கோத்தபாயவிடம் நாளை விசாரணை!


காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை இயந்திர உபகரணங்களை பழைய இரும்புக்கு விற்பனை செய்த மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடைபெறவுள்ளது.

1983ம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் இயங்கி வந்த காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை யுத்த சூழல் காரணமாக உற்பத்தியை நிறுத்தி மூடிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சீமெந்துத் தொழிற்சாலையினுள் இருந்த பல கோடி மதிப்புள்ள கருவிகளை பகுதி பகுதியாக வெட்டியெடுத்து பழைய இரும்புக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இந்த மோசடி வர்த்தகத்தில் குறித்த காலப்பகுதியில் அதிகாரத்தில் இருந்த பாதுகாப்புத் தரப்பின் உயரதிகாரிகளும் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இந்த மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒருகட்டமாக சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் இராணுவத்தளபதி தயா ரத்நாயக்க விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாண முன்னாள் கட்டளைத் தளபதிகளான மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க, மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆகியோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்

இதன் தொடர்ச்சியாக நாளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை மாலை மூன்றரை மணியளவில் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments