ஞானசாரரை தேடும் படலம் தொடர்கிறது : அபயமளிப்பது குற்றம் என்கிறது பொலிஸ்
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் நான்கு குழுக்களும் தொடர்ந்து அது தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் ஞானசார தேரரைக் கைது செய்ய நீதிமன்ற உத்தரவுகள் உள்ளதால் அவருக்கு அபயமளிப்பது சட்டப்படி குற்றம் என
குறிப்பிடும் பொலிஸார், ஞானசாரரைக் கைது செய்யும் தற்போதைய நடவடிக்கைகளில் நவீன தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பதாகவும் மேலும் சில அரசியல்வாதிகளின் பெயர் குறிப்பிட்டு அவர்கள் ஞானசார தேரருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களும் பொலிஸ் விசாரணைகளில் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதகவும் அதன் உண்மைத் தன்மையினை உறுதி செய்துகொண்ட பின்னரேயே அதனை அடியொட்டிய விசாரணைகளை செய்ய முடியும் எனவும் பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
எனினும், இது வரையிலான விசாரணைகளில் ஞானசார தேரருக்கு அமைச்சர்கள் எவரும் அடைக்கலம் வழங்குவதாகத் தெரியவரவில்லை எனவும், அமைச்சர்களின் பெயர்களை தொடர்புபடுத்தி இவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் பொலிஸ் விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலோ அல்லது அரசியல் நோக்கிலான கருத்துக்களாகவோ இருக்கலாம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர்யந்த ஜயகொடி தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கு தற்போது பிடியாணை உள்ள நிலையில் அவருக்கு அபயமளிப்பது சட்டப்படி குற்றமாகும். இது சட்டத்தில் உள்ள ஏற்பாடு. இது ஞானசார தேரர் விடயத்திலும் பொருத்தும்.
ஞானசார தேரரை யார் மறைத்து வைத்திருக்கின்றார் என இன்னும் தெரியாது. எனினும் அவர் ஒரு திட்டமிட்ட அமைப்பின் செயலாளர் என்ற ரீதியில் மிகத் திட்டமிட்டே மறைந்துள்ளார். எனவே அவரைக் கைது செய்ய தொடர்ந்தும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பிரியந்த ஜயகொடி மேலும் குறிப்பிட்டார்.


Comments
Post a Comment