வில்பத்து விவகாரம் முஸ்லிம் எம்.பி.க்கள் உலமா சபை சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாதுகாக்கப்பட்ட வன பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு கொழும்பில் நடத்தவுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தியின் தலைமையில் உலமா சபையின் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் ஜனாதிபதியின் வன பிரகடன வர்த்தமானி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இச்சந்திப்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் துறைசார் நிபுணர்கள் என்போர் கலந்து கொள்ளவுள்ளனர்.வில்பத்து விவகாரம் உட்பட சமூகம் சார்ந்த விடயங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்தவுள்ளது.
அனைவரும் ஒன்றுபடுவதன் மூலம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்பதனையும் தெளிவூட்டவுள்ளது.
நிகழ்வில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்வும், இதனை சட்டரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் விளக்கமளிக்கவுள்ளனர்.


Comments
Post a Comment