கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு உணவு பிரச்சினைகள் ஏதும் இல்லை
சிக்கல்கள் இருப்பின் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் தலதா
கட்டாரில் இருக்கும் இலங்கையர்களுக்கு உணவு பிரச்சினைகள் ஏதும் இல்லை. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்போம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் 8அரபு நாடுகள் கட்டாருடனான ராஜதந்திர உறவுகளை நிறுத்திக்கொண்டுள்ளதுடன் கட்டாருக்கான உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வதையும் நிறுத்திக்கொண்டுள்ளன. அதனால் கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்கள் உணவு பிரச்சினைக்கு முகம்கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கட்டார் அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து மத்திய கிழக்கில் இருக்கும் 8அரபு நாடுகள் கட்டாருடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொண்டுள்ளன.
இதன் காரணமாக கட்டாருக்கு உணவுப்பொருட்கள் செல்வது ஓரளவு தடைப்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
என்றாலும் கட்டாரில் ஒரு இலட்சத்தி 40ஆயிரம் இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். அவர்களுக்கு உணவுப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவ்வாறு உணவு பிரச்சினை ஏற்படும் நிலை வருமாக இருந்தால் அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன் கட்டாரில் இருக்கும் இலங்கையர்கள் நாட்டுக்குவரத் தேவையாக இருந்தால் எமது தூதரகத்தில் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளோம். கட்டாரில் தொழில் புரிபவர்கள் தூதரகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். யாருக்காவது பிரச்சினை இருந்தால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்போம்.
இதேவேளை, கட்டார் பிரச்சினைக்கு தீர்வு உடனடியாக காண்பதற்காக குவைட் அரசாங்கம் முன்வந்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
அத்துடன் கட்டாரில் இருக்கும் அனைத்து நாடுகளின் தூதுவர்களையும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment