வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு துரிதமான தீர்வுகள் : ஜனாதிபதி


வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

முறையான மதிப்பீடுகளோ அல்லது திட்டமிடலோ இன்றி முறையற்ற விதத்தில் கடந்த காலத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தமையினால் தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையான திட்டத்துடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

திருகோணமலை மெக்ஹெய்சர் விளையாட்டரங்கில் நடைபெறும் 'தேசிய யொவுன் புரய 2017" நிகழ்வின் இன்றைய நாளுக்கான நிறைவு வைபவத்தின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'எதிர்காலம் உதயமாகியது" எனும் தொனிப்பொருளுடன் சுமார் ஆறாயிரம் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலுடன் கடந்த 29 ஆம் திகதி யொவுன் புரய நிகழ்வுகள்  திருகோணமலையில் ஆரம்பமாகின.

இன்றைய தினத்தின் நிறைவு வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் ஒன்றினை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு அரசாங்கத்தையே சாரும் என்றும் எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் நாட்டிற்கு தேவையான அபிவிருத்தியுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இதன்போது இளைஞர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்களது பலத்தையும், ஆக்கத்திறனையும் நாட்டின் எதிர்காலத்திற்காக பயனுள்ள விதத்தில் உபயோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மீண்டும் நாட்டில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான தேவையை ஏற்படுத்தாதிருப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி இளைஞர்களுக்கு உரிய சமூக அந்தஸ்தையும், அவர்கள் செல்லவேண்டிய பாதையையும் அமைத்துக் கொடுக்கும் பணியை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் குறிப்பிட்டார். 

எமது இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதற்காக அரசியல்வாதிகளின் பின்னால் சென்ற யுகம் முடிவுறுத்தப்பட்டு அவர்களது அறிவு, ஆற்றல்கள் மற்றும் ஆக்கத்திறனின் ஊடாக அவர்களுக்கான சமூகத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி இளைஞர்களின் அறிவையும், பலத்தையும் உரிய நேரத்தில் நாட்டின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளைக் கண்டறிந்து தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான பெருமளவு பங்களிப்பை வழங்கக்கூடிய இளைஞர்களை தேசிய உற்பத்தி நடைமுறைகளை வலுப்படுத்தி, ஏற்றுமதிகளை அதிகரித்து, தேசிய பொருளாதார இலக்குகளை வெற்றி கொள்வதற்காக இணைத்துக் கொள்வதற்கான திட்டங்கள் வினைத்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

யொவுன் புரவை பார்வையிட்ட ஜனாதிபதி இளைஞர் யுவதிகளுடன் சினேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 

சிறந்த மாவட்டத்திற்கான பரிசும் இதன்போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாச, தயா கமகே, இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, முதலமைச்சர் நசீர் அஹமட், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் எரந்த வெலிஅங்கே உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.

Comments