அந்தப் பேயைக் கட்டிப்போடுங்கள்!

நன்றி – ராவய
தமிழில் – நஜீப் பின் கபூர்

30 வருட கொடிய யுத்தம் முடிவுற்று, இன்று கடந்து போய் இருப்பது எட்டு வருடங்கள் மட்டுமே! இந்த நேரத்தில் கூட இன்னும் ஒரு தசாப்தங்களுக்குள்ளாவது இந்த நாட்டில் புறையோடிப்போயிருக்கின்ற இன பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வு வந்து சேருமா என்பதனை எதிர்பார்க்க முடியாதுள்ளது.

இவ்வாறான ஒரு நேரத்தில் இன்னுமொரு பேய் தனது புதிய சுற்றைத் துவங்கி இருக்கின்றது. நாட்டில் 12 சதவீதமாக இருந்த தமிழ் சகோதரர்கள் மீது ஒரு சந்தேகப்பார்வை இன்றும் இருந்து வருகின்றது. இந்த சந்தேகங்களும் தப்பபிப்பிராயங்களும் காரணமாக நாடு பாரிய அழிவுகளுக்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றது.

இன்னும் 10 சத வீதமாக இந்த நாட்டில் வாழ்கின்ற சகோதர முஸ்லிம் மக்களுடன் பெரும்பான்மை சிங்கள மக்களிடையே சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்த இப்போது இந்தப் பேய் தனது நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றது.

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், களத்தில் குதித்த இந்த காவியுடை தறித்த பேயுக்கு போதுமான அளவு அனுசரனையும், அங்கிகாரங்களும் அன்றைய ஆட்சியாளர்களினால் கொடுக்கப்பட்டது. அன்று இருந்த பாதுகாப்புச் செயலாளர் பகிரங்கமாகவே இந்தக் காவிப் பேயின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தார்.

புன்முறுவலுடன் அந்தப்பேயுடன் இந்த மனிதன் நெருக்கமாக உறவுகளைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார். இந்தப் பேயுடைய கல்வி நிறுவனத்தை திறந்து வைக்க கிடைத்த அழைப்பை ஏற்று அவர் அதற்கும் சென்றிருந்தார். இந்தப்பேய் அந்த நாட்களில் செய்த குற்றங்களுக்கு சட்டத்திலிருந்து தண்டனை கிடைக்காமல் இருப்பதை பாதுகாப்புச் செயலாளர் ஆட்சியாளரான தனது மூத்த சகோதரனிடமிருந்து அதற்குக் காப்பு உத்தரவாதத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

அரசியலில் தனக்குச் சாதகமாக இருந்த இந்த நிலமைகளை வைத்துக் கொண்டு தன்னிஷ்டத்துக்குச் செயல்பட்டதுடன் நாடுபூராவிலும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி பெரும் அழிவுகளை உண்டு பண்ணி இருந்தது இந்தப் பேய்.

அலுத்கமையில் இவர்கள் வைத்த இனவாதத் தீ சகோதர முஸ்லிம்களுடைய உடமைகளையும் சக வாழ்வையும் ஒரே இரவில் சீர் குழைத்ததுடன் பல உயிர்களையும் பறித்துக் கொண்டது. இன்னும் பலர் முடமாகிப்போனார்கள். நீதி எந்த ஒரு இடத்திலும் பேய்க்கு எதிராக தனது நடவடிக்கைகளை மேற் கொள்ள வில்லை.

இந்தப் பேயின் அட்டகாசத்தால் சகோதர முஸ்லிம் மக்கள் மன உலைச்சல்களுக்கும் அச்சத்துக்கும் ஆளானார்கள். தனது பிள்ளை குட்டிகளை அனைத்துப் பிடித்துக் கொண்டு உயிர்களுக்கு அஞ்சி அவர்கள் அன்று இரவுகளைக் கழிக்க வேண்டி இருந்தது. இந்தத் துயரங்களைத் தொடர்ந்து வந்த தேர்தல் முற்றிலும் ராஜபக்ஷவுக்கு எதிரான அலையாக பிறப்பெடுத்தது. பொது வேட்பாளர் மைத்திரியின் வெற்றியின் பின்னணியும் இதுதான். எனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரணக் குழியை வெட்டிக் கொடுத்ததும் இந்தப் பேய்தான்.

துரதிஷ்டவசமாக இன்று மீண்டும் அந்த நிலமை நாட்டில் தோன்றி இருக்கின்றது. இன்றும் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மரணப் பயத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தங்களுடைய பள்ளிவாயில்கள், வர்த்தகநிலையங்கள், வீடுகள், உடமைகள் எந்த நேரத்திலும் இந்த இனவாதப் பேய்களின் தாக்குதல்களுக்கு இலக்காகலாம் என்று ஒரு பயம் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த அச்சம் எப்படி பிறப்பெடுக்கின்றது என்றால் இந்தப்பேய் மீண்டும் சுதந்திரமாக செலாற்றுவதற்கு இடமளிக்கப்பட்டிருப்பதால் இந்த நிலை இன்று தோன்றி இருக்கின்றது. நல்லாட்சியை பதவிக்கு அமர்த்தியதால் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான அச்சம் பயம் போன்றவற்றிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா?

இனவாதம், மதவாதம், பாசிஷவாதத்தை போகின்ற வருகின்ற எல்லா இடங்களிலும் விதைத்தக் கொண்டு செல்லும் இந்தப் பேய் சுதந்திரமாக இருப்பதைவிட அது இருக்க வேண்டிய உண்மையான இடம் சிறைக் கூடமாகும். பொதுக் கூட்டங்களுக்கும், வழிபாட்டு இடங்களுக்கும் வெகுஜன நிறுவனங்களுக்கும், அரச நிறுவனங்களுக்கும் தான்தோன்றித்தனமாக அத்துமீறிப் பிரவேசித்திருக்கின்ற இந்தப்பேய் எண்ணற்ற குற்றங்களுக்காக நீதி மன்றத்தின் முன் நிறுத்த வேண்டி இருக்கின்றது.

சில வழக்குகளுக்காக உடற்பிணையிலும், இன்னும் சில வழக்குகள் நீதி மன்றத்தை அவமறியாதை செய்த காரணத்திற்காகவும் இந்தப்பேய் நீதிமன்றத்தால் தேடப்படுகின்றது.

இந்தப்பேயின் முன்னே ஜனாதிபதி, பிரதமர் என்போர் கூட செய்வதறியாது நிற்கின்றார்களாம்? தான் இந்த நாட்டுச் சட்டத்துக்கும் நீதிக்கும் கட்டுப்படப்போவதில்லை என்று இந்தப் பேய் ஒரு குறிப்பை சொல்லி இருக்கின்றது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப்பேய் முஸ்லிம்களுடைய மதத் தலைவர்களுக்கு நிந்தனை உண்டு பண்ணும் விதத்தில் மக்கள் மத்தியில் குரோதமான மற்றும் கீழத்தரமான முறையில் பேசிக் கொண்டு நாடுபூராவிலும் சுதந்திரமாக சுற்றித்திரிந்து கொண்டு செல்கின்றது. இந்த நிலையிலும் நீதியும் பொலிசும் மௌனவிரதம் இருந்து வருகின்றது. தியானத்தால் தினந்தோறும் பொலிஸ் கடமைகளை அன்றடம் துவங்குகின்ற பொலிஸ் அதிபர், சட்டத்தை வளைத்து அருவறுப்பான ஒரு தியானத்தில் தற்போது இருந்து கொண்டிருக்கின்றார்.

பல்கலைக்கழக மாணவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கின்ற இந்தப் பொலிஸ், பேய்க்கு முன்னாள் கோமாளித்தனமாக நின்று வேடிக்கை பார்க்கின்றது. ஜனாதிபதி பிரதமர் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு சமாதானம், என்று அடிக்கடி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது அவற்றை உண்மையாகப் பரிசோதிக்கின்ற ஒரு நேரம் தற்போது வந்து நிற்கின்றது.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்காக அனைத்து அதிகாரங்களையும் பொலிசுக்கு வழங்கி விட்டோம் என்று கூறிவிட்டு, நாட்டுத் தலைவர்கள் கைகளைத் துடைத்துக் கொள்ள முடியாது. நாட்டில் மீண்டும் இன மத மோதலொன்று ஏற்படாமல் இருப்பதற்குத் நாட்டுத் தலைவர்கள் தனது செயல்பாட்டை இப்போது நாட்டுக்குக் காட்ட வேண்டி இருக்கின்றது.

எனவே முதலில் எந்த ஒரு விட்டுக்கொடுப்புமின்றி செய்ய வேண்டி இருப்பது, இந்தப் பேய்கு எதிராக நீதியை முதலில் நிலை நாட்டுவதாகும். அவர்கள் ஒரு சிறு குழுவினர். சில ஊடகங்கள் இவர்களை ஊதிப் பெருப்பிக்கின்றன. இவர்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அங்கீகாரமோ செல்வாக்கோ கிடையாது. இந்த நாட்டில் சமாதனமும் இன நல்லிஒக்கமும் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மக்களின் எண்ணிக்கை இவர்களைவிட பல மில்லியன் கணக்கில்.

அடிப்படைவாதிகள் சில பேருக்காக, கட்டுக்கோப்பான ஒரு சமூகம் இவற்றை எல்லாம் கண்ணை மூடிப்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இந்த சிறு குழு முழு மனித சமூகத்திற்குமே மரணக் குழிகளை வெட்டிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டமாகும். எனவே நாங்கள் எல்லோரும் ஒரு சமூகமாக இந்தப் பேய்க்கு எதிராக எழுந்து நிற்க வேண்டிய நேரம் இப்போது வந்திருக்கின்றது.

முக்கிய குறிப்பு:

அமைச்சரவை மாற்றம் நடந்த அன்று இரவு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களின் கூட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரி தனது வாசஸ்தலத்தில் கூட்டி இருந்தார். இந்தக் கூட்டத்தின்போது பேருவளை சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அம்ஜாட் முஸ்லிம் சமூகத்தினருக்கு மஹிந்த காலத்தைவிட பெரிய நெருக்கடிகள் தற்போது ஏற்பட்டு வருகின்றது யாரும் பார்க்கின்றார்கள் இல்லை என்று அங்கு பேசிய போது அதற்குக் கோபப்பட்ட ஜனாதிபதி மைத்திரி அதற்குத்தானே துறைக்கு பொறுப்பாக அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிபர் இருக்கின்றார்களே என்று அம்ஜாடுக்கு பதில் அளித்திருக்கின்றார்.

இந்த ஜனாதிபதிக்கு நாம் ஞாபகப்படுத்துவது இந்த நாட்டில் எல்லாத் துறைகளுக்கும்தானே அமைச்சர்கள் அதிகாரிகள் என்று இருக்கின்றார்களே. அனர்த்த முகாமைத்துவத்திற்கும் அமைச்சர்கள் இருக்கின்றார்கள். விஷேட சம்பவங்களின் போது துறைகளில் உங்கள் தலையீடுகள் இருந்துதானே வருகின்றது.? இந்த முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல்களை – அட்டகாசங்களை நீங்கள் கண்டு கொள்ள விரும்பவில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.! உங்கள் நிலைப்பாட்டை இந்தச் சமூகத்தால் இப்போது புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்!

Comments