மியன்மார் அகதிகள் மிரிஹான முகாமில்
மீண்டும் திருப்பி அனுப்பாதீர் என சட்டத்தரணிகள் கோரிக்கை
இலங்கை வடக்கு கடல் எல்லையில் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை மிரிஹான தடுப்புக்காவல் முகாமுக்கு இடமாற்றுமாறு, மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் 30 பேரும் இரு இந்தியர்களும் அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை கடல் எல்லையூடாக பயணித்துக் கொண்டிருந்த போது கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மியன்மார் முஸ்லிம் அகதிகள் மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்களுக்கு நாடொன்று புகலிடம் வழங்கும் வரை இலங்கையில் தடுப்புக்காவல் முகாமில் வைக்கப்பட்டிருப்பார்கள் என ஆர்.ஆர்.ரி.அமைப்பின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளும், இரு இந்தியர்களும் நேற்று யாழ். மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிறநாட்டில் குடிபுகுதல் சட்டம், பிரிவு 45Cயின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸார் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் சார்பில் ஆஜரான ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சட்டத்தரணிகள் ருஷ்தி ஹபீப் மற்றும் சைனாஸ் மொஹமட் ஆகியோர் அகதிகளை அவர்களது நாட்டிற்குத் திருப்பியனுப்பவேண்டாமென நீதிபதியை வேண்டிக் கொண்டனர்.
அகதிகளை யு.என்.எச்.ஆர்.சியின் (UNHRC) கண்காணிப்பு மற்றும் உதவிகளின் கீழ் தடுப்பு முகாமில் வைப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனைகளை உடனடியாக பெற்றுக்கொள்ளும்படி நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
ஆர்.ஆர்.ரி.அமைப்பு நீதிவானிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, நீதிவான் அவர்களை சிறைக்கு அனுப்பாது மிரிஹான தடுப்புக்காவல் முகாமுக்கு அனுப்பி வைக்க உத்தரவு வழங்கினார்.
அகதிகளுக்கு முழுமையான வைத்திய வசதிகளை வழங்குமாறும், குறிப்பாக கர்ப்பிணித்தாய்க்கு இந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிவான் பொலிஸாருக்குத் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 30 மியன்மார் அகதிகளில் 7 பெண்கள் 7ஆண்கள் மற்றும் 16 சிறுவர்கள் அடங்குவர். மேலும் இரு இந்தியர்களும் அடங்குவர்.
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படகொன்றின் இரு இந்திய மீனவர்கள் தமது படகு கடலில் மூழ்குவதற்கு முற்பட்டபோது தங்களைக் காப்பாற்றி மீனவர்களின் படகில் ஏற்றியதாக அகதிகள் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். இதனையே இரு இந்திய மீனவர்களும் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment