மாணிக்கமடு காணி சுவீகரிப்பு விவகாரம் : தமிழ்--முஸ்லிம் தரப்புகள் இணைந்து செயற்பட திட்டம்
இறக்காமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாணிக்கமடு–மாயக்கல்லி மலையடிவாரத்தில் பலவந்தமாக விகாரை அமைக்கும் முயற்சியை தடுப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகள் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.
இது குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான சந்திப்பின் பின்னர் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
அத்துடன், மாணிக்கமடு–மாயக்கல்லி மலை காணிச் சுவீகரிப்பு மற்றும் விகாரை அமைக்கும் விவகாரம் தொடர்பில் தான்
உடனடியாக கவனம் செலுத்துவதாகவும் அநீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாதெனவும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏ. நஸீர் அஹமட் ஆகியோரிடம் உறுதியளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், கிழக்கு முதலமைச்சர் ஏ. நஸீர் அஹமட் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்து மாயக்கல்லி மலையடிவார காணிச்சுவீகரிப்பு மற்றும் அங்கு விகாரை அமைக்கும் முயற்சிகள் குறித்து முறையிட்டனர்.
பௌத்த தேரர்களினால் முன்னெடுக்கப்படும் இச் செயல்கள் அப்பிரதேசத்தில் இனநல்லுறவிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதையும் விளக்கினார்கள். தமிழ் மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் முஸ்லிம்களின் 2½ ஏக்கர் காணியைச் சுவீகரித்து அவ்விடத்தில் விகாரை நிர்மாணிப்பதற்கு அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு மறுதினம் காணி அளவீடு நிலஅளவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை அமைச்சர் ரவூப் ஹக்கீமும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் சந்தித்து கலந்துரையாடி இருவரும் இணைந்து செயற்படுவதாகத் தீர்மானித்தனர். இதற்கமைவாகவே மறுதினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், இதனையடுத்து அப்பகுதியில் உருவாகியுள்ள பதற்ற நிலை, தேரர்களின் நடவடிக்கைகள் என்பன இரு தலைவர்களாலும் ஜனாதிபதியிடம் விளக்கப்பட்டுள்ளன.
மாயக்கல்லி மலையை அடுத்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணி உறுதியின் பிரதிகள் மற்றும் ஆவணங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
கடந்த கால அரசாங்கத்தினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளிலிருந்தும் மீட்சி பெறுவதற்காகவே நல்லாட்சி அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் முஸ்லிம்கள் பூரண பங்களிப்பை வழங்கினார்கள். என்றாலும் அவ்வாறான அநீதிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என்பதை அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியிடம் விளக்கினார்.
இவ்வாறான நிலைமைகள் இந்த அரசாங்கத்தில் தொடரக் கூடாது என இரு தலைவர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
“மாயக்கல்லி” மலைப்பிரதேசத்தைச் சூழ சிறுபான்மையினரே வாழ்கின்றனர். அவர்களிடம் சட்டரீதியான காணி உறுதிகள் உள்ளன. கிழக்குமாகாணசபையில் இது தொடர்பாக பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பின் போது விளக்கினார்.


Comments
Post a Comment