கிழக்கு மாகாண சபை அமர்வில் எதிர்க்­கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமா லெப்பை மாயக்­கல்லி மலை விவ­காரம் சிங்­கள, முஸ்லிம் உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது என்று தெரி­வித்­துள்ளார். உண்­மையில் தற்­போது அப்­பி­ர­தே­சத்தில் சிங்­கள, முஸ்லிம் மக்­களின் நல்­லு­றவில் விரி­சல்கள் ஆரம்­பித்­துள்­ளன.

மாயக்­கல்லி மலையில் பல­வந்­த­மாக புத்தர் சிலை­யொன்­றினை நிறு­வி­விட்டு அம்­மலை அரு­கி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களில் அத்­து­மீறி பௌத்த விகாரை அமைக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­விட்டு சிங்­கள ஊட­கங்­களில் மாணிக்­க­மடு பிர­தேத்தில் பௌத்த விகாரை அமைப்­ப­தற்கு முஸ்­லிம்கள் எதிர்ப்­பினை தெரி­விப்­ப­தாக தவ­றான செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் இந் நாட்டில் வாழும் முஸ்லிம்– சிங்­கள சமூ­கங்­க­ளுக்கு இடையில் மோதலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­யாகும். சிங்­கள மக்கள் பௌத்த விகாரை அமைப்­ப­தற்கு முஸ்லிம் மக்கள் ஒரு போதும் எதிர்ப்­பினைத் தெரி­விக்­க­வில்லை. ஆனால் தொல்­பொருள் பிர­தேசம் எனக்­கூறி கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் பூர்­வீகக் காணிகள் அப­க­ரிக்­கப்­ப­டக்­கூ­டாது. முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான பூர்­வீகக் காணியில் அத்­து­மீறி பௌத்த விகாரை அமைப்­ப­தையே மக்கள் எதிர்க்­கி­றார்கள் என்று தெரி­வித்­துள்­ளமை நோக்­கப்­பா­லது.

 சுமுகத் தீர்வு கிட்­டுமா?
மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் விகாரை அமைத்தே தீரு­வது என பௌத்த பேரி­ன­வா­திகள் சூளு­ரைத்­துள்­ளார்கள். அதற்­கான நட­வ­டிக்­கைகள் மும்­மு­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதே­வேளை முஸ்­லிம்கள் தமது பூர்­வீகக் காணி­களை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது என வாதி­டு­கி­றார்கள்.

பௌத்­தர்­களே குடி­யி­ருக்­காத பகு­தியில் எதற்கு விகா­ரைகள்? உண்­மைதான் நாட்டில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வசிக்கும் கிரா­மங்­களில், நக­ரங்­களில் உள்ள பள்­ளி­வா­சல்­களை புனர்நிர்மாணம் செய்வதற்குக் கூட எதிர்ப்பு தெரிவித்து பேரினவாதிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.

தம்புள்ளை பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணி வழங்குவதற்குக் கூட எத்தனையோ இழுத்தடிப்புகள். வருடங்கள் 5 கடந்தும் எதுவும் நடைபெறவில்லை. அனைத்தும் மந்த கதியில் நகர்கின்றன.

இந்நிலையில் மாயக்கல்லியில் ஏன் இந்த அவசரம். இரண்டு தினங்களில் காணி அளவீடுகள் பூர்த்தியாகி சில தினங்களில் நிர்மாணப் பணிகளுக்கான பூஜை வழிபாடுகளும் நடைபெறவுள்ளன.

இதுதான் உண்மை. பாராளுமன்றத்தில் எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது பிரதிநிதிகள் 21 பேரும் என்ன செய்யப்போகிறார்கள். சமூகம் தீர்வுகளுக்காக காத்துக் கிடக்கிறது.

Comments