பொலநறுவை - ஓனேகம முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்
பொதுபலசேனா அமைப்பு, சிங்கள ராவய மற்றும் சிங்கலே அபி அமைப்புகளை ஒன்றிணைத்துக் கொண்டே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது.
கடந்த காலங்களில் பொதுபலசேனா அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தனித்தே களமிறங்கியது. ஹலால் சான்றிதழ் விவகாரத்தில் தனித்துக் களமிறங்கி போராடியதை நாம் கண்டோம். அளுத்கம வன்செயல்களையும் பொதுபலசேனா அமைப்பு தனித்தே நெறிப்படுத்தியது. ஆனால் அண்மைய காலமாக ஞானசார தேரர், சிங்கள ராவய மற்றும் சிங்கலே அபி அமைப்புடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார்.
அவருடன் ஊடக மாநாடுகளில் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் சிங்கலே அபி அமைப்பின் செயலாளர் ஜம்புரேவில சந்தரத்ன தேரர் ஆகிய இருவரும் இருபக்கங்களிலும் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. அமைச்சர் மனோகணேசனுடன் ஞானசார தேரரின் நேரடிச் சந்திப்பின் போதும் இவர்களைக் காண முடிந்தது. கடந்த 14 ஆம் திகதி பொலநறுவை ஓனேகம, ஜலகெலும்மின்ன வனபாதுகாப்பு பிரதேசத்தை அண்மித்த பகுதிகளிலும் இவர்கள் மூவரையும் காண முடிந்தது.
பொலநறுவை, ஓனேகம பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்துமீறிப் பிரவேசித்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரும், சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் சிங்ஹலே அபி அமைப்பின் செயலாளர் ஜம்புரேவில சந்தரத்ன தேரர் உட்பட குழுவினர் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தனர்.
அப்பகுதி முஸ்லிம்களுக்குச் சொந்தமான 5 மாட்டுப் பண்ணைகளை தாக்கி சேதப்படுத்தியதுடன் மட்டுமல்லாது கொட்டில்களைக் கழற்றியெறிந்தனர். முஸ்லிம்கள் அவ்விடத்தைக் கைவிட்டு வெளியேற வேண்டுமெனவும் அச்சுறுத்தல் விடுத்தனர்.
முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அவதூறாகப் பேசினார்கள். அல்லாஹ்வை நிந்தித்தார்கள். முஸ்லிம்கள் சோமாவதி வனபாதுகாப்பு பிரதேச எல்லையில் அமைந்துள்ள ஜலகெலும்மின்ன வனபாதுகாப்பு பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சுமத்தினார்கள்.
பௌத்த சைத்திய நிர்மாணத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கற்களைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் மாட்டுத் தொழுவங்களை நிர்மாணித்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியதுடன் மட்டுமல்லாது ஞானசார தேரர் அல்லாஹ்வை கடுமையாகத் தூற்றியுள்ளார்.
ஞானசார தேரர் அல்லாஹ்வை தூற்றி அவதூறாகப் பேசியமைக்காக அவருக்கு எதிராக சிவில் சமூக செயற்பாட்டாளர் அன்வர் மனதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். ஞானசார தேரர், சிங்கள புராதன பிரதேசங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் வெஹரகொடல்ல என்ற சிங்கள புராதன இடம் இன்று பள்ளியகொடல்லவாக மாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.
சுமார் 50 பேர் கொண்ட இனவாத குழுவினர் இப்பிரதேசத்துக்குள் அத்துமீறி பிரவேசித்தே இந்த அடாவடித்தனங்களை முன்னெடுத்தனர். 4 மாட்டுப் பண்ணைகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சுமார் 2 இலட்சம் ரூபா வரையில் நஷ்டமேற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மகாவலி கங்கை கரையோர பிரதேசங்களில் முஸ்லிம்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது பிரதான வாழ்வாதாரம் விவசாயமும் பண்ணை வளர்ப்புமாகும். இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் 1927இலிருந்து வாழ்ந்து வருவதற்கு ஆதாரமாக அவர்களது காணி உறுதிகள் உள்ளன. மாட்டுப் பண்ணைகள் மற்றும் கொட்டில்கள் தாக்கி சேதப்படுத்தப்படும் போது பொலிஸார் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொலநறுவை, ஓனேகம பகுதிக்கான தனது விஜயம் தொடர்பாக ஞானசார தேரர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
பொலநறுவை, ஓனேகம பகுதியையடுத்துள்ள ஜலகெலும்மின்ன பகுதிக்கு நாம் சென்றோம். இது சோமாவதி வன பாதுகாப்பு பிரதேச எல்லையிலுள்ள வனபிரதேசமாகும். இது ஓர் புராதன தொல்பொருள் பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் 2000 ஏக்கர் நிலத்தை காடழித்து விவசாயம் செய்துள்ளார்கள்.
இப்பகுதியில் 21 பரிவார சைத்தியாக்கள் மற்றும் விகாரைகள், தொல்பொருள் வலயங்கள் அடங்கியுள்ளன. விவசாயம் என்ற போர்வையில் காடுகளை அழித்துள்ள முஸ்லிம்கள் சைத்தியாக்களை சிதைத்துள்ளார்கள். இந்த சைத்தியாக்கள் பொலநறுவை யுகத்தில் அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டவைகளாகும். சைத்தியாக்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்த கற்களைக் கழற்றி மாட்டுத் தொழுவங்களை அமைத்திருக்கிறார்கள்.
விகாரைகளைத் தோண்டி புதையல் தேடியிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் மாடுகளின் எலும்புகளே காணப்படுகின்றன. யுத்த காலத்தில் கூட இவ்வாறான அழிவுகள் ஏற்படவில்லை. காடுகள் அழிக்கப்படவில்லை. காட்டில் அன்று யானைகள் நிறைந்திருந்தன. தற்போது காடுகள் அழிக்கப்பட்டிருப்பதால் யானைகளால் பக்கத்து கிராம மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான வருடங்கள் பழைமை வாய்ந்த மருத மரங்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையிலே இப்பிரதேசத்திலே 10 வகையான மருதமரங்கள் இருக்கின்றன. வடமத்திய மாகாண முதலமைச்சரின் வீடு நிர்மாணிப்பதற்கும் இப்பிரதேசத்திலிருந்தே மருதமரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களே வன பிரதேசத்துக்குச் சொந்தக்காரர்களாக செயற்படுகிறார்கள்; முஸ்லிம்கள் இவ்வாறு வனப் பிரதேசங்களை தேசிய வனங்களை அழிக்கிறார்கள்; ஆக்கிரமிப்புச் செய்கிறார்கள். அரசாங்கம் இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனென்றால் காடழிப்பதிலும் பெறுமதியான மரங்கள் வெட்டப்படுவதிலும் அரசியல்வாதிகள் பின்னணியில் இருக்கிறார்கள். எனவே நாம் இந்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.
தொல்பொருள் ஆணையாளரினால் தொல்பொருள் பிரதேசங்கள் அழிக்கப்படுவதை தடுக்க முடியாதென்றால் அவர் பதவி விலகிக் கொள்ளவேண்டும். அப்பதவிக்கு தகுதியான ஒருவர், கடுமையாக நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.
இதேவேளை வடமத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். அன்சார் ‘இப்பகுதி மக்கள் தமது சட்டரீதியான காணிகளிலே விவசாயம் செய்துள்ளார்கள். அவர்களிடம் 1927 ஆம் ஆண்டு காணியுறுதிகள் இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.
பௌத்த தேரர்களின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகள் லங்காபுர பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர் அன்சார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தொடர்பு கொண்டு இவ்விவகாரத்தில் தலையிட்டு சுமுகமான தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு கோரியுள்ளார்.


Comments
Post a Comment