மாணவர்களுக்கு வழிகாட்டல், ஆலோசனை ​பெரிதும் அவசியம்


கல்வித் துறையில் ஆலோ சனை வழிகாட்டல் என்பது உலகலாவிய ரீதியல் சமகாலப் பாடசாலைகளில் மிகவும் இன்றியமையாத சேவையாகக் காணப்படுகின்றது. இங்கு வழிகாட்டல், ஆலோசனை எனும் இரண்டு எண்ணக்கருக்கள் அதில் முக்கியமானவையாகும்.

இவை ஒன்று போல் தோன்றினாலும் வெவ்வேறான கருத்துகளையே தருகின்றன .வழிகாட்டல் எல்லாப் பகுதியினருக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வழங்கப்படும் ஒரு உதவிச் சேவையாகும். உளவளத்துணை அல்லது ஆலோசனை என்பது பிரச்சினைக்குட்பட்ட ஒரு நபருக்கு அவரிடம் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் அவராகவே பிரச்சினைக்கான தீர்வை எடுப்பதற்கு உதவுகின்றதொரு செயற்பாடெனக் கூறலாம்.

மாணவர்கள் பாடசாலையுடன் இசைவடைவதற்கும், கற்கைப் பரப்பைத் தெரிவு செய்து கொள்வதற்கும் மேலும் தன்னைப் பற்றிய விளக்கம், சுய எண்ணக்கரு தொடர்பான விருத்தியை ஏற்படுத்தி அந்த தனியாளின் விருத்திக்கு வழங்கப்படும் உளவளத் துணையானது ஒரு உதவிச் சேவையாகும் என டருமன் கெலி, இதிங் கெனஸ் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

மேலும் ரொபர்ட் மதில்சன் என்பவர் அது ஒரு அபிவிருத்தி சார்ந்த செயன்முறையாகும். அது தனியாளின் தொழிசார், கல்விசார், தனிப்பட்ட அனுபவங்கள் தொடர்பாக வழங்கப்படுவதாகும் எனக் கூறியுள்ளார். ஆலோசனைஎன் புது வழிகாட்டலின் முக்கியமான ஒரு கூறாகும்.

இந்த இரண்டு செயன்முறைகளும் கூட்டாக நிகழும் சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. ஒரு பாடசாலையை எடுத்துக் கொண்டால் அங்கு வழிகாட்டல் மாத்திரம் போதுமானதல்ல. உளவியல் கல்வி வழங்கும் ஆலோசனைச் செயன்முறையும் இன்றியமையாதது.

புராதன காலத்தில் ஆலோசனை வழிகாட்டல் இன்று போல் தேவைப்பட்டிருக்கவில்லை.அக்கால வாழ்க்கை முறை இலகுவானதாகவும், சனத்தொகை குறைவானதாகவும், கற்கும் மாணவர் தொகை குறைவானதாகவும் இருந்ததனால் ஆலோசனை சேவை ஆசிரியர், பெற்றோர், மத குருக்கள் போன்றோர் மூலமாக வழங்கப்பட்டது.

ஆனால் இன்று விஞ்ஞானத் தொழில்நுட்பத் துறையின் துரித முன்னேற்றம் ,துரித சனத்தொகைப் பெருக்கும் ,பொதுசன தொடர்புசாதனங்களின் விரிவாக்கம், சமூக, கலாசார மாற்றங்கள், நவநாகரிகச் செல்வாக்கு, யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் எனப் பல்வேறு காரணிகளினால் சிக்கல் வாய்ந்த ஒரு சமூக அமைப்பினை உருவாக்கியுள்ளது.

பாடசாலையும் சமூகத்தின் ஒரு அங்கம் என்ற வகையில் அக்காரணிகளின் தாக்கம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெகுவாகப் பாதிக்கின்றது. அதேவேளை மாணவர்களது கல்வித்திறன் வளர்கின்றதே தவிர தொழில் பற்றி எந்த அறிவும் அற்றவர்களாகவே வெளியுலகில் காலடி எடுத்து வைக்கின்றனர்.

இதனை உணர்ந்த இன்று பாடசாலைகளில் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின்படி ஆலோசனை வழிகாட்டலானது மாணவர்களுடன் ,பெற்றோர்களுக்கும், சமூகத்திற்கும், பாடசாலையினூடாக வழங்கப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்படுகின்றது. அந்த வகையில் பல்வேறு வகையில் ஆலோசனை வழிகாட்டல் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

உளவியல் சார் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் ஒருவர் தன்னைத் தானே விளங்கிக் கொள்வதற்கும் அதாவது அவருடைய பலத்தையும், பலவீனத்தையும் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. தங்களின் உடலின் உறுப்புக்களை, அதன் அமைப்புகளை, நிறத்தை ,உயரத்தை, அந்தஸ்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு, ஊனமுற்ற பெற்றோருடன் வாழ்வோருக்கு, பார்வையற்ற நிலை, நடக்க முடியாத நிலை, செவிப்புலன் குறைபாடு, தாழ்த்தப்பட்ட நிலைமை, ஏழ்மை போன்றவற்றால் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். உடல் ஊனத்தை விட மிகப் பாதிப்பை உருவாக்குவது மனித மனதின் ஊனம் தான். எனவே இத்தாழ்வுச் சிக்கலால் உருவாகும் பாதிப்புகளிலிருந்து வெளிக்கொண்டு வர ஆலோசனை அவசியம்.

அவ்வாறே இடைநிலைக்கல்வி ,உயர் கல்வி பயிலும் மாணவர்கள் எந்த கற்கையைத் துறையைத் தெரிவு செய்வது? எவ்வாறு கற்பது என்பதில் குழப்பத்திற்குட்படுகின்றனர் .சில மாணவர்கள் பிழையான பாடத் தெரிவின் மூலம் பரீட்சையில் தோல்வியுறுகின்றனர் சிலர் தற்கொலை வரை செல்கின்றனர்.

மேலும் கல்விக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியாகின்றவர்களில் கூட பலர் தொழில் துறைகளுக்குப் பொருத்தமற்றவர்களாக ஒரங்கட்டப்படுகின்றனர். அவர்களிடத்தில் உளத்திறன்கள் விருத்தி செய்யப்பட்டிருக்கவில்லை. தனியாக தீர்மானமெடுக்க முடியாமை, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாமை, அச்சம், குழுவாக பணியாற்ற முடியாமை ,பல்துறை ஆற்றலின்மை, ஆங்கிலமொழித் தேர்ச்சியின்மை, நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த முடியாமை...

இதனால் அவர்கள் பல நெருக்கடிகளுக்குள்ளாகின்றனர் .அதற்கு சிறந்த வழி பாடசாலை மட்டத்திலிருந்து ஆலாசனை, வழிகாட்டல் சிறப்பாக முன்னெடுக்கப்படுதலே.

 தொழில் வழிகாட்டல் மூலமாக வினைத்திறனுடைய தொழிலாளர்களை உருவாக்குவதுடன், சமூகப் பயனுள்ளதும், சிறந்த குடிமகனை உருவாக்குவதற்கும் சுயதிறன்களை விருத்தி செய்து உலகத்திற்குப் பொருத்தமானதும், கேள்வி நிலையிலுள்ள தொழிலைப் பெறுவதற்கும் உதவலாம், ஆரம்ப நிலையிலிருந்தே தொழில் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வும் தூண்டலும் கிடைக்கப் பெற்ற மாணவன் இடைநிலையில் அத்தொழிலை அடைவதற்கான ஆற்றலில் தன்னை விருத்தி செய்து கொள்ள முடியும்.

ஆரம்பப் பாடசாலை மாணவர்களைப் பொருத்தவரையில் அவர்களது விருத்தி குறித்து கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு பெற்றோரின் அன்பு, அரவணைப்பு குறைவடைதல் அல்லது கிடைக்காமல் போதல், போசணைக் குறைபாடு, ஆர்வமூட்டக் கூடிய கற்றல் சூழல் இல்லாமை, பாடசாலையில் நாளாந்தத் தேவைகளை நிறைவேற்றத் தவறிப் போதல் ,வகுப்பறையில் கவலையுடன் இருத்தல், பாடசாலைக்குச் சமுகமளிப்பதில் விருப்பம் காட்டாமை, தனிமை நாட்டம், நட்புத் தொடர்புகளை ஓழுங்காகப் பேணாமை, மனதை ஒரு குறிக்கோளில் செலுத்துவதில் இடர்படுதல், பாடசாலை அல்லது ஆசிரியர் தொடர்பாக அச்சம், சமூகத் திறன்கள் குறைவாக இருத்தல், பாலியல் தொடர்பான பிரச்சினைகளும் பிறழ்வு நடத்தைகளும், பாடசாலை சட்ட திட்டங்களுக்கு எதிராக செயற்படல், பரீட்சை தொடர்பான பயம், பதற்றம், கற்றவைகளை நினைவிலிருத்திக் கொள்ள முடியாமை எனப் பல்வேறு விடயங்களை மாணவர்களிடத்தில் அவதானித்து ஆலோசனை வழங்க வேண்டியுள்ளது.

மாணவர்களின் குடும்ப அமைப்பும் சாதக மற்ற நிலையில் காணப்படுமிடத்து மாணவர்கள் உளத்தாக்கங்களுக்கும் ,நெருக்கீடுகளுக்கும் உள்ளாகலாம்.. அதாவது தாய், தந்தை இருவரையும் இழந்திருத்தல், அல்லது ஒருவரை இழந்திருத்தல், இருவரும் பிரிந்து வாழல், விவாகரத்து, இருவரும் தொழிலுக்குச் செல்வதால் பிள்ளை எதிர்பார்க்கும் அன்பு, அரவணைப்பு, கணிப்பு கிடைக்காமை, பெற்றோரிடையே சண்டை சச்சரவு, உறவினர்களுடன் சுமுகமான உறவு நிலவாமை, பொருளாதாரக் கஷ்டங்கள், வறுமை, பெற்றோரின் இருக்கமான கட்டுப்பாடுகள் போன்ற சாதகமற்ற சூழ்நிலைகளும் பிள்ளைகளிடத்தே உள ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தலாம். அவ்வாறே சமூக ரீதியான நெருக்கீடுகளுக்கும் உட்பட நேரிடுகின்றது.

பிள்ளைகள் சமவயதினருடன் சமமாக பழகுவதற்குத் தேவையான பொருளாதார நிலைமையின்மை, சமவயதுக் குழுவினரின் புறக்கணிப்பு, ஏனையோரின் சமூக அந்தஸ்த்துக்கு ஒப்பான சமூக அந்தஸ்து தனது குடும்பத்துக்கு இல்லாமை, சமூக ஈடுபாட்டுக்குத் தேவையான சமூகத் திறன்கள் குறைவாக இருத்தல் சமூத்தின் புறக்கணிப்பு, எதிர்பாலாருடன் பழகுதல் தொடர்பான ஊக்கமளித்தல் மற்றும் தடை செய்தல் காரணமாக குழம்பிப் போதல் போன்றன காரணமாக எல்லோரும் ஏதோ ஒருவகையில் ஆலோசனை தேவைப்பட்டவர்களாக இருக்கலாம்.

குறிப்பாக மனித வாழ்க்கை காலத்தில் மாணவர் பருவத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்க நேரிடுகின்றது இவர்களுக்கு பாடசாலைகளில் இச்சேவையை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும். எல்லா ஆசிரியர்களும் இத்துறைசார் பயிற்சியைப் பெறுதல் வேண்டும்.

இந்த ஆலோசனை வழிகாட்டல் மூலம் தனியாகத் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தனியாள் ஆளுமையைக் விருத்தி செய்யவும், நெருக்கடியான சூழ்நிலையில் சரியான தீர்மானம் எடுக்கவும், வெளியேற்ற முடியாது உள்ளத்தில் அமிழ்த்தி வைத்துள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றி ஆற்றுப்படுத்தவும் ,கவலையிலிருந்து விடுபடவும், முன்னேர ஆர்வம் உண்டாக்கவும், குற்ற உணர்விலிருந்து விடுபட வைத்தல், உறவை நெறிப்படுத்த வழிமுறை செய்தல், இலட்சியத்தை சென்றடைதல் போன்றவற்றிற்கு இது உதவி செய்கின்றது.

இந்த சேவை ஒழுங்காக முன்னெடுக்கப்படாத விடத்தே மனிதனிடத்தில் தாழ்வுச் சிக்கல், விரக்தி, வெறுப்பு, மனஅழுத்தம் போன்றன எற்பட்டு தற்கொலைகள், சமூகச் சீரழிவுகள், பிறழ்வு நடத்தைகள், சமூக முரண்பாடுகள், இளைஞர்கள் தங்களுக்கு பொருத்தமான தொழில்களை தெரிவு செய்து கொள்ள முடியாதநிலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் அதிகரிக்க காரணமாகின்றன.


எம்.என்.எப். ருஸ்னா
கொழும்பு பல்கலைக்கழகம்
கல்விப்பீடம் 

Comments