இன ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு ஆன்மீகத் தலைவர்களே முக்கிய கருவிகள்” - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
“இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் ஊக்குவிப்பதற்கு ஆன்மீகத் தலைவர்களே சிறந்த கருவிகளாவர். திரிபிடகம், பைபிள், குர்ஆன், பகவத் கீதை என அனைத்துச் சமயங்களினது புனித நூல்களிலும் ஒற்றுமைக்கான வழிகாட்டல்கள் செறிந்திருக்கின்றன. எனவே, புத்த பிக்குகளும் ஏனைய ஆன்மீகத் தலைவர்களும் அந்நூலின் தத்துவங்களை மக்கள் கடைப்பிடிக்க வழி செய்ய வேண்டும்” என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன, மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தங்கொட்டுவை, சிங்கக்குளியவில் நடைபெற்ற ‘எரபுது வசந்தம்’ என்ற விழாவில் பேசும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசும்போது தெரிவித்ததாவது:
“ஆதிகாலந்தொட்டே பல்லின மக்களின் ஒற்றுமையுணர்வின் மீது கட்டப்பட்டதே இலங்கையின் வரலாறு. தற்போதைய சூழலில் இலங்கையில் ஒற்றுமையும் அமைதியும் பலப்படுத்துவதற்கு அனைத்துச் சமூகத்தினரும் ‘இலங்கை’ என்ற ஒற்றைக் குடையின்கீழ் ஒன்றிணைய வேண்டும்.
“மக்களிடையேயான ஒற்றுமையைக் குலைப்பதற்குச் சில நாச சக்திகள் முயன்று வருகின்றன. எனினும், அதற்கு இடங்கொடுக்காமல், எல்லோரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயற்பட்டாலே எதிர்கால இலங்கை சௌஜன்யம் மிக்கதாக விளங்கும்.”


Comments
Post a Comment