தேர்தல் தாமதமாவதற்கு மஹிந்த அரசே காரணம்
முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
கடந்த அரசாங்கத்தினால் எல்லை நிர்ணய செயற்பாடுகள் முறையாக நடந்திருக்குமாயின் தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தலை காலந்தாழ்த்த வேண்டிய தேவை நல்லாட்சிக்கு ஏற்பட்டிருக்காது, தேர்தல் தாமதமாவதற்கு மஹிந்த அரசாங்கமே காரணம் என ஐக்கிய தேசிய பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணை தலைவருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அத்துடன் முன்னைய ஆட்சிக்காலத்தின் போது அதிகமான தொகுதிகள் சிறிலங்கா சுதந்திர கட்சியின் வெற்றிக்கு சாதகமான வகையிலேயே எல்லை பிரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஏற்பட்டிருக்கும் காலதாமதத்தினால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்றங்களினது தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிப்பதில் ஏற்பட்ட காலதாமதமே அத்தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதில் அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் எல்லை பகுப்பு செயற்பாடுகள் முறையாக நடந்திருக்குமாயின் தற்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தலை காலந்தாழ்த்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஒருபோதும் ஏற்பட்டிருக்காது. மேலும் கடந்த அரசாங்கம் அதிகாரத்திலிருந்த போது அதிகமான தொகுதிகள் சிறிலங்கா சுதந்திர கட்சியின் வெற்றிக்கு சாதகமான வகையிலேயே வகுக்கப்பட்டிருந்தது. இச்செயற்பாடானது கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வழிவகுத்திருந்தது.
இந்நிலையிலேயே புதிதாக மீண்டும் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இருப்பினும் புதிய முறையில் தேர்தல் நடத்தப்பட்டால் தங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும் என சிறுபாண்மை கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதால் சகல கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முன்வைக்கப்படும் தேர்தல் முறை அமைய வேண்டுமென்பதில் ஐக்கிய தேசிய கட்சி உறுதியானதொரு நிலைப்பாட்டுடன் இருக்கின்றது. இவ்வாறான காரணங்களே தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கான காரணமே தவிர தேர்தல் வெற்றி மீது எமக்கு எவ்வித அச்சமும் இல்லை.
குறித்த தேர்தலில் ஏற்பட்டிருக்கும் காலதாமதத்தின் அடிப்படைகளை தெரிந்துக்கொள்ளாதவர்கள் தேர்தல் வெற்றி மீது அரசாங்கத்துக்கு இருக்கும் அச்சமே அரசாங்கத்தினால் தொடர்ந்தும் தேர்தல்கள் புறக்கணிக்கப்படுவதாக எம்மீது பலர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் அறிக்கை தொடர்பில் அதன் குறைநிறைகள் தொடர்ந்தும் ஆராயப்பட்டுவருகின்றது.
எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லை தற்போது நிறைவடைந்திருக்கும் நிலையில் விரைவில் அத்தேர்தலை நடைமுறையிலிருக்கும் விருப்பு வாக்கு முறையினூடாக நடத்துவதற்கும் அடுத்த தேர்தலில் இருந்து புதிய தேர்தல் முறைகளை கையாள்வது குறித்தும் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Comments
Post a Comment