மாணிக்கமடு பௌத்த விகாரைக்கு எதிராக கல்முனை, சாய்ந்தமருது நகரங்களிலும் ஆர்ப்பாட்ட பேரணி
(அஸ்லம் எஸ்.மௌலானா)
இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த சிலை நிறுவப்பட்டுள்ளதைக் கண்டித்தும் அங்கு விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து கல்முனை மற்றும் சாய்ந்தமருது நகரங்களிலும் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன.
இதன்போது பல்வேறு கோஷங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஜூம்ஆப் பள்ளிவாசல்கள்களின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் அவ்வப் பிரதேச செயலகங்கள் வரை சென்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்களை கையளித்தனர்.
கல்முனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், தேசமான்ய ஜௌபர் ஹாஜியார் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்ததுடன் பிரதேச செயலாளர் எம்.எச் முஹம்மட் கனியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
சாய்ந்தமருது நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.சமால்தீன், அப்துல் மஜீத், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ.பாவா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அங்கு உதவிப் பிரதேச செயலாளர் முஹம்மட் றிகாஸிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.





Comments
Post a Comment