இனவிகிதாசாரத்திற்கு ஏற்றவகையில் முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டும்
தீர்மானம் நிறைவேற்றம்
முஸ்லிம்கள் மாவட்ட அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் சட்டப்படி வழங்க வேண்டுமென்ற தீர்மானம் கிழக்கு மக்கள் அவையத்தினால் இறக்காமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி, அக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.அன்சில், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் பிரதி அமைச்சர் எம்.அமீரலி, அக்கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல், செயலாளர் எம்.சுபைதீன் ஹாஜியார், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் (எஸ்.எஸ்.பி) அப்துல் மஜீத் உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள். அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் காணிப் பிரச்சினையை ஆராய்ந்து ஆவணங்களை தயாரித்துக் கொள்வதற்கு குழுவொன்றும் உருவாக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்,
இந்தப் பிரச்சினை தனியே அரசியல் பிரச்சினையல்ல. பாலஸ்தீனத்தில் நடைபெற்ற அத்துமீறல் குடியேற்றங்கள் போல் தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை துரத்தி, தூரமாக்கி, அந்த மக்கள் ஒட்டுமொத்த நிலத்திற்கும் சொந்தக்காரர்கள் அல்ல என்றாக்கிவிடுவது என்பது சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்தில் பேரினவாதிகளின் நீண்ட காலத்திட்டமாகும்.
சிங்கள மக்களுக்கு பெரிய அளவில் நிலங்கள் உள்ளன. அரசாங்கத்தின் அனுசரணையுடன் சட்டத்தை மீறி சிறுபான்மையினரின் நிலங்களை கபளீ கரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனை ஏன் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றால், பெரும்பான்மை என்பது தலைகளை மாத்திரம் எண்ணி எடுக்கும் விடயமல்ல.
இந்த நாட்டில் மூன்று பெரும்பான்மையினர் உள்ளனர். ஒன்று சிங்களப் பெரும்பான்மையினர், இரண்டு தமிழ்ப் பெரும்பான்மையினர், அடுத்தது முஸ்லிம் பெரும்பான்மையினர். இலங்கை முழுவதும் சிங்களவர்கள் பெரும்பான்மையாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்று பார்க்கும் போது தமிழர்கள் பெரும்பான்மையாகவும், கிழக்கைப் பார்க்கும் போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் உள்ளார்கள்.
இந்தப் பெரும்பான்மை சமன்பாட்டை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதே சிங்கள பேரினவாதிகள் திட்டமாகும். மாவட்ட ரீதியாகவும், மாகாண ரீதியாகவும், நாடு முழுவதிலும் சிங்களவர்களே பெரும்பான்மையினராக உள்ளார்கள் என்று நிறுவுவதற்காகவே சிறுபான்மையினரின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று தமிழர்களை ஆட்டி வைக்க முடியாதென்பதனை சர்வதேசம் உணர்ந்துள்ளது. இந்தியாவினதும், சீனாவினதும் ஆதிக்கத்தை இந்த நாட்டில் நிலை நாட்டுவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி முஸ்லிம்களை ஆட்டி வைக்க எண்ணுகின்றார்கள். எனவே, நாங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். எம்மிடையே காணப்படும் கட்சி வேறுபாடுகள், பிரதேச வேறுபாடுகள் போன்ற எல்லா வேறுபாடுகளையும் மறந்து முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும், எதிர்காலத்திற்கும் ஒற்றுமைப்பட வேண்டும். ஒற்றுமைப்படாது எதனையும் சாதிக்க முடியாது.
பிரதி அமைச்சர் எம்.அமீரலி உரையாற்றுகையில்,
காணிப் பிரச்சினை அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமின்றி மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் என எல்லா மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் காணிப் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றார்கள். பேரினவாதிகளினதும், இனவாதிகளினதும் இந்த சூழ்ச்சியிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தலைவர்கள் முன்வருதல் வேண்டும். இதனை நாங்கள் பிரிந்து நின்று சாதிக்க முடியாது. கட்சிகளுக்கு அப்பால் சமூகத்திற்காக ஒற்றுமைப்பட வேண்டியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லாஹ் பேசுகையில்,
யார் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களும், தமிழர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இப்போது முஸ்லிம் சமூகம் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் புத்திஜீவிகள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும். அதற்கு அமைவாக இந்த அவையம் அமைக்கப்பட்டுள்ளது.
எல்லா அரசியல்வாதிகளையும் இணைக்க வேண்டுமென்றும் இந்த அவையம் தீர்மானம் எடுத்துள்ளது. இது போன்று எல்லா மாவட்டங்களிலும் அமைய வேண்டும். பின்னர் தலைவர்கள் சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானித்தார்கள்.
அரசியல் தீர்வு விடயங்களில் எல்லா மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம்கள் பாதிக்காத வகையில் தீர்மானங்கள் எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை கொழும்பிலோ, கண்டியிலோ இருந்து கொண்டு வடக்கும், கிழக்கும் இணையட்டும் கரையோர மாவட்டம், வடக்கும், கிழக்கும் பிரியட்டும் என்று தீர்மானம் எடுக்க முடியாது. நாங்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென்று கிழக்கு மாகாண முஸ்லிம்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
காணிப் பிரச்சினை குறித்து மேல் எழுந்தவாரியாக அரசியலுக்கு வாக்கு எடுக்கும் ஒரு விடயமாக அதனை ஆக்கிக் கொள்வதற்கு முஸ்லிம்களும், புத்திஜீவிகளும் அதற்கு உடந்தையாக இருக்க முடியாது.
காணி விடயத்தில் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அதிகம் காணி கேட்கவில்லை. மாவட்ட அடிப்படையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற விகிதாசாரத்திற்கு அமைவாக சட்டப்படி காணிகள் வழங்க வேண்டுமென்ற தீர்மானத்தை இங்கு எடுக்க முடியுமென்று நினைக்கின்றேன். (இதற்கு எல்லா கட்சிகளின் பிரதிநிதிகளும், ஏனையவர்களும் சம்மதம் தெரிவித்துக் கொண்டார்கள்) அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் குடியேறக் காணியில்லை.
எல்லா கட்சிகளின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் இங்குள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இந்த அவையத்தில் சேர்ந்தாக வேண்டுமென்று அழைப்புவிடுக்கின்றேன்.
நாங்கள் சமூகத்திற்காக ஒன்றுபட்டுள்ளோம். அரசியல் நோக்கம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடைய கட்சியாகும்.
இக்கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன்அலி, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி பாறூக் உட்பட பலர் உரையாற்றினார்கள்.
(நிந்தவூர் நிருபர்)


Comments
Post a Comment