இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள்
பாணந்துறை; வெல்லம்பிட்டி பகுதிகளில் அதிகாலையில் சம்பவம்
பாணந்துறை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் இரு பள்ளிவாசல்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று முன் தினமும் நேற்றும் இவ்விரு தாக்குதல் சம்பவங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந் நிலையில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான , பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் ஆரம்பித்துவிட்டனவா என முஸ்லிம்களிடையே அச்ச நிலை தோன்றியுள்ளது.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் வெவ்வேறான இரு சிறப்பு விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பாணந்துறை பழைய பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களிடையே அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலின் மேல் மாடி பெற்றோல் குண்டுத் தககுதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை பகுதியில் உள்ள பள்ளிவாசல் கல் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று அதிகாலை 1.45 மணியளவில் கொழும்பு – கொஹிலாத்தை அல்இப்ராஹிமிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் முன்பக்க கேட்டும், பள்ளிவாசல் கதவும் உடைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதலை மோட்டார் சைக்கிள் ஒன்றிலும், வேன் ஒன்றிலும் வந்த இனந்தெரியாத 6 பேர் மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிவாசல் உடைக்கப்பட்டு தாக்கப்படுவதை தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவர் வீடியோ பதிவு செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளன. தாக்குதல் சம்பவம் உடனடியாக பள்ளிவாசலில் தங்கியிருந்த இமாம் மற்றும் பள்ளிவாசலில் தங்கியிருது பள்ளிவாசல் திருத்த வேலைகளைச் செய்பவர்களால் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது.
வெல்லம்பிட்டிய பொலிஸார் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வீடுகள், தொழிற்சாலைகள், காரியாலயங்கள், வர்த்தக நிலையங்களின் சி.சி.ரி.வி கமெரா பதிவுகளை பொலிஸார் பெற்றுள்ளனர். தடயவியல் பொலிஸ் அதிகாரிகள், தாக்குதல்களை மேற்கொண்ட இடங்களில் பதிவாகியுள்ள கைரேகை அடையாளங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சஞ்சீவ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்போர் ஸ்தலத்துக்கு விஜயம் செய்தனர். மேலும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் அர்சாத் நிஸாம்தீன், எம்.ஜே.எம்.பாயிஸ் ஆகியோரும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து சேத விபரங்களைப் பார்வையிட்டனர்.
இந் நிலையில் நேற்றுக் காலை ஸ்தலத்துக்கு சென்ற வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் நுகேகொடை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாத் ரணசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்பு பொலிஸ் குழு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொஹிலவத்த பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்
தாக்குதலுக்குள்ளான கொஹிலவத்த அல் இப்ராஹிமிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் டிரஸ்டி ஏ.ஆர்.எம்.முதஸ்ஸிர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்குகையில்;
‘திங்கட்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் இனந்தெரியாத 6 பேர் மோட்டார் சைக்கிள்களிலும், வேன் ஒன்றிலும் வந்துள்ளார்கள். அவர்கள் பள்ளிவாசல் முன் கேட்டின் பூட்டினை உடைத்து உள்நுழைந்து பள்ளிவாசல் கதவினையும் உடைத்துள்ளார்கள்.
இச்சம்பவத்தில் பள்ளிவாசல் ஹஸரத்தும், பள்ளிவாசல் திருத்த வேலைகளுக்காக வந்து தங்கியிருந்தவர்களும் விழித்து உடனே எங்ளுக்குப் போன் பண்ணினார்கள். நாம் அங்கு சென்ற போது அவர்கள் இருக்கவில்லை. தாக்குதலை மேற்கொள்ளும் போது ஹெல்மெட் அணிந்த ஒருவர் அதனை வீடியோ பண்ணியுள்ளார். இது திட்டமிட்ட தாக்குதல், வெளியிலிருந்து வந்தவர்களாலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடன் பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 20 பொலிஸார் வருகைத் தந்தார்கள். பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு சி.சி.ரி.வி கமெரா பொருத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம். பள்ளிவாசல் நிறப்பூச்சு பணிகளை பூர்த்தி செய்து விட்டு கமெராக்களை பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். 32 சி.சி.ரி.வி கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன’ என்றார்.
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் இத்தாக்குதலை கண்டித்துள்ளார். "இத்தாக்குதல் புதிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திக் கொண்டே அதனை வீடியோ பதிவு செய்துள்ளார்கள். எனவே இத்தாக்குதலில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என நம்புகிறோம்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நிதியத்திலிருந்து வளம் குறைந்த பள்ளிவாசல்கள் அனைத்திற்கும் சி.சி.ரி.வி கமெரா கொள்வனவு செய்வதற்கு பணம் ஒதுக்கப்பட வேண்டுமென அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.
பாணந்துறை
இதனிடையே பாணந்துறை பகுதியில் பள்ளிவாசல் மீதான தாக்குதல் நேற்று முன் தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.
நேற்று முன் தினம் அதிகாலை 3.00 மணியளவில் பள்ளி வாசலுக்கு பின்புறமாக உள்ள யன்னல் வழியாக மேல்மாடியின் கண்ணாடியை உடைத்து பெற்றோல் குண்டு வீசப்பட்டே இந்த தககுதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது பள்ளிவாசலின் மேல் மாடிக்கு செல்லும் படிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
குறித்த முஸ்லிம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் எவையும் இல்லை. எனினும் குறித்த பிரதேசத்தில் 50 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வியாபாரஸ்தலங்கள் காணப்படுகின்றன. வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வருவோர் தொழுகைகளை நிறைவேற்றும் முகமாகவே இந்தப் பள்ளிவாசல் கடைகளிடையே அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலுக்கு பின் பக்கமாக பாணந்துறை குப்பை மேடு அமைந்துள்ள நிலையில் அப்பகுதியை நோக்கி பள்ளிவாசலில் ஜன்னல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்னலே உடைக்கப்பட்டு மேல் மாடிக்கு பெற்றோல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சிங்கள மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறியப்படுத்தியதையடுத்தே பொலிஸார் ஸ்தலம் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்தும் பாணந்துறை பொலிஸார் ஊடாக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத ஸ்தலங்கள் மற்றும் மத விவகாரங்கள் தொடர்பில் அத்து மீறல்களை முன்னெடுப்போருக்கு எதிஒராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அது தொடர்பில் விஷேட விசாரணைகளை நடத்தவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.


Comments
Post a Comment