இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு அரசியலமைப்பில் ஒரு அடிப்படை அம்சமாக அமைச்சரவை அமைச்சர்களின் கூட்டுப்பொறுப்பு சொல்லப்பட்டிருக்கிறது.
ஓட்டமாவடி எம்.என்.எம்.யஸீர் அறபாத் (கல்குடா)
"குடியரசின் அரசாங்கத்தை நெறிப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பாக்கப்பட்ட ஓர் அமைச்சரவை இருத்தல் வேண்டும். அந்த அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு கூட்டாகப் பொறுப்பாயிருத்தலும் மறுமொழி கூறற்பாலதாய் இருத்தலும் வேண்டும்."
அதாவது, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பென்றால் அமைச்சரவையின் தீர்மானங்கள் தொடர்பில் ஒவ்வொரு அமைச்சரும் சம பொறுப்புடையவராகவும் பதில் சொல்ல வேண்டியவராகவும் காணப்படுகின்றார் என்பதாகும்.
இந்த அடிப்படையில், அமைச்சரவையின் ஒவ்வொரு தீர்மானங்கள் தொடர்பிலும் ஒவ்வொரு அமைச்சருக்குமான கடப்பாடாக இருப்பது அமைச்சரவையில் ஏதேனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதன் எந்த அமைச்சரும் ஆதரவளிக்காமலிருக்கவும் முடியாது. தான் ஆதரவளிக்கவில்லையென்று விலகி நடக்கவும் முடியாது. அவ்வாறு அமைச்சரொருவர் அமைச்சரவை செயற்பாட்டிலிருந்து வேறுபட விரும்பினால் அமைச்சர் தனது பதவியை இராஜனாமாச் செய்ய வேண்டும்.
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் J.A.L.குரே இவ்வாறு கருத்துத்தெரிவித்தார்.
"அமைச்சர்கள் ஒரே குரலில் பேச வேண்டும். அவர்களனைவரும் ஒரே கதையையே சொல்லவும் வேண்டும். ஒரு அமைச்சரின் கொள்கைக்கும் இன்னோரு அமைச்சரின் கொள்கைக்குமிடையே வேறுபாடிருத்தலாகாது. ஏனெனில், கொள்கையென்பது அமைச்சரவையினதாக அல்லது அரசாங்கத்தினதாகவே இருக்க வேண்டுமே தவிர, அமைச்சருடையதாக இருக்க முடியாது."
அமைச்சரவை கூட்டுப்பொறுப்பினூடாக தேவைப்படுத்தப்படும் பிரதான விடயமாக அமைச்சரவையின் நடவடிக்கைகள் இரகசியமாக பேணப்பட வேண்டுமென்பதாகும். அமைச்சரவைக்கூட்டங்கள் இரகசியமாக இருக்க வேண்டுமென்பதனூடாக அதன் அமைச்சர்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் விவாதிக்கக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சரவையில் அமைச்சர்கள் நேர்மையாக, வெளிப்படையாக விவாதிப்பதினூடாக கொடுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் வேறுபட்ட அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறது. அத்துடன், சம அளவான விட்டுக்கொடுப்புகளோடு இறுதி முடிவை எடுப்பதற்கும் ஊக்கமளிக்கிறது. இன்னும் பொது மக்கள் மத்தியில் இணைந்த உயர்தன்மையைப் பராமரிக்க உதவுகிறது. அத்தோடு, அரசாங்கத்தின் உறுதியான தன்மை உயர்த்தப்படுகிறது.
ஒவ்வொரு அமைச்சருக்குமான பாராளுமன்றத்தின் மீதான பொறுப்புடமையாக ஒவ்வொரு அமைச்சரும் அவருக்கு பொறுப்பாக்கப்பட்ட அமைச்சு விடயங்கள் தொடர்பில் தனிப்பட பாராளுமன்றத்திற்குப் பொறுப்புடையவராவார். அமைச்சர் தமது அதிகாரத்தின் கீழ் ஏதேனும் சட்டமுரணான செயல்களில் ஈடுபட்டிருப்பினும், பாராளுமன்றத்திற்கு தனிப்பட்ட ரீதியாகப் பொறுப்புடையவராவார்.
இலங்கை பத்திரிகைப்பேரவை 1973/5 சட்டத்திற்கிணங்க அமைச்சரவைக் கூட்ட நடவடிக்கைகள் பற்றிய பிரசுரங்கள், அமைச்சரவையின் ஆவணங்கள் பற்றிய பிரசுரங்கள், அமைச்சரவையின் அனுமதியின்றி முடிவுகளை வெளிப்படுத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
எனவே, மேலேயுள்ள விடயங்களை அவதானிக்கும் போது, அமைச்சரவை கூட்டங்களில் பேசப்படுபவை இரகசியம் பேணப்பட வேண்டும்., அவைகளை அமைச்சரவை அனுமதியின்றி வெளியிடுவது குற்றமென்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமைச்சரவைக் கூட்டங்களில் மாறுபட்ட கருத்துக்களிலும் விவாதங்கள் நடைபெறும். ஒரு சிலர் அங்கு நடைபெறும் விவாதங்களில் தங்களுக்குச் சாதகமானதை தங்களுக்கு சார்பான நபர்களூடாக வெளியிடுவமையும், அவைகள் செய்திகளாக வெளிவருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இவைகள் ஆரோக்கியமான நடவடிக்கைகளில்லை என்பதோடு, இவ்வாறானவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றைய அமைச்சர்களின் நேர்மையான, வெளிப்படையான விவாதங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக அமையக்கூடாது. வேறுபட்ட அபிப்பிராயங்கள் காணப்படும் பட்சத்தில் சம அளவான விட்டுக் கொடுப்புகளோடு இறுதி முடிவை எடுப்பதற்கான நடவடிக்கையாக அமைச்சர்களின் செயற்பாடுகள் இருக்க வேண்டுமென்பதோடு, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பையும் இரகசியம் பேணும் செயற்பாட்டையும் கௌரவ அமைச்சர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதோடு, அமைச்சரவையின் கௌரவத்தையும் மக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டும்.


Comments
Post a Comment