திறமையான விளையாட்டு வீரர்களாக இருந்தும் தன்னுடைய குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்கின்ற வீரர்களாக இருப்பதனை காணமுடிகின்றது. பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

-எம்.ரீ. ஹைதர் அலி

விளையாட்டு சுற்றுப்போட்டிகள் மூலம் பிரதேசங்களுக்கிடையே காணப்படுகின்ற ஒற்றுமைகளை வலுப்படுத்துவதற்கும், சிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளங் கண்டு கொள்வதற்குமான சிறந்ததொரு தளமாக இவ்வாறான கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் அமைகின்றன என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

வாழைச்சேனை அல்-அக்ஸா விளையாட்டுக் கழகம் நடாத்திய சஜ்ஜாத் T20 சவால் கிண்ணம் - 2017 கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று 2017.05.07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் வளர்பிறை விளையாட்டுக் கழகம் மற்றும் யங் சோல்ஜர்ஸ் விளையாட்டு கழகம் ஆகியவற்றுக்கிடையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...

நமது மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த மட்டில் அதிகமான வீரர்கள் திறமையானவர்களாக இருந்தும்கூட அவர்கள் தேசிய ரீதியில் மிலிர்வதற்குரிய இடங்கள் கிடைக்காமைக்கு காரணம் அந்த துறையினை அவர்கள் வளப்படுத்துவதற்குரிய வருமானம் இல்லையென்கின்றதொரு சகப்பான உண்மையாகும்.

மிகத்திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தும் தங்களுடைய வாழ்வாதாரத்தினை எவ்வாறு முன்கொண்டு செல்வது தன்னுடைய குடும்பத்தினை எவ்வாறு வளப்படுத்துவது என்கின்றதொரு போராட்டத்திற்கு மத்தியிலேதான் விளையாட்டில் அவர்கள் காட்டும் ஆர்வத்தினை விட்டுவிட்டு தன்னுடைய குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்கின்ற வீரர்களாக இருப்பதனை காணமுடிகின்றது. 

இவ்வாறான நிலைமைகள் மாற வேண்டும். திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளங் காணுவதனூடாக அவர்களுக்கான நிரந்தர தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்கள் தொடர்ந்தும் விளையாட்டிலுள்ள திறமைகளை வெளிப்படுத்துவற்குரியதொரு நிலைமை உருவாக வேண்டும். அதற்கு அரசாங்கம் மாத்திரமல்ல எல்லா வகையான அமைப்புகளும் அதற்குரிய பங்களிப்பினை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

கடந்த காலங்களைப் போலல்லாது இப்பொழுது விளையாட்டுத் துறையிலே எமது வீரர்கள் மிகத்திறமையாக விளையாடுகின்றதொரு காலகட்டம் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த யுத்த காலங்களின்போது துடுப்பு மட்டைகளை பிடிப்பதற்கு பதிலாக எத்தனையோ சகோதரர்கள் தங்களது சமூகத்தினை பாதுகாப்பதற்காக துப்பாக்கிகளை ஏந்தி உயிர்த்தியாகங்களை செய்திருக்கின்றார்கள். அவ்வாறானவர்கள் அன்று செய்த தியாகத்தின் காரணமாகத்தான் இன்று நாங்கள் நிம்மதியாக இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

1990ஆம் ஆண்டு சுமார் 75000 இற்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் இரவோடு இரவாக 24 மணித்தியாலத்திற்குள் வட மாகாணத்திலிருந்து எவ்வாறு வெளியேற்றப்பட்டார்களோ அதேபோன்று இந்த மாவட்டத்திலும் வெளியேற்ற நினைத்திருந்தால் அது சாத்தியமாக அமைந்திருக்கும் ஆனால் அல்லாஹ் எம்மை காப்பாற்றினான். 

ஆனாலும் எமது சமூகத்திலுள்ள இவ்வாறான வீரர்கள் அவ்வாறான சக்திகளுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதன் காரணங்களினால்த்தான் நாங்கள் வாழக்கூடிய பிரதேசங்களை தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. காலத்திற்குகாலம் எமது சமூகம் சார்ந்த விடயங்களில் இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்கின்றதொரு விடயத்தில் ஒருகாலமும் அவர்கள் பின் நின்றது கிடையாது என தெரிவித்தார்.

மேலும், இது தொடர வேண்டும் எமது சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்றால் விளையாட்டுத் துறைக்குள் அரசியல் எந்தவொரு காணத்தைக் கொண்டும் நுழைந்து விடக்கூடாது. அரசியல் என்பது அவரவரின் உரிமை அது அவர்களின் விருப்பம் அவர் விரும்பும் அரசியல் தலைமையை அவர் ஏற்றுக்கொள்வார். இது ஜனநாயக உரிமை. இதில் யாரும் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால் நல்லவர்களை தெரிவுசெய்து நல்ல தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டும். அதனால் எமது சமூகம் கௌரவமாக வாழ வேண்டுமென்ற சிந்தனை மாத்திரம் எமது உள்ளங்களில் இருக்க வேண்டுமே தவிர நாங்கள் அரசியல் ரீதியான விடயங்களை விளையாட்டுக்குள் உட்பகுத்தி எங்களுக்குள்ளே பிளவு படுகின்றவர்களாக மாறி விடக்கூடாது.

யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாது மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களே. நாங்கள் ஒரு கனம் எங்களைப்பற்றி சிந்தித்துப் பார்த்தால் நாங்கள் என்ன தவறினை செய்கின்றோம் செய்திருக்கின்றோம் என்று எங்களுக்கு நன்றாக புரியும். எங்களுடைய தவறுகளை அல்லாஹ் சமூகத்திற்கு வெளிப்படுத்தாதவரை காண்பிக்காத வரை நாம் அனைவரும் நல்லவர்களே. 

நல்லாட்சி என்கின்றதொன்று உருவாக்கப்பட்டும்கூட முஸ்லிம் சமூகத்தினைபொறுத்த மட்டில் ஒடுக்கப்பட்டு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு நசுக்கப்படுகின்றதொரு சமூகமாகவே இன்றும் நாம் இருக்கின்றோம்.

குறிப்பாக முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக இடங்களை வனப்பிரதேசத்திற்குள் உள்வாங்குவதும், அவர்களுக்கு சொந்தமான காணிகளில் பேரினவாதிகளினால் அத்துமீறி சிலைகளை வைப்பதும், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் என்று அடையாளப்படுத்துவதும் இவ்வாறு முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்கின்றதொரு நிலைமையும் இன்று ஏற்பட்டிருக்கின்றது என தனது உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும், ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளர் வை.எல்.எம். மன்சூர், அக்கீல் டயர்சொப் உரிமையாளர் அல்ஹாஜ். ஏ.சீ.எம். நியாஸ் மற்றும் எம். ஜானு ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இப்போட்டியில் வளர்பிறை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றதோடு. இரு விளையாட்டுக் கழகங்களுக்கும் அதிதிகளினால் வெற்றிக்கின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.




Comments