ஜிஹாத் என்ற யுத்தம் ஏன்
ஜிஹாத் என்ற யுத்தம் ஏன் எதற்காக என்ற உண்மை நவீன முஸ்லிம் சமூகத்தில் மறக்கடிக்கப்பட்டு பிழையாக திசை திருப்பப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் ஜிஹாத் என்பது முஸ்லிம் நாடுகளில் தமக்குள் தாமே சண்டையிட்டுக்கொள்வதையே ஜிஹாதிய கொள்கையாக கொண்டிருப்பதை காண்கிறோம். இதன் காரணமாக மடத்தனமான இரத்தம் சிந்துதலை முஸ்லிம் சமூகத்துள் காண்கிறோம்.
நபியவர்கள் கற்றுத்தந்த ஜிஹாத் என்பது என்ன என்பதை நபியின் வழி காட்டலை வைத்து சிந்திக்காது சில அரை குறை உலமாக்களின் பிழையான சிந்தனை விளக்கங்களே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
நபியவர்கள் இஸ்லாத்தை மீண்டும் எத்தி வைத்த போது எத்தகைய ஆயுதத்தையும் தூக்காமல் பிரச்சாரம் செய்தார்கள். அத்துடன் ஆயுத ரீதியாக ஜிஹாத் செய்யாமலேயே மதீனாவை அன்பாலும் அழகிய கருத்தாலும் கைப்பற்றி ஆட்சியமைத்தார்கள். அந்த ஆட்சியில் அவர்கள் இருக்கும் நிலையில் நடை பெற்ற பல யுத்தங்கள் முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீது படையெடுத்ததன் காரணமாக ஏற்பட்டதே தவிர இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் ஊர்களை நோக்கி படையெடுப்பு செய்யவில்லை.
இஸ்லாமிய பிரச்சாரத்துக்கென சில தோழர்களை நபியவர்கள் முஸ்லிம் அல்லாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் போது ஆயுதத்தை முதலில் பாவிக்கும் படி கற்றுத்தரவில்லை. இஸ்லாத்தை எடுத்து அழகிய முறையில் சொல்லும்படியும் ஏற்காமல் சண்டைக்கு வந்தால் மட்டுமே ஜிஹாத் செய்யும் படியும் கற்றுக்கொடுத்தார்கள்.
இஸ்லாத்தை ஏற்காத ஒருவர் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வரும் போது அவர் வரி செலுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றியமை மூலம் இஸ்லாத்தை ஏற்காதவருக்கெதிராக யுத்தம் செய்வது கடமை அல்ல என்பதை காண்கிறோம்.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் அதே நேரம் அதற்காக சண்டைக்கு வராத பட்சத்தில் நாமாக சண்டைக்கு போகும் படி இஸ்லாம் வழி காட்டவில்லை.
இன்றைய முஸ்லிம் உலகை பார்க்கும் போது முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதற்கே ஜிஹாத் வலியுறுத்தப்பட்டது போல் விளங்கிக்கொள்ளப்பட்டுள்ளதை காண்கிறோம். ஒரு முஸ்லிமின் இரத்தத்தை ஓட்டுவதை ஹராம் என நபியவர்கள் வலியுறுத்தியும் கூட ஒரு முஸ்லிமின் இன்னொரு முஸ்லிமின் கருத்துக்கு முரண் பட்டவனாக தெரிந்தால் அவனுக்கு ஏதாவது பட்டப்பெயர் சூட்டி அவனுக்கெதிராக ஜிஹாத் பிரகடனப்படுத்தப்படும் முட்டாள்தனத்தை முஸ்லிம் உலகில் நவீன காலத்தில் காண்கிறோம்.
அதேவேளை முஸ்லிம் ஆட்சியாளர்கள் தவறு செய்வதால் அவர்களுக்கெதிராக ஆயுதம் தாங்கி ஜிஹாத் செய்யப்போகிறோம் என்பதும் நபியவர்களின் வழி காட்டலில் இல்லாததாகும் என்பதுடன் ஒரு முஸ்லிமுக்கெதிராக இக்காரணத்தை வைத்து போர் தொடுக்க முடியாது.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் பிழை செய்தால் அவர்களை ஜனநாயக ரீதியில் திருத்தவேண்டும் என்பதை சஹாபாக்கள் வழி முறையில் காண்கிறோம். இங்கு நான் ஜனநாயகம் என்பது கருத்து சுதந்திரம் என்ற அர்த்தத்தில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சியாளர் தவறு செய்தால் அதற்கெதிராக அழகிய முறையில் கருத்துக்களை முன் வைக்க வேண்டுமே தவிர ஆயுதம் ஏந்தும் வழிகாட்டலை இஸ்லாம் காட்டவில்லை. நபி மூசாவும் பிர் அவ்ன் முன்பாக இவ்வாறே செய்யும்படி இறைவனால் ஏவப்பட்டார்.
இரண்டாம் கலீபாவுக்குப்பின் ஆட்சிக்காக முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் போர் செய்தமை இஸ்லாமிய வரலாற்றில் ஒரு கசப்பான சம்பவமாகவே இன்னமும் பார்க்கப்படுகிறது.
ஆகவே ஜிஹாத் என்பது முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கிடையில் சண்டையிடுவதற்காக கடமையாக்கப்படவில்லை. அத்துடன் இஸ்லாத்தை முஸ்லிம் அல்லாத மக்களுக்கு எத்தி வைக்கவும் ஜிஹாத் கடமையாக்கப்படவில்லை. முஸ்லிம் ஆட்சியாளரை திருத்தவும் ஜிஹாத் கடமையல்ல.
ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டுமே ஜிஹாத் கடமையாகும். அதுதான் முஸ்லிம்களை நோக்கி முஸ்லிம் அல்லாதோரால் ஆயுதம் பிரயோகிக்கப்பட்டால் மட்டுமே ஜிஹாத் கடமையாகும். அதே போல் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் கூட ஜிஹாத் உடனடி கடமையல்ல. அதற்கு முன் இடம் பெயர்வு எனும் ஹிஜ்ரத்தே கடமையாகும். முஸ்லிம்கள் மிகச்சிறிய அளவில் வாழ்ந்தால் அந்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்து தமக்கு பாதுகாப்பான பகுதியை நோக்கி செல்வதே ஜிஹாதுக்கு முன்னரான கடமையாகும். நாம் இதனை முதலில் கைக்கொள்ள எம்மால் முடியுமா என பார்ப்போம். முடிந்தால் அதுவே நமக்கு வெற்றியாகும்.
– முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி


Comments
Post a Comment