பல ஹஜ் முகவர்களின் குற்றங்கள் நிரூபணம்
கடந்த வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஹஜ்ஜாஜிகள் தாம் பயணித்த ஹஜ் முகவர் நிலையங்களுக்கெதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களில் பலர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளார்கள்.
ஹஜ் முறைப்பாடுகளை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஹஜ் விசாரணைக்குழு அரச ஹஜ் குழுவிற்குச் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கையில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 ஹஜ் முகவர் நிலையங்களுக்கு எதிராக 21 முறைப்பாடுகள் ஹஜ் விசாரணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 17 ஹஜ் முகவர் நிலையங்களில் 3 முகவர் நிலையங்களுக்கு இவ்வருடம் கோட்டா வழங்கப்படக் கூடாதெனவும் 2 ஹஜ் முகவர் நிலையங்களுக்கு குறைவான கோட்டா வழங்குமாறும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 12 ஹஜ்முகவர் நிலையங்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 ஹஜ் முகவர் நிலையங்களில் 6 முகவர் நிலையங்களுக்கான முறைப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம். ஆர். எம். மலிக் விசாரணைக்குழுவிற்கு சமர்ப்பித்-திருந்தார்.
முழுமையான விசாரணை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஹஜ் விசாரணைக் குழுவின் செயலாளர் ரபீக் இஸ்மாயிஸ் தெரிவித்தார்.
ஹஜ் விசாரணைக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும், வக்பு ட்ரிபுயுனலின் தலைவருமான யு. எல். ஏ. மஜீட் கடமையாற்றுகிறார்.
உறுப்பினர்களாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி நத்வி பஹாவுதீன் மற்றும் ஓய்வு பெற்ற நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் மொய்னுதீன் ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.


Comments
Post a Comment