தடைகள் கட்டாரை பாதிக்காது : மாற்று வழிகள் தயார்
கேள்வி : உங்களது நாடு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையினைச் சீர்குலைத்துவரும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், அல்-கைதா, சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் காதிப் பிரதேசத்தில் ஈரானின் ஆதரவோடு செயற்பட்டுவரும் சில ஐ.எஸ். அமைப்பின் பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புக்களுக்கு ஆதரவளித்து வருவதாக சவூதி அரேபியாவினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா?
பதில் : இந்தக் குற்றச்சாட்டு பல்வேறு முரண்பாடுகளை கொண்டுள்ளது. ஏனெனில், ஒரு புறத்தில் நாம் ஈரானுக்கு ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறமாக சிரியாவிலுள்ள தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. சவூதி அல்லது யெமனிலுள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இன்னொரு வகையில் நாம் குர்துகளுக்கு ஆதரவளிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அனைத்து யுத்தகளங்களும் மோசமானவையாகும். சவூதிக்கு எதிரான பிரிவினைவாத அமைப்பான அல்-கதீபுக்கு நாம் ஆதரவளிப்பதாகக் குறிப்பிடப்படுவது முற்றுமுழுதாக பொய்யான தகவலாகும். ஏனெனில் சவூதியினதும் எம்முடையதும் பாதுகாப்புப் படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் ஒத்துழைத்து சவூதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சேவையாற்றி வருகின்றனர்.
கேள்வி : சற்று சீ.என்.என். உடன் முன்னர் பேசிய ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர், முன்னர் சிரியாவின் அல்-கைதா என அறியப்பட்ட அல்நுஸ்ரா இயக்கம், லிபியாவின் சைனாய் பிரதேசத்திலுள்ள பயங்கரவாதக் குழு உள்ளிட்ட பிரிவினைவாதக் குழுக்களுக்கு கட்டார் நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு உங்களது குறிப்பான பதில் என்ன?
பதில் : நுஸ்ரா அல்லது அல்-கைதா அல்லது பிற அமைப்புக்களுக்கு நாம் எவ்வித ஆதரவையும் வழங்கவில்லை. எமது நட்பு நாடுகளுடன் இணைந்து சிரியாவில் நாம் புரியும் யுத்தம் எமது நிலைப்பாட்டிற்கு தகுந்த சான்றாகும். எமது நிலைப்பாடு என்பது மிகவும் உறுதியானது.
நாம் சிரிய மக்களுக்கு அவர்களுக்கான உரிமை மற்றும் அவர்களுக்கான நீதி மற்றும் சுதந்திர வாழ்வுக்காக நாம் ஆதரவளிக்கின்றோம். எங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய்யான தகவல்களின் அடிப்படையில் புனையப்பட்டவையாகும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பிழையான தகவல்களே காரணம் என நாம் கருதுகின்றோம்.
எம்மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படை என்னவென்றால் எமது தேசிய செய்தி முகவரகம் ஊடுருவப்பட்டு பொய்யான தகவல்கள் உட்சேர்க்கப்பட்டமையாகும். குறித்த ஊடுருவல் தொடர்பில் எப்.பீ.ஐ.யும் உறுதிப்படுத்தியுள்ளது.
கேள்வி :இஸ்லாமிய தீவிரவாத அல்லது மதத் தீவிரப்போக்குக் கொண்டோருக்கு நிதியுதவி வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நீங்கள் கூறுவது என்ன?
பதில் : அனைவரையும் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கவே கட்டார் முனைகிறது. நாம் சமாதானத்தை வலியுறுத்துகின்றோம், வெளிப்படையான இராஜதந்திரத்தை வலியுறுத்துகின்றோம், பேச்சுவார்த்தை, கல்வி மேம்பாடு, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு போன்றவற்றை கட்டார் உருவாக்குகின்றது.
அகதி முகாம்களில் இளஞ்சிறார்களுக்கு ஆயுதங்களுக்கு பதிலாக சிறந்த கல்வியினை நாம் வழங்குகின்றோம். பயங்கரவாதத்திலிருந்து அனைவரையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்கின்றோம்.
கேள்வி :ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் ஆகியவற்றோடு ஆதாரபூர்வமான தொடர்புகளைப் பேணுகிறீர்களா? அவ்வாறெனில் அவற்றை நிறுத்திக்கொள்வீர்களா ?
பதில் : நான் ஏற்கனவே கூறியதுபோன்று காட்டார் இராஜதந்திரரீதியான அணுகுமுறைகளில் நம்பிக்கை கொண்டுள்ளது. முதலில் நான் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். அதாவது, ஹமாஸின் பிரசன்னம் என்பது கட்டாரில் அதன் அரசியல் அலுவலகம் இருந்தது. தற்போது ஹமாஸின் தலைமைத்துவம் பலஸ்தீனத்தின் உள்ளே காஸாவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஹமாஸின் தலைவர்கள் அவ்வப்போது வருகிறார்கள், போகிறார்கள். அதுதவிர, பலஸ்தீனத்தில் பேச்சுவார்ததை, நல்லிணக்கம் தொடர்பான செயற்படுகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். பலஸ்தீனத்தில் காணப்படும் பிரிவினைகளை சீர்செய்வதற்கு மத்தியஸ்தம் செய்வதில் அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்தினையும் இணைத்துக்கொண்டு கட்டார் காத்திரமான வகிபாகத்தினைக் கொண்டுள்ளது.
கேள்வி :வெளிநாட்டமைச்சர் அவர்களே, அந்த விடயத்தைப் பொறுத்தமட்டில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது. அப்படியென்றால் தற்போதும் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கட்டாரில் இருக்கிறார்கள் எனக் கூறுகிறீர்களா?
பதில் : ஆம், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கட்டாரில் இருக்கிறார்கள். வெளியேறுதல் என்ற தீர்மானம் ஹமாஸினாலேயே எடுக்கப்பட வேண்டும். நாம் அவர்களை வெளியேறுமாறு கோரப்போவதில்லை. கட்டாரில் இருப்பதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அவர்கள் கட்டாரில் மாத்திரம் இருக்கவில்லை. இன்னும் பல நாடுகளிலும் அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
கேள்வி :இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஏனைய நாடுகளால் குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுதப்பட்ட அமைப்பாகும். தங்களது வளைகுடா நட்பு நாடுகளுக்கு மிகுந்த தொந்தரவைத் தரும் வகையில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான தொடர்பினை தொடர்ந்து பேணுவீர்களா?
பதில் : இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. சாதாரணமாக நாடுகளுடனேயே எமது தொடர்புகள் இருக்கும். நாம் ஒரு நாடு எமது தொடர்புகள் இன்னுமொரு நாட்டுடனானதாகவே இருக்கும். நாம் எகிப்துடனான தொடர்புகளையே பேணிவருகின்றோம். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புகளைப் பேணவில்லை. துனீஷியாவில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு ஆட்சி செய்யவில்லை. துனீஷியாவுக்கு நாம் ஆதரவளித்து வருகின்றோம்.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் தொடர்புகளைப் பேணுவதாகத் தெரிவிக்கப்படும் கதைகளுக்கு நூற்றுக்கணக்கான தடவைகள் நாம் அவ்வமைப்புடன் தொடர்புகளை பேணவில்லை என்பதை கூறியிருக்கின்றோம். பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் நாம் அதனை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க முடியாது. அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடுவதென்றால் அவ்வமைப்பின் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே அதனை மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி :அவ்வமைப்பினுடனான தொடர்புகளை குறைத்துக்கொள்ளாதவிடத்து சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிவற்றுடனான பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று கூறலாமா ?
பதில் : சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றிற்கும் கட்டாருக்கும் இடையிலான முரண்பாடு வெளிநாட்டுக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இது கேள்விக்கு உட்படுத்த முடியாத விடயமாகும். ஏனென்றால் ஒவ்வொரு நாடும் தனக்கென இறைமையைக் கொண்டிருக்கின்றன. நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவது என்னவென்றால், எமது நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த விடயமும் அதாவது, கட்டாரில் இருந்துகொண்டு பிழையான செயல்களில் ஈடுபடுவதாக நிரூபணமாகும் பட்சத்தில் அதுபற்றி பேசி உரிய நடவடிக்கை எடுக்க ஒருபோதும் நாம் தயங்கப்போவதில்லை.
ஆனால் ஏனைய நாடுகளின் கொள்கைளுடன் முரண்படுகிறது என்பதற்காக எமது கொள்கைகளை மாற்ற முனைவது மற்றும் தலையீடு செய்ய முனைவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கட்டார் தனக்கென கொள்கைகளை கொண்டுள்ளது. நாம் எப்போதும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
கேள்வி :சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பவை ஈரான் தொடர்பில் நீங்கள் எவ்வாறு நடந்துகொள் வேண்டும் என எதிர்பார்ப்பது போல வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்துவ நாடு என்ற வகையில் ஈரானின் செல்வாக்கினை எதிர்கொள்வதற்கு நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன ?
பதில் : எமக்கும் ஈரானுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறதா என்றால் ஆம் இருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒருமித்த கொள்கையின் அடிப்படையில் அனைத்து வளைகுடா நாடுகளின் தலைவர்களுடனும் அதனை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். ஈரானுடன் உறவுகளை அனைத்து நாடுகளும் பேணவேண்டும், அது அவசியமுமாகும். ஏனென்றால், ஈரான் எமது அண்டை நாடாகும். யாராலும் புவியியலை மாற்ற முடியாது. நாம் ஒன்றாகவே சகவாழ்வு வாழ வேண்டும். கோபமூட்டும் செயற்பாடுகளினால் நாம் எதனையும் சாதித்துவிடமுடியாது. பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து பேசுவதனூடாகவே மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
கேள்வி :இறுதியாக, கட்டாருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் எவ்வளவு காலத்திற்குத் தங்களது நாட்டினால் தாக்குப்பிடிக்க முடியும் என கருதுகிறீர்கள் ?
பதில் : நான் ஒன்றை உறுதியாகக் கூறமுடியும். தற்போது வர்த்தகம் சுமுகமாக நடைபெற்று வருகிறது, உணவு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை. ஆம் எமக்கான சில உணவு விநியோகங்கள் எல்லைக்கப்பால் இருந்து வருபவையாகக் காணப்படுகின்றன.
எனினும் அதற்கான மாற்று வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. களஞ்சிய ஏற்பாடுகள் கட்டாரில் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடை எவ்விதத்திலும் கட்டாரைப் பாதிக்காது. ஏனெனில், சர்வதேச கடல்வழி மற்றும் வான்வழி விநியோகங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் மூலம் கட்டாரின் இயல்பு வாழ்க்கை எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என நாம் உறுதியாக நம்புகின்றோம்


Comments
Post a Comment