அம்பாறையில் 86 இடங்கள் பறிபோகும் அபாயம்
லரீப் சுலைமான்
இறக்காமம், மாயக்கல்லி சிலை வைப்பு விவகாரம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனைக்கும் காரணம் தீகவாபி பற்றிய அச்சுறுத்தலாகும். பேரினவாதம் இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்குவதில் எவ்வளவு தூரத்திற்கு சிந்திக்கிறது என்பதற்கு, 2014 ஒக்டோபர் 10 ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் அறிவிப்புச் செய்துள்ள வர்த்தமானி அறிவித்தல் தகுந்த சான்று.
காலணித்துவவாதிகளிடமிருந்து கைமாற்றப்பட்ட ஜனநாயகத்தின் சூடு தணிவதற்குள் 1950 ஆம் ஆண்டு டீ.எஸ். சேனநாயக்க அல்லை, கந்தளாய், மொரவெவ, பதவியா, கல்லோயா முதலான சிங்களக் குடியேற்றங்களை வடகிழக்கில் அறிமுகப்படுத்தினார். கிழக்கில் ஏற்படுத்திய கல்லோயாத் திட்டமும் அதையடுத்து வந்த ஆட்சியாளர்கள் தெஹியத்த கண்டி, பதியத்தலாவை போன்ற சிங்களப் பிரதேசங்களை அம்பாறையுடன் இணைத்ததால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஆகியன எவ்வளவு தூரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பதை சிந்திக்கும்போது, எதிர்காலம் குறித்த பீதி இப்போதுள்ள சிறுபிள்ளைகளையும் நிலைகுலையச் செய்துள்ளது.
யுத்தம் முடிவடைந்து மக்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சு விடும் இத்தருணத்தில் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம், தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன. நாட்டில் யுத்தப் பயங்கரவாதம் முற்றுப்பெற்ற சமயத்தில் அப்போதிருந்த மஹிந்த அரசாங்கம் இராணுவ வீரர்களை நாடுபூராகவுமுள்ள சிறுபான்மைப் பிரதேசங்களுக்குள் துவிச்சக்கர வண்டிகள் மூலம் நுழைய வைத்து, அரச காணிகள், உறுதியுள்ள காணிகள், உறுதியில்லாத காணிகள், தொல்பொருளுக்குரிய இடங்கள்… என்று தங்களுக்குச் சாதகமாக செயலாற்றக் கூடிய அத்தனை தரவுகளையும் பெற்றுள்ளது. இதற்கு, 2014 ஒக்டோபர் 10 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள, 188 ஆம் அத்தியாய தொல்பொருள் கட்டளைச் சட்டம் தகுந்த ஆதாரமாகும்.
2014 ஒக்டோபர் 10 வர்த்தமானி அறிவித்தல்
குறித்த வர்த்தமானி, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான 246 இடங்கள் பற்றி அறிவிக்கிறது. தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய கையொப்பமிட்டு, மஹிந்த அரசாங்கம் அறிவிப்புச் செய்துள்ள இந்த வர்த்தமானியில், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும், இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும், ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 6 இடங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 11 இடங்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும், கல்முனை பிரதேசத்தில் 2 இடங்களுமாக முஸ்லிம், தமிழர்களுக்குரிய 86 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தமானியில் சிங்களப் பிரதேசங்களான பதியத்தலாவை, லகுகல, தமண, அம்பாறை, உகன, மகாஓயா, தெஹியத்த கண்டி முதலான இடங்களும் உள்வாங்கப்பட்டிருந்தாலும் இப்பிரதேசங்களுக்கு குறிப்பிடும்படியான எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பிரச்சினைக்குரிய இடங்களாக குறிவைக்கப்படுவது முஸ்லிம், தமிழர்களுக்குரிய பூர்வீக நிலங்கள்தான் என்பதை இன்று வடகிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்களைக் கொண்டு உறுதியாகக் கூற முடியும்.
இறக்காமம் சிலைப் பதிப்புக்கு சூத்திரதாரியாக செயற்பட்டதாகக் கூறப்படும் அமைச்சர் தயாகமகே விடுத்துள்ள அறிக்கையொன்றில், கல்முனை தொடக்கம் பொத்துவில் வரைக்கும் தீகவாபிக்கு சொந்தமாக 12,000 ஏக்கர் காணிகள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.
தொல்பொருள் திணைக்களம் என்ன சொல்கிறது?
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகமான தொல்பொருள் திணைக்களம் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் பொதுவானதாகும். பல்லினங்கள் வாழ்கின்ற இலங்கையில் அவ்வினங்களைச் சேர்ந்த பல மன்னர்களும் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். சிங்கள மன்னர்கள் முதற்கொண்டு, எல்லாளன் போன்ற தமிழ் மன்னன், சிற்றரசைக் கொண்ட மாகான் ராசா போன்ற முஸ்லிம் குறுநில மன்னர்கள் வரைக்கும் இலங்கையில் எந்த இனமும் குறிப்பிட்டு உரிமை கோர முடியாதவாறு மன்னர்கள் ஆண்டுள்ளார்கள்.
எனவே, இவர்களது ஆட்சிபீடங்கள், அவர்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள், உபகரணங்கள், வாழிடங்கள், தளவாய்கள், கருவிகள் எல்லாமே பாதுகாக்கப்பட வேண்டியவை. இதற்காகத்தான் இலங்கையில் தொல்பொருள் திணைக்களம் ஒன்றை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆனால், இங்கு விநோதமானதும் அதிர்ச்சிக்குரியதுமான விடயம்தான் இவ்வாறான இடங்களை பௌத்த மதத்திற்குரிய வணக்கஸ்தலங்களாக மாற்றும் சங்கதி. இது எப்படி சாத்தியமாகும்? இதை சாத்தியப்படுத்த தொல்பொருள் திணைக்களம் எப்படி அனுமதிக்கிறது? தொல்பொருளுக்கென்று பிரத்தியேக சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டத்தை மீறி எப்படிச் செயற்பட முடியும்? இறக்காமம் சிலை வைப்புச் சம்பவத்திலும் இந்த தொல்பொருள் திணைக்களத்தின் சட்டம் மீறப்பட்டுள்ளமை கண்கூடு. இது குறித்து வெளியிட்டுள்ள தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரின் கருத்து மிக முக்கியமானதாகும்.
‘நாட்டிலுள்ள தொல்பொருள்களை சாதி, சமய, பேதமின்றி பாதுகாப்பது தொல்பொருள் திணைக்களத்தின் கடமையாகும். தொல்பொருள் பிரதேசங்களில் மதஸ்தலங்களை நிறுவ வேண்டும் என தொல்பொருள் சட்டம் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதோடு இறக்காமம் மாயக்கல்லி என்ற இடத்தை மாத்திரம் எல்லையிட்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம். சிலை வைத்ததற்கும் விகாரை அமைப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சிக்கும் எமக்குமிடையில் எவ்விதத் தொடர்புமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தீகவாபி ஏப்பமிடும் அரக்கன்
தீகவாபியைப் பற்றி மகாவம்சம் பெருமிதப்படுத்திக் கூறியுள்ளது. 44 ஆண்டுகள் நீதி தவறா ஆட்சி நடத்திய எல்லாளனைக் கொன்று, புத்த மதத்திற்கு புத்துயிரளித்த துட்டகைமுனு, சதாதிஸ்ஸன் பற்றிய சம்பவத்தில் தீகவாபி முக்கிய இடமாக கருதப்படுகிறது. சிங்கள அப்பாவிச் சமூகத்தை விடவும் மாறி வருகின்ற ஆட்சியாளர்களும் இனவாதத்தை கக்குகின்ற கடும்போக்குவாதிகளும் இதில் ஊறிப்போன கருத்துடையவர்கள்.
வரலாற்றுப் புகழ்மிக்க சீகிரிய மற்றும் அனுராதபுரத்தைப் போன்று, பொலன்னறுவையைப் போன்று தென்கிழக்கில் தீகவாபியை பெரும் நகரமாக மாற்றுவது மட்டுமல்ல, அதைக் கொண்டுதான் வடக்கு, -கிழக்குக்கு பிரச்சினை பற்றிக் கூறுபவர்களுக்கும் தீர்க்கமான பதிலடி வழங்க முடியும் என சிங்கள மேலாதிக்க சக்திகள் நினைக்கின்றன. வெளிப்படையாகக் கூறுவதானால் பலமாக இருக்கின்ற சிறுபான்மைப் பிராந்தியம் (வடக்கும் கிழக்கும்) துண்டாடப்பட்டால்தான் தனது எதிரிகளை வீழ்த்த முடியும் என்று சிங்கள மேலாதிக்கவாதிகள் சிந்திக்கின்றனர். உலகத்திலேயே மிகப் பெரிய விகாரையாக தீகவாபி விகாரை இருக்கும் என்ற விடயமும் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்த ஆய்வுக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை என்பதும் இவ்விடத்தில் பதிவு செய்யப்பட வேண்டியுள்ள முக்கிய அம்சமாகும்.
இதற்காக என்னென்ன உரிமை மறுப்புகளைச் செய்தாவது முன்னேறுவதில் அம்பாறை கச்சேரி நிருவாகம் முதல் சில பௌத்த சமய, கடும்போக்கு அரசியல் அடிவருடிகள் வரைக்கும் முனைப்புடன் செயலாற்றி வருகிறார்கள். ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பது போன்று இதன் ஆரம்பப் படிகள்தான் இந்த புத்தர் சிலைகள், பின்னால் வரும் அதைச் சுற்றிய சிங்களக் குடியேற்றம். இது இலங்கை அரசியல் சாசனத்தில் எழுதப்படாத சட்டமாக இருந்தாலும் சிங்களப் பேரின தீய சக்திகளின் சாசனத்தில் எழுதப்பட்ட ஒரு சட்டமாகும்.
தமண, இறக்காமம், தீகவாபி, ஒலுவில், அஷ்ரப் நகர் போன்ற பிரதேசங்கள் நிலத் தொடர்புற்றிருப்பதன் அபாயத்தை எங்களில் எத்தனை பேரால் உணர முடிகிறது? இரண்டு வருடங்களுக்கு முன்னர் அம்பாறைக் கச்சேரியில் தமண, இறக்காமம், தீகவாபி போன்ற பிரதேசங்களை இணைப்பது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று, வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் அவ்விடயம் தள்ளிப் போடப்பட்டுள்ளமையும் மூடிமறைக்க வேண்டிய விடயமல்ல. லகுகலயுடன் பொத்துவில் இணைக்கப்படும் நீண்டகால முயற்சியும் காலப்போக்கில் வெற்றியளித்தால் தென்கிழக்கு அலகுக் கோரிக்கையெல்லாம் புஸ்வாணமாகிப் போகும்.
இறக்காமம் சிலைப் பதிப்பும் உரிமை மறுப்பும்
இலங்கையின் நீதி செத்துப்போயுள்ளது. இறக்காமம் சிலைப் பதிப்புக்கு எவ்வளவுக்கு உதவி வழங்க முடியுமோ அவ்வளவுக்கு அம்பாறை கச்சேரி நிருவாகம் வசதி செய்து கொடுத்துள்ளது. தொல்பொருள் பிரதேசங்களில் மதஸ்தலங்களை நிறுவ முடியாது எனக் குறிப்பிட்டுள்ள தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரால், சிலை பதிக்கப்பட்டு 6 மாதங்களாகின்றன, எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை ஒன்றுமில்லை.
சட்டத்தை மீறி சிலையைப் பதித்தவர்களை முன்னால் அமர வைத்து அம்பாறை கச்சேரி கூட்டம் நடத்துகிறது என்றால் இதை விடக் கேவலமான உரிமை மறுப்பை வேறு எங்கு சென்று தேட முடியும்? தீர்க்கமான முடிவு வரும் வரைக்கும் குறித்த பிரதேசத்திற்குள் யாரும் நுழையக் கூடாது என்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தும் ஞானசார தேரரும் அவரது பட்டாளங்களும் அத்துமீறி நுழையும் வரைக்கும், இதன் மறுதினம் நிலஅளவை நாயகம் உட்பிரவேசித்து விகாரையமைக்க 2.5 ஏக்கர் நில அளவை செய்யும் வரைக்கும் இலங்கையின் நீதிமன்றச் சட்டமும் பொலிஸ் திணைக்களச் சட்டமும் என்ன தூங்கிக் கொண்டிருந்தனவா?
இந்த நாடு எங்கு செல்கிறது? இதற்குத்தான் நல்லாட்சி என்று பெயரா? குறித்த வர்த்தமானியில் 54 ஆவது இடத்தில் மாயக்கல்லி விவகாரம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இறக்காமம் மாயக்கல்லி சிலைப் பதிப்புடன் மட்டும் இவர்களது திட்டம் நின்று விடப் போவதில்லை. இந்த விவகாரம் அவர்களுக்கு வெற்றியளிக்குமானால் அதையடுத்து இறக்காமத்திலுள்ள ஏனைய 12 இடங்களும் (வர்த்தமானியில் சொல்லப்பட்டுள்ள இடங்கள்) பறிபோகும் அபாயமேற்படாமல் போகும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
இறக்காமம் மக்கள் இரண்டு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். ஒன்று, பதிக்கப்பட்ட சிலையை அகற்றுவது. மற்றையது, அருகிலுள்ள காணிகளைப் பாதுகாப்பது. ஒருவேளை சிலையை அகற்றுவது மிகுந்த சவால்களுக்குள்ளாகி அது தோல்வியில் முடிந்து, எமது ஒட்டுமொத்த எதிர்ப்பின் மூலம் அருகிலுள்ள காணிகளைப் பாதுகாப்பதில் எமக்கு வெற்றி கிடைத்தாலும் அந்த வெற்றி அல்லது தீர்வென்பது தலை வலிக்குப் போடுகின்ற பனடோல் போன்றதாகும். காணிச் சுவீகரிப்பு உடன் நிறுத்தப்படலாம். ஆனால், மலையுச்சியில் சிலையொன்று இருக்கும் வரைக்கும் புற்றுநோய் போன்று அது தொடர் பிரச்சினையாகவே இருக்கப்போகிறது என்பது மிகவும் கசப்பான புரிதலாகும்.
இறக்காமம் அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலமில்லாத, சிங்கள பிரதேசங்களுக்கு மத்தியில் இருக்கின்ற ஒரு பரிதாபத்திற்குரிய பிரதேசம். வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள ஏனைய இடங்களும் கட்டம் கட்டமாக பறிபோகுமானால் (இவற்றில் ஒரு சில இடங்கள் ஏற்கனவே பறிபோயுள்ளன), 2014 வர்த்தமானியில் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள (திருக்கோவில், ஆலயடிவேம்பு, பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை) ஏனைய முஸ்லிம், தமிழ் பிரதேசங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புகள் உருவாகலாம். எனவே, இவ்விவகாரம் ஒரு மாகாணத்திற்குரிய பிரச்சினையாகக் கொள்ளப்படல் வேண்டும்.
இறக்காமம் சிலைப் பதிப்புக்கு எதிராக 2017.04.28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள அத்தனை முஸ்லிம் ஊர்மக்களும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தி ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்டியமை பிரதேசம் கடந்த எமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியாகும். இத்துடன் மாத்திரம் நின்று விடாது இவ்விடயத்தில் இறுதி முடிவு வரைக்கும் தொடராக பல முயற்சிகளைச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.
இவ்விடயம் குறித்து ஆழ்ந்த புலமைத்துவமுள்ள, தூரநோக்குள்ள ஆய்வுகளும் திட்டங்களும் வகுக்கப்படல் வேண்டும் புத்திஜீவிகள் சபையொன்று மாவட்ட ரீதியில் உருவாக்கப்பட வேண்டும்.
எங்களுக்கு அடுத்தவர்களது உயிர்களும் தேவையில்லை உடைமைகளும் தேவையில்லை. ஆனால், எங்களது உயிர், உடைமைகளைப் பாதுகாப்பது எமது கடமை. அது எங்களது ஈமானியக் கடமையும் கூட!


Comments
Post a Comment