மாவில்லு வர்த்தமானி விவகாரம் : தீர்வு கிடைக்காவிடில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் போராட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மாவில்லு பேணற்காடு வர்த்தமானி பிரகடனம் தொடர்பாக நடைபெறவுள்ள உயர்மட்ட பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு சுமுக தீர்வு எட்டப்படாவிட்டால் கொழும்பில் ஜனாதிபதி மாளிகையின் முன்னால் வித்தியாசமான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதியின் செயலாளருடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், ஜனாதிபதியின் மாளிகையின் முன்னால் கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முசலி கிளைத்தலைவரும் அல்ஜாசிம் பெடரேஷன் தலைவருமான மௌலவி எம்.எம்.தௌபீக் ஆகியோர் தெரிவித்தனர்.
இன்றைய உயர்மட்ட பேச்சுவார்த்தையில் வர்த்தமானி பிரகடனத்தால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு சுமுகமான தீர்வு வழங்கப்படாவிட்டால் முசலியிலிருந்து மக்கள் கொழும்பு நோக்கி வருவார்கள்.
கொழும்பில் நீதிகோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தொடர்ந்தும் முசலியில் கவனயீர்ப்பு போராட்டத்தைத் தொடராது ஜனாதிபதி மாளிகையின் முன்னால் நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறோம். போராட்டத்துக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவு வழங்க வேண்டும்” என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் முசலி கிளைத் தலைவர் மௌலவி எம்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “நாளை மறுதினம் ஜனாதிபதியின் செயலாளருடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சுமுகமுடிவு எட்டப்படாவிட்டால் முசலி மக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்தை மீண்டும் ஜனாதிபதியின் மாளிகைக்கு முன்னால் நடாத்துவார்கள். ஆனால் வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் சுமுகமான தீர்வொன்றினைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதியின் செயலாளர் உறுதியளித்திருக்கிறார் என்றார்.
இந்த உயர்மட்ட ஜனாதிபதியின் செயலாளருடனான பேச்சுவார்த்தையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உலமாசபையின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி இறுதியாக மேற்கொண்ட கலந்துரையாடலின்போது தான் விடுத்த பணிப்புரை அதிகாரிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் வாழும் பகுதிகளை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு தான் உத்தரவிடவில்லை எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment