சவுதி அரேபியாவில் மனைவி, குழந்தைக்கு வரி! திசை திரும்பும் இந்தியர் வாழ்க்கை..?
வரிகள் இல்லாத நாடாக இருந்த சவுதி அரேபியாவில் நடப்பாண்டு பட்ஜெட்டில் இருந்து வரிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியா தொழிலாளர்கள் பாடுதான் படுதிண்டாட்டமாகிவிட்டது.
சவுதி அரேபியாவில் மனைவியுடன் வசிப்பவர்கள் முற்பண வரி கட்ட வேண்டும் என்பதால் பலரும் தங்களின் மனைவி, குழந்தைகளை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டு திருமணமாகாதவரின் (பேச்சிலர்) வாழ்க்கைக்கு மாறி வருகின்றனர்.
இதற்கு காரணம் வரிதான் கடல் கடந்து பணம் சம்பாதிக்கச் செல்லும் இந்தியர்கள், ஓரளவிற்கு நல்ல வருமானம் கிடைத்த பின்னர் மனைவி, குழந்தைகளை தங்களுடனேயே அழைத்து சென்று வைத்து கொள்வது வழக்கம்.
சுமார் 41 இலட்சம் இந்தியர்கள் சவுதி அரேபியாவிற்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர். 5000 ரியால்கள் சம்பளம் பெறுபவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது.
மனைவி, இரண்டு குழந்தைகள் என்றால் அவர்கள் தங்குவதற்கு மாதத்திற்கு 300 ரியால்வரை முற்பண (அட்வான்ஸ்) வரி கட்ட வேண்டும். இதனால் இந்திய தொழிலாளர்களின் நிலையே திண்டாட்டமாகி விட்டது.
சவுதி அரேபியா அரசு, நடப்பாண்டு பட்ஜெட் தாக்கலின் போது புதிய வரியை அமல்படுத்தியது. அதன்படி ஜூலை மாதம் முதல் வெளிநாடுகளில் இருந்து குடியேறிய ஒவ்வொருவருக்கும் வரி கட்ட வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்துள்ளது.
அந்த திட்டத்தின் படி இந்தியர்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து குடியேறிய தொழிலாளர்கள், தங்களின் மனைவி குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் 100 ரியால்களை வரியாக கட்ட வேண்டும்.2020 ஆம் ஆண்டு சவுதியில் மனையுடன் வசிக்கும் இந்தியர் மாதம் 400 ரியால் வரை வரி கட்ட வேண்டியிருக்கும்.
வெளிநாடுகளில் இருந்து குடியேறி வேலைக்கான விசாவில் தங்கியிருப்போர் இக்வாமா என்ற குடியிருப்பு அனுமதியை புதுப்பிக்கும் போது முற்பணமாக ஒரு ஆண்டிற்கு 1200 ரியால்களை செலுத்த வேண்டும்.
2018ஆம் ஆண்டு அது மாதத்திற்கு 200 ரியால்களாகவும், 2019ஆம் ஆண்டு முதல் மாதம் 300 ரியால்களாகவும் அது அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
5000 ரியால்கள் சம்பாதிக்கும் இந்திய தொழிலாளி ஒருவர் ஓராண்டுக்கு தன் மனைவியை உடன் வைத்துக்கொள்ள 1200 ரியால் வரை வரி கட்ட வேண்டும் என்பதால் பெரும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அதே நேரத்தில் மனைவியுடன் இரண்டு குழந்தைகள் உடன் இருந்தால் 3600 ரியல்கள் வரை அதாவது 62000 ரூபாய் ஆண்டுக்கு வரியாகவே போய் விடும்.
அப்புறம் எப்படி குடும்பம் நடத்துவது, சொந்த ஊருக்கு பணத்தை அனுப்புவது. பணத்தை சேர்த்து வைத்து சொந்த ஊரில் வீடு கட்டுவது எப்படி என்று யோசிக்கும் இந்தியர்கள் மனைவி, குழந்தைகளை சொந்த நாட்டிற்கு அனுப்பிவிட்டு மீண்டும் திருமணமாகாத வாழ்க்கைக்கு மாறி வருகின்றனர்.


Comments
Post a Comment