முஸ்லிம்களுக்கு சொந்தமான இரு கடைகள் மீது தீவைப்பு
* மிரிஹான, அம்பாறைப் பகுதிகளில் சம்பவம்
* 5 நாட்களுக்குள் நான்கு கடைகள் எரிப்பு
முஸ்லிம்களுக்கு சொந்தமான இரண்டு வர்த்தக நிலையங்கள் நேற்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மிரிஹானை மற்றும் அம்பாறை பகுதிகளிலேயே இவ்வாறு கடைகள் தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் நேற்றுவரை ஐந்து நாட்களுக்குள் நான்கு கடைகள் எரியூட்டப்பட்டுள்ள நிலையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
மிரிஹான சம்பவம்
மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவின்ன சந்தியில் விேஜராம பாதையில் இயங்கிவந்த முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையமொன்று நேற்று அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நாவின்ன ரெக்சின் சென்டர் எனும் இந்த வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதால் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தில் சி.சி.ரி.வி. கமெரா பொருத்தப்பட்டிருக்காததால் பொலிஸார் வர்த்தக நிலையத்துக்கு அருகிலுள்ள வைன் ஸ்டோர்ஸின் சி.சி.ரி.வி.கமெரா பதிவுகளை விசாரணைகளுக்காக பெற்றுக்கொண்டுள்ளனர்.
வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இம்தியாஸ் சம்பவம் தொடர்பில் விபரிக்கையில், அதிகாலை 4 மணிக்கு எனது உறவினர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடை எரிந்துள்ள விபரத்தைத் தெரிவித்தார். நான் உடனடியாகச் சென்றேன். அங்கே பொலிஸாரும் வந்திருந்தார்கள். மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைரேகை அடையாளங்களையும் பதிவு செய்தனர்.
நான் கடந்த 14 வருடங்களாக இந்த வியாபார நிலையத்தை நடாத்தி வருகிறேன். இரவில் கடையை மூடிவிட்டு மின்சார மெயின் சுவிட்சையும் ஓப் பண்ணி விட்டே செல்வது வழக்கம். அன்றும் அவ்வாறே மெயின் . சுவீட்சை ஓப் செய்து விட்டே சென்றேன்.
கடையின் பின் வாசலினாலே தீ மூட்டப்பட்டுள்ளது.
இது இனவாதிகளின் நாசகார செயலே அன்றி வேறொன்றுமல்ல. மிரிஹான பொலிஸிலும் இவ்வாறே வாக்குமூலம் கொடுத்துள்ளேன். மின் ஒழுக்கு ஏற்பட்டு கடை எரிந்துள்ளது என்று கூறவே முடியாது. எனக்கு சுமார் 2 கோடி ரூபா நஷ்டத்தை மேற்பட்டுள்ளது என்றார்.
மிரிஹான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை சம்பவம்
அம்பாறை மாவட்ட செயலத்திற்கு அருகாமையில் நடத்தப்பட்டு வந்த முஸ்லிம் ஒருவரின் உணவகம் தீயினால் சேதமடைந்துள்ளது. இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுவதுடன் இவ்வனர்த்தினால் உணவகத்தின் மேற்கூரை மற்றும் முன்கதவு, மின்விசிறி உட்பட சில உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக கடை உரிமையாளர் அம்பாறை பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
இவ்வுணகத்தை இறக்காமத்தைச் சேர்ந்த அஸ்வர் என்பவர் நடத்தி வந்துள்ளார். இங்கு பெரும்பான்மை இனத்தவர்களுக்கே வியாபாரம் அதிகம் இடம்பெற்றுவந்துள்ளதுடன், அரசாங்க ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கும் அதிகம் உணவுகள் வழங்குமிடமாகவும் இருந்து வந்துள்ளது.
இத் தீ அனர்த்தத்தின் காரணமாக இப்பிரதேச பெரும்பான்மை சமூகத்தினர் மற்றும் உணவுகளை பெற்று வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment