சிறந்த ஊடகக் கலாசாரத்தை கட்டியெழுப்ப அரச ஊடகங்கள் முன்னணி வகிக்க வேண்டும் : ஜனாதிபதி


சிறந்ததொரு தார்மீக ஊடகக் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அரச ஊடகங்கள் முன்னணி வகிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். 

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் 38 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டிடத்தொகுதியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

இந்த நாட்டில் அரச ஊடகங்களை வரலாற்றில் மிக மோசமாகவும் பண்பாடற்ற முறையிலும் பயன்படுத்திய சந்தர்ப்பம்தான் பொது அபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலில் கலந்துகொண்ட சந்தர்ப்பமாகும் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்று தமக்கெதிராக முன்வைக்கப்பட்ட அவதூறுகள் வேறு எந்தவொரு அரசியல்வாதிக்கு அல்லது ஜனாதிபதி அபேட்சகருக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.  

வருடா வருடம் முன்னேற்றமடைவதற்குப் பதிலாக இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அரச ஊடகங்கள் மிக மோசமான நிலையை அடைந்திருந்தது. அத்தகைய மோசமான நிலை எதிர்காலத்தில் ஊடகத்துறைக்கு ஏற்படக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்தகைய போலிப்பிரசாரங்களை அன்று தமக்கெதிராக முன்வைத்தமை ஒரு சிறிய வறிய குடும்பத்தைச் சேர்ந்த நான் பெரும் மனிதர் என எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரும் சவாலாக இருந்த காரணத்தினாலாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டது தனது குடும்பத்தில் எவரையும் ஜனாதிபதி பதவிக்கோ அல்லது பிரதமர் பதவிக்கோ கொண்டுவருவதற்காக அல்ல என்பதுடன் எதிர்காலத்திலும் அனைத்து சவால்களுக்கும் முகம்கொடுத்து நாட்டுக்காவும் மக்களுக்காவும் பெறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கேயாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். 

சிறந்த ஊடகத்துறையின் மூலமே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, சுதந்திர ஊடகத்தின் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் முகாமைத்துவமும் ஊடகவியலாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் 5 மாடிகளைக்கொண்ட புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி, விசேட விருந்தினர் புத்தகத்திலும் நினைவுக் குறிப்பொன்றை பதிவு செய்தார். 

தெற்காசியாவின் முதலாவது வர்ணத் தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் தொல்பொருள் கூடத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார். 

ஊடக நிறுவனத்தின் வெளிக்கள ஒலிபரப்பு வாகனம் மற்றும் புதிய ஒளிப்பட கட்டிடத் தொகுதியையும் ஜனாதிபதி பார்வையிட்டார். 

Comments