விஹாரையோ, புத்தர் சிலையோ அமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது - மஹிந்த
சோழ மன்னர்கள் இலங்கையை ஆக்கிரமித்த காலகட்டத்தில் பௌத்த தர்மத்தை அழிக்க முனைந்தனர். ஆனால் எமது சந்ததியினர் தர்மத்தை பாதுகாத்தனர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ இன்று விஹாரையோ புத்தர் சிலையோ அமைக்க முடியாத நிலை தோன்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காரணம் அதற்கு சீமெந்து எங்கிருந்து கிடைத்தது என விசாரிக்கும் ஆட்சியாளர்கள் நாட்டில் உள்ளனர். இவர்களும் தர்மத்திற்கு எதிராகவே செயற்படுகிறார்கள் என்றும் மஹிந்த ராஜபக் ஷ கூறியுள்ளார்.
பெலியத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இலங்கை இன்று போதை பொருட்களை விநியோகிக்கும் மத்திய நிலையமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் கப்பல்களிலேயே வருகின்றன.
இன்று இலங்கையில் ஒரு புத்தர் சிலையை அமைக்க முடியவில்லை. விஹாரையை அமைக்க முடியவில்லை. அப்படி அமைத்தால் அதற்கு சீமெந்து எங்கிருந்து கிடைத்தது என ரகசிய பொலிஸார் விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமே இதனை மேற்கொள்கின்றது.
அரசியல்வாதிகளை அடக்கு முறைக்கு உள்ளாக்க முடியும். ஆனால் மதத்தையும் தர்மத்தையும் விஹாரையையும் அடக்கு முறைக்கு உள்ளாக்க முடியாது. அவ்வாறு அடக்கு முறைக்கு உள்ளாக்க முனைந்தால் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
அண்மையில் அரச மரமொன்றை வெட்டி சாய்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதனை வழிப்டுபவோரின் எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்பட்டது.
சோழ மன்னர்கள் இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பௌத்த தர்மத்தை அழிக்க முனைந்தனர். ஆனால் எம்மவர்கள் தர்மத்தை பாதுகாத்துள்ளனர்.எமது பிள்ளைகள் நல்ல வழியில் வாழ வேண்டும். அதற்கு எமது தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும்.
பழிவாங்கல் இன்றைய ஆட்சியாளர்களின் கொள்கையாகியுள்ளது.நாட்டில் போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளன. குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.
அண்மையில் சிறைக் கைதிகள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு நாட்டின் பாதுகாப்பும் சீரழிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment