மீதொட்டமுல்ல விவகாரம் : பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்க நடவடிக்கை
பாதிக்கப்பட்டோருக்கு வீடு வழங்கவும் அரசாங்கம் திட்டம்
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய, சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 100,000 ரூபாவும், உடமைகள் சேதமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு, அதிகபட்சமாக 2.5 மில்லியன் ரூபா வரையிலும் வழங்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அரச நிதி கிட்டுமாயின் புதிய வீடுகளை வழங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மீதொட்டமுல்லயில் குப்பைமேடு சரிந்து விழுந்தமை தொடர்பாக வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மீதொட்டமுல்லயில் குப்பைமேடு தொடர்பில் இந்த குப்பைகளை அகற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வந்த நிலையில் எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் இடபெற்றுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
அதேபோல் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட காணிகளில் குப்பைகளை கொட்டப்படுவதை தடைசெய்ய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக எந்தவொரு உள்ளூராட்சி மன்ற நிறுவனத்திற்கு அல்லது அரச நிறுவனங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு காணி தேவைப்படுமாயின் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ள மானியங்களை பயன்படுத்தி அதற்கான கொடுப்பனவுகளை செலுத்தவேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான அரச நிதி கிட்டுமாயின் புதிய வீடுகளை வழங்குவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் மீதொட்டமுல்ல குப்பைமேடு தொடர்பாக ஆவணமொன்று பெருநகர மற்றும் மேல்மாகாண அமைச்சினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மீதொட்டமுல்ல குப்பைமேட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை இடைநிறுத்துவதற்கும் இதற்கான மாற்று இடத்தை அடையாளம் காண்பதற்கும் கொழும்பு மாநகர சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments
Post a Comment