ஐந்து மாத காலப்பகுதிக்குள் 42 141 டெங்கு நோயாளர்கள் : 90 பேர் உயிரிழப்பு
நாடளாவிய ரீதியில் கடந்த 5 மாத காலப்பகுதிக்குள் 42141 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் இந்நோய்த்தாக்கத்துக்குள்ளாகி 90 பேர் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 42141 பேர் டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட 90 பேர் இதுவரையில் இறந்துள்ளனர். அதனடிப்படையில் இந்நோயினால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 9218 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 5485 பேரும் காலி மாவட்டத்தில் 1856 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2410 பேரும் திருக்கோணமலையில் 4095 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். அத்துடன் களுத்துறையில் 2471 பேரும் குருணாகலையில் 1848 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டு சிகிச்சைப்பெற்றுள்ளனர்.
இதேவேளை கடந்த வருடத்தின் முற்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களை காட்டிலும் இம்முறை அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 16ஆயிரத்து 500 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமைச்சினால் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு டெங்கு ஒழிப்பு விசேட பிரிவு அதிகாரிகள் உட்பட பொலிஸாரும் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் தொடர்ந்தும் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசணைனை பெற்றுக்கொள்ளுமாறும், சுற்றுப்புறச்சூழலில் டெங்கு பரவும் காரணிகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் டெங்கு நோய் பரவும் வகையிலான சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட வுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


Comments
Post a Comment