பல்கலைக்கழக மாணவ பிக்குவிற்கு விளக்கமறியல்


அனைத்துப் பல்கலைக்கழக பிக்குமார் மாணவ சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகதானந்த தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது சுகாதார அமைச்சினுள் அத்துமீறி அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக சுகதானந்த தேரரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து வியாழக்கிழமை நண்பகல் அளவில் சுகதானந்த தேரர் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்த பொலிஸ் குழுவொன்று அவரைக் கைது செய்ய வருகை தந்திருந்தனர்.

எனினும் பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாக ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாக அவரிடம் வாக்குமூலம் ஒன்றை மட்டும் பெற்றுக் கொண்டு பொலிசார் திரும்பிச் சென்றுவிட்டனர்.

பின்னர் மாலை நேரத்தில் மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்த மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிபதி துலானி வீரதுங்க, சுகதானந்த தேரரை எதிர்வரும் ஜுலை மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.

Comments