இலங்கை அரசியல் நெடுகிலும் பௌத்த ஆதிக்கம்
“விகாரை ஒன்றை அமைத்தாலோ அல்லது கோவில் அல்லது பள்ளிவாசல் போன்ற மதஸ்தலங்களை அமைத்தாலோ அங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இவ்வாறான மதஸ்தலங்கள் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டிய சுதந்திரமும் சமாதானமுமே தவிர மோதல்கள் கிடையாது. எனினும், ஏனிந்த மோதல்கள் ஏற்படுகின்றன என்பதற்கான பதில்கள் எனக்கு தெரியும். நாட்டில் சமாதானம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் அரசுக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதற்குமே இவ்வாறு செயல்படுகின்றனர்.
அதிகாரத்தில் இருந்து, இன்று இல்லாமல் போனவர்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவரவே இவை இடம்பெறுகின்றன என்றும்” ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன சிட்னி நகரில் கடந்த 25.05.2016இல் அவுஸ்திரேலியா வாழ் இலங்கை சமூகத்தினர் மற்றும் வர்த்தக சமூகத்தினருடன் நடத்திய சந்திப்பொன்றில் உரையாற்றும்போதே இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கூற்று குறிப்பாக இலங்கையில் நடைபெறுகின்ற சிங்கள, முஸ்லிம் இன மோதல்களில் பிரதான இடத்தை வகிக்கின்ற மத ரீதியான மேலான்மைப் பிரச்சனைகளையும் வர்த்தக ரீதியான காழ்ப்புணர்வுகள் ஏற்படுவதையும் வெறும் மதவாதத்தோடு மட்டும் மட்டுப்படுத்திக் குறிப்பிட்டிருப்பது முறையல்ல. அதுமட்டுமன்றி பொதுவாக விகாரைகள் எழுப்பப்படுகின்ற போது பிரச்சனைகள் தோன்றுவதென்பது இந்நாட்டில் விகாரைகள் அமைக்கக்கூடாதென்ற பாங்கில் முஸ்லிம்கள் எதிர்ப்பை காட்டுவது போன்ற ஒரு சுட்டுதலையும் உட்கிடையாகக் கொண்டிருக்கின்றது.
இலங்கையில் விகாரைகள் எழுப்பப்படுகின்ற போது முஸ்லிம்கள் அதனை எதிர்ப்பதற்கு இரண்டு காரணங்களே அன்றி வேறெந்த சூழ்நிலைகளிலும் அதன் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. ஒன்று முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் அடத்தமாக விகாரைகளை நிர்மாணிப்பதற்கு முற்படுவது, மற்றொன்று அறவே சிங்கள மக்கள் வாழாத பிரதேசங்களில் குறிப்பாக முஸ்லிம் குடியிருப்புக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விகாரைகளை கட்டுவதற்கு முற்படுகின்றபோதுமே ஆகும்.
எது எவ்வாறு இருந்த போதிலும் இலங்கையில் காணப்படுகின்ற மதவாத ரீதியாக எழுப்பப்படுகின்ற சிங்கள – பௌத்த ஆதிக்க சக்திகளான பொதுபலசேனா போன்ற அமைப்புக்களும் ஞானசார போன்ற தேரர்களின் எதிர்ப்புக்களும் கடந்த ஆட்சியாளராக இருந்த மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான எத்தனிப்பின் அரங்கேற்றம் என்று இன்றைய ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன மேற்படி கூற்றினூடாக திட்டவட்டமாக வெளிப்படுத்துகின்றார். இந்த கூற்றில் பலத்த முரண்பாடுகள் இருப்பதாகவே சாதாரணமாக நோக்குகின்ற ஒருவரே புரிந்துகொள்ளக்கூடியதாகும்.
அன்று மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை தக்கவைப்பதற்கு பொதுபலசேனா போன்ற அமைப்புக்களையும் ஞானசார போன்ற தேரர்களையும் இயங்கச் செய்தது என்று எடுத்துக்கொண்டால், இன்று நாட்டில் அரசாங்கமாக இருக்கின்றவர்கள் அவர்களை மிக எளிதாக மடக்கி ஒடுக்கிவைத்திருக்க முடியும். ஏனென்றால் அவர்கள் யாரென்பதும் அந்த அமைப்பின் பின்னாலிருக்கக்கூடியவர்கள் நன்கறியப்பட்டவர்களாகவுமே இருக்கின்றனர்.
இதற்கு நல்லதொரு உதாரணமாக கடந்த அரசாங்கத்தில் நோர்வே நாட்டுக்கு மதவாதத்தை தீவிரமாக முன்வைத்து குழப்பங்களை உருவாக்கிய மதகுருமார்கள் சென்று வந்திருப்பதன் மூலம் நன்கு அறியப்பட்டவர்கள். அதுமட்டுமன்றி அளுத்கம – பேருவலை முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களுக்கு இவர்களின் தூண்டுதல்களும் பங்குபற்றுதலும் இருந்தது என்பதும் பகிரங்கமான ஒன்றாகும்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு இந்த பௌத்த-சிங்கள ஆதிக்க சக்திகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி முஸ்லிம்களை நிம்மதியாக வாழச் செய்வதற்கு உறுதிமொழி அளித்திருந்தனர். அதனடிப்படையில்தான் பெரும்பாலான முஸ்லிம்கள் நாடுதழுவிய ரீதியில் இந்த அரசாங்கத்தை பெருவாரியாக ஆதரித்திருந்தனர். இவ்வாறான நிலையில் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் நல்லாட்சி அரசாங்கம் பௌத்த – சிங்கள ஆதிக்க சக்திகளின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவிதமான முன்னேற்பாடுகளையும் நன்கு திட்டமிட்டு முன்னெடுக்காத ஒரு பின்னடைவையும் கொண்டுள்ளனர்.
இன்றும் சிங்கள- பௌத்த ஆதிக்க அத்துமீறல்கள் தொடர்ந்தேர்ச்சியாக முஸ்லிம்கள் மீது நடந்தேறிக்கொண்டிருக்கிறது என்றால், இன்றிருக்கும் அரசுக்கு அது தேவைப்படுவதாக இருக்க வேண்டும். அல்லது கட்டுப்படுத்த முடியாது கையறுநிலையில் இருப்பதாகக் கொள்ள வேண்டும். இவற்றில் எதுவென்பதை நாம் இனங்காண வேண்டும்.சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் இனமோதலை ஏற்படுத்துவதற்கான முன்வைப்புக்கள் இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. அநாகரிக தர்மபால போன்ற சிங்கள தலைவர்களால் உருவாக்கப்பட்ட இனவாதத்தீயின் அடிப்படையில் வெளிப்பட்டிருக்கின்றது.
அநாகரிக தர்மபால போன்ற சிங்கள தலைவர்களின் பௌத்த மேலாதிக்க உணர்வு என்பது இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பிருந்த ஆட்சிகளிலும் பலரூடாக முன்னெடுக்கப்பட்டுவந்திருப்பதைப் பார்க்கின்றோம். அதே போன்று இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான அரசாங்க காலங்களிலும் இந்த பௌத்த மேலான்மைக் கொள்கைகளினூடாக இன முறுகல்களுக்கான அடிப்படைகள் தோற்றுவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக இலங்கையில் தொகுதிவாரியான தேர்தல் முறை இருந்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் தலைவராக வருகின்ற பிரதமர் ஒரு தொகுதியை மையப்படுத்தி வெற்றிபெருபவர் என்பதனால், இனப்பாகுபாடு மிகப்பாரதூரமாக வெளிக்கிளம்பி இருக்கின்றது.
அதுமாத்திரமன்றி நமது நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1978ஆம் அரசியலமைப்பின் படியான நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் முறைமையின் அடிப்படையில் முழு நாட்டு மக்களாலும் தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதி முறைமை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டபோது சிங்கள மக்களின் வாக்குகள் இரண்டு பெரும் கட்சிகளை நோக்கி பிரிந்து செல்கின்ற நிலையில் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற வாக்குகளாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அமையக்கூடிய சூழல் தோற்றுவிக்கப்பட்டது. இதனால் வரக்கூடிய ஜனாதிபதி சிறுபான்மையினர் மீதான சிங்களப் பேரினவாதத்தை அடக்கி வாசிக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை கொடுத்திருந்த போதிலும் இதனை மீறிய பல அட்டூழியங்களையும் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலே சந்தித்திருக்கின்றோம்.
இதற்கு நல்லதொரு உதாரணமாக மறைந்த காமினி திஸாநாயக்கவின் யாழ்ப்பாண நூலக எரிப்பு, முஸ்லிம்களுக்கெதிரான கருத்துக்களை முன்வைத்தமை, சிறில் மெதியூ போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் பேராசிரியர்களான நளின் டீ சில்வா போன்றவர்கள் முஸ்லிம் விரோத முன்வைப்புக்களையும் பௌத்த மேலான்மைப் பாங்கையும் பின்பற்றி வந்திருப்பதைப் பார்க்கின்றோம்.
இந்த வரிசையில் வைத்துப் பார்க்கின்ற போது மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் சம்பிக்க ரணவக்க முக்கிய அமைச்சராக இருந்தது மட்டுமன்றி தன்னை ஒரு இடதுசாரியாக காண்பித்துக்கொண்டு முஸ்லிம் விரோத போக்குகளை மிகத்தீவிரமாக கடைப்பிடித்த ஒருவராவார். அதுமாத்திரமன்றி தமிழர்களின் போராட்டத்தில் முக்கிய இடம் வகித்த பிரபாகரனை முற்றாக ஒழித்துவிட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறைகாட்டிய ஒருவருமாவார். அவர் மகிந்தவின் ஆட்சியில் குழப்பங்களை ஏற்படுத்திய பொதுபலசேனாவுக்கு பக்கபலமாக இருந்தவர்களில் முக்கிய நபருமாவார்.
இன்றைய நல்லாட்சி அரசியிலும் சம்பிக்க ரணவக்க முக்கிய அமைச்சராக இருந்துகொண்டு பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் முஸ்லிம்கள் மீதான சிங்கள எதிர்க்கிளர்ச்சியை உண்டாக்குவதிலும் இன்று தனது பங்களிப்பைக் கைவிடாத நிலையைப் பேணுகின்றனர். இவர் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக நிற்கவேண்டும் என்ற ஒரு வெளிப்படுத்துகையையும் முன்னிறுத்தியிருக்கிறார்.
ஆகவே இலங்கையின் அரசியல் சூழ்நிலை என்பது பௌத்தவாத மேலீட்டுச் சிந்தனைகளை தம்வசமாக்கி ஆட்சிக்கு வருவதும் அந்த தயவில் தங்கியிருக்கின்ற ஒரு நிலையும் என்பது இன்று மட்டும் காணப்படக்கூடிய ஒன்றல்ல. அதேநேரம் பௌத்த மதகுருமார்களின் ஆதிக்கத்தை மன்னராட்சி தொட்டு ஜனநாயக ஆட்சி வரை புறக்கணித்துவிடாது ஏற்று ஆட்சிபுரிந்த ஒரு போக்கையும் காண்கின்றோம்.
இதற்கு விதிவிலக்காக இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களை முஸ்லிம்கள் நம்பத்தொடங்குவதென்பது யதார்த்தத்துக்கு புறம்பான அதீத நம்பிக்கை என்றே குறிப்பிட வேண்டும். ஆக இந்த இக்கட்டுக்குள் இன்றைய நல்லாட்சி அரசாங்கமும் இருப்பதாகத்தான் கருதவேண்டி இருக்கின்றது. இந்நிலையை மறைத்துச் செய்த உரையாடலாகவே ஜனாதிபதியின் மேற்படிய கருத்தை நாம் பார்க்கவேண்டியுள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்துநோக்கின் அது பௌத்த மதம் சார்ந்து நிற்பது புரியும். பௌத்த மதத்தின் மேலீட்டினை பறைசாற்றும் வகையிலும் அகன்ற பௌத்த இராஜ்ஜியத்தின் உருவாக்கமாகவும் இலங்கை மாறுவதை அடியொற்றியதாகவே அதன் அரசியல் வளர்ந்துவந்திருக்கின்றது. சிங்கள மக்களை பெரும்பான்மையாகக்கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது. ஆதலால் அம்மக்களுடைய அரசாங்கம் அமைவதென்பது தவிர்க்க முடியாததுதான். அதேநேரம் இதற்கெதிரான அரசாங்கம் இங்கு அமையவேண்டும் என எதிர்பார்ப்பது அறவே சாத்தியமற்றது என்பதும் துலம்பரமானது.
சிங்களவர் பெரும்பான்மையினர் என்கின்ற எண்ணம் அம்மக்களிடம் காலூன்றிக்கொண்டுள்ளது. அதன் அழுத்தங்கள் பௌத்த – சிங்கள பேரினவாத ஆதிக்கங்களாக மாறி சிறுபான்மைச் சமூகங்களான தமிழர்கள், முஸ்லிம்கள் மீது அதன் பாதிப்புக்கள் படிந்துவந்திருக்கின்றன. இதை ஏற்க இயலாதது மட்டுமன்றி அனுமதிக்க முடியாத ஒன்றுமாகும்.
ஏனெனில் பேரினவாதங்களின் அழுத்தங்கள் எப்போதும் சிறுபான்மைச் சமூகங்களைக் காவுகொள்வதிலும் அடக்கி ஒடுக்கி ஆள்வதிலும் கரிசனை கொண்டதாகும். இது எனறும் , எங்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பேரிடியாகவும், பாரிய நசுக்குதல்களுக்கும் வழிவகுத்ததாகவே அமையும். கூடவே இழப்புக்களையும் ஏற்படுத்திவிடும்.
இலங்கையின் பௌத்த – சிங்கள பேரினவாத ஆதிக்க சக்திகளின் அழுத்தங்கள் என்று நோக்கின் அவை மிகவும் பிற்போக்குத்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் சிறுபான்மைச் சமூகங்கள் மீது குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டு வந்துள்ளது. இவை வரலாற்று ரீதியான சான்றாதாரங்களுடன் நிரூபிக்கக்கூடியதாகவும் இருக்கின்றன.
இலங்கையின் பழங்குடி மக்களான தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இந்நாடு சொந்தமில்லை, இவ்விரு பகுதியினர்களும் இங்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் வந்தேறிய குடிகள், இலங்கையில் சிங்கள மக்கள் மட்டுமே பூர்வீகக் குடிகளாவர் என்கின்ற ஒரு கருத்து நிலை பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் நீண்டகாலமாக இருந்துவருகின்றது. இக்கருத்தியலை வேரூன்ற வைப்பதில் பௌத்த மேலான்மைப் போக்கினைக் கடைப்பிடித்த ஆட்சியாளர்களினதும் பௌத்த குருமார்களினதும் பங்குகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. அது பரந்து தொழிற்பட்டிருப்பதையும் வரலாறு நமக்கு நன்கு புடம்போட்டுக்காட்டத் தவறவில்லை.
மேற்படி கருத்து நிலையானது இலங்கையின் அமைதிக்கு நிரந்தர பங்கமாகவும் சமூகங்களுக்குள் இருக்க வேண்டிய பண்புகளான ஒற்றுமை, புரிந்துணர்வு, பரஸ்பர உறவு போன்றவைகள் அற்றுப்போகவும் வழிவகுத்திருக்கின்றன. அத்துடன் ஒரு சமூகத்தின் மீது மற்றொரு சமூகம் நிலையான பகையையும் சந்தேகப்பார்வையையும் தோற்றுவித்திருக்கின்றது.
பௌத்த குருமாரின் ஆளுமைகளும் அவர்களின் கருத்துக்களும் இலங்கையில் அமைந்த அரசாங்கங்களை கைகட்டி சேவை புரிய வைத்திருக்கின்றன. இன்னொரு பக்கம் பேரினவாதிகள் பௌத்த மேலான்மை வாதத்தினை முன்வைத்து ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு அதை ஒரு ஏணியாக உபயோகித்துக்கொண்ட வழிமுறையாக நமது நாட்டு அரசியலில் அடிக்கடி நிகழ்ந்த ஒன்றாகவும் இருந்துவருகின்றது.
இலங்கையின் மன்னராட்சி, காலணித்துவ ஆட்சி, சுதந்திரத்துக்கு பின்னரான ஆட்சிகளை எடுத்துக்கொண்டாலும் அங்கும் பௌத்த மத குருமாரின் செல்வாக்குகள் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளன. இவை அரசாங்கத்தில் பெரிதும் உட்சென்று “ இலங்கையின் அரசாங்கம் சிங்கள – பௌத்த அரசாங்கம் “ என்கின்ற போக்கினையும் “ இந்நாடு பௌத்தர்களினது” என்கின்ற உணர்வையும் மேற்கிளம்பச் செய்திருக்கின்றன.
இந்நிலை தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல. நன்கு திட்டமிட்டு காரியமாற்றி உருவாக்கிக்கொண்ட பெறுபேறு இது என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையின் சிங்கள மன்னர்களின் அரச சபைகளிலும் கோட்டை, கண்டி இராச்சியங்களிலும் பௌத்தத்தை முதன்மைப்படுத்திய ஆட்சி புரியப்பட்டிருந்தது என்பதை வரலாறு எடுத்து இயம்புகின்றது. சுதந்திரத்துக்குப்பின்னர் எழுதப்பட்ட முதலாம்(1972) இரண்டாம் (1978)குடியரசு யாப்புகளும் பௌத்த மதத்தை தேசிய மதமாகவும் முதன்மைப்படுத்தியும் அங்கீகரித்திருக்கின்றன. சுருங்கக் கூறுமிடத்து இலங்கை ஒரு பௌத்த நாடென்ற தன்மையினைப் பேணுவதில் பௌத்த பேரினவாதிகள் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்திருப்பதனை இவை சுட்டிக்காட்டுகின்றன.
பௌத்த தேசிய மேலாதிக்கத்தின் தீவிரமான மற்றொரு முகமாக ஜனாதிபதி, பிரதமர் உட்பட்ட அரசாங்க உயர்பதவிகளுக்கு சிங்கள சமூகத்தின் பௌத்த மதம் சார்ந்தவர்களே அதிகம் தெரிவுசெய்யப்படுகின்றனர். ஆயின் பௌத்த மேலான்மை, சாதி வேறுபாடு என்பனவும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
கோட்டை இராச்சியத்தை ஆட்சி புரிந்த மன்னன் 1557இல் கத்தோலிக்க மதத்துக்கு மாறியதனால் பௌத்த குருமார்களினால் அவன் புறக்கணிக்கப்பட்டான். மதமாற்றம் கோட்டை இராச்சியம் வீழ்வதற்கு வழிசமைத்தது. முதலாம் இராஜசிங்கன் 1590 இல் சைவ மதத்தை ஏற்றுக்கொண்டதனால் சீதாவாக்கை இராச்சியம் சிதைவுற்றது. அதேநேரம் பௌத்த மதத்தினையும் அதன் குருமாரினது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற சிங்கள அரசாங்கங்களையே சிங்கள மக்களின் பெரும்பகுதியினர் விரும்பி அரவணைத்து வந்திருக்கின்றனர். இப்போக்கினை இலங்கை அரசியல் வரலாறு நெடுகிலும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இலங்கையின் அரசியலில் “மதமும் அரசியலும் இரண்டரக் கலந்து” பேணப்பட்டு வந்திருக்கின்றது. மதமும் அரசியலும் இரு துருவங்களாக செயற்பட வேண்டும் என்ற கோட்பாடுகள் எழுந்தபோதிலும் இலங்கை அரசியலில் மதம் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற பாங்கையே காண்கின்றோம்.
சுதந்திர இலங்கையில் “பௌத்த ஜெயந்தி” விழாவினைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் உதவியும் அனுசரனையும் வழங்கியதுடன் அதன் ஆதிக்கம் ஆரம்பமாகின்றது.1954இல் உருவான “இலங்கை பௌத்த மண்டலய” 1956,1957 களில் பௌத்த ஜெயந்தி செயற்பாட்டுக்கு உதவியமையும் குறிப்பிடத்தக்கது. பெரும் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பௌத்த மதத்தை பாதுகாப்பதனை பிரதான இலக்காகக் கொண்டு செயற்பட்டது மறைவன்று. 1956 இல் பண்டாரநாயக்காவை வெற்றிபெறச் செய்தமையிலும் பௌத்த குருமார்களின் பங்கு இருந்துள்ளன.
பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை, டட்லி – செல்வா உடன்படிக்கை, சிறிமா – சாஸ்திரி உடன்பாடு என பல்வேறு தீர்வுத்திட்டங்கள் தீட்டப்பட்ட போதிலும் அவை அனைத்தும் நடைமுறைக்கு வராது தோல்வியுற்றன. இதற்கு பௌத்த குருமாரின் எதிர்ப்புக்கள் பிரதான இடத்தினைக் கொண்டிருந்தது. 1970களில் இடதுசாரிப் போக்கில் தீவிரத்தைக் கொண்டிருந்த அணியிலும் 1971இல் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியிலும் பௌத்த குருமார்களின் பங்கு இருந்தது என்றே நம்பப்படுகின்றது.
இலங்கை அரசியலில் பௌத்த பிக்குமாரின் செல்வாக்கு, ஆளுமைகள் என்பன நீண்டகால சங்கமத்தைக் கொண்டது. அவர்களின் கோரிக்கைகள், கருத்துக்கள் என்பனவற்றை முற்றாக நிராகரித்துக்கொண்டு அரசாங்கத்தை நடத்திச் செல்வது மிகவும் கஷ்டமானது. இந்நிலை அகற்றப்பட வேண்டும் என்பதில் வேறு அபிப்பிராயங்கள் இல்லை.
இலங்கை ஒரு பல் சமூகங்களுக்கும் சொந்தமான தேசம். இங்கு பல்வேறு சமயங்களும் சமமாக மதிக்கப்படுகின்ற போக்கிருப்பது அவசியமானதாகும். ஒரு நாட்டுக்குள் உரிமை என்பது சமூகத்துக்குச் சமூகம் வேறுபடக்கூடாது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனம் வலியுறுத்துகின்ற இன, மத உரிமை என்பன எல்லோருக்கும் சமமென்ற நிலைப்பாட்டினை நடைமுறைப்படுத்துகின்ற தலைமைத்துவத்தினைக் கொண்ட அரசாங்கம் ஒன்றினை இலங்கை சமூகங்கள் உருவாக்கிக்கொள்ளாத வரை நாட்டுக்கு மோட்சமும் இல்லை. மக்களுக்கு வெற்றியும் இல்லை.


Comments
Post a Comment