சிறுவர் துஷ்பிரயோகங்களை இனவாத நோக்குடன் சித்தரிப்பது தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பாதிக்கும். அ.அஸ்மின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்
சிறுவர் துஷ்பிரயோகங்களை இனவாத நோக்குடன் சித்தரிப்பது தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கனேடிய தூதுவராலய அதிகாரியுடனான சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுட்டிக்காட்டினார்; யுத்தத்திற்குப் பின்னரான வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுநிலை குறித்தும், மீள்குடியேற்ற செயற்பாடுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் கனேடிய தூதரக அதிகாரி ஜெனீபர் ஹார்ட் அவர்களுக்கும் வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தவர்கள், அரசியல் பிரதிநிதிகளோடும் யாழ்ப்பாணத்தில் 6-6-2017 அன்று இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார், அவர் மேலும் குறிப்பிடுகையில்
1980களுக்குப் பிற்பட்ட வடக்குக் கிழக்கிலே இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான உறவு திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது; ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இரண்டு சமூகங்கள் குறித்தும் பரஸ்பர சந்தேகங்கள் இரண்டு சமூகத்தின் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டன. முஸ்லிம்களை தமிழ் மக்களின் எதிரிகளாகவும்; தமிழர்களை முஸ்லிம்களின் எதிர்களாகவும் சித்தரிக்கும் நிகழ்வுகள் ஏராளமாக இடம்பெற்றன. முஸ்லிம் எல்லைக் கிராமங்களை தமிழ் ஆயுததாரிகள் அழித்தார்கள், என்று சொல்லப்படுகின்றது; உண்மையில் தமிழ் ஆயுத தாரிகளா அல்லது கூலிப்படையினரா அத்தகைய செயற்பாடுகளை செய்தார்கள், என்று உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது. அதேபோன்று முஸ்லிம் ஊர்காவல் படையினரால் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டார்கள், என்று சொல்லப்படுகின்றது; ஆனால் உண்மையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர்தான் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள், என்று எதுவித ஊர்ஜிதமான தகவல்களும் கிடையாது.
இவ்வாறு இரண்டு சமூகங்களுக்கும் இடையில் பகைமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அதன் உச்சக்கட்டமாகவே 1990களில் கிழக்கின் முஸ்லிம் மக்கள் மீதான நாசகாரத் தாக்குதல்களும், வடக்கின் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையுமாகும். தமிழ் மக்களின் ஆயுததாரிகள் சற்று நிதானமாகவும் தூரநோக்குடனும் சிந்தித்திருந்தால் இத்தகைய இடைவெளி ஏற்பட்டிருக்காது. இன்றும்கூட அந்தப் பகைமை உணர்வு இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் இருக்கின்றது; அது முற்றாக இல்லாமல் செய்யப்படவில்லை. இருப்பினும் இப்போது இத்தகைய முரண்பாடுகளை இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் மனம்விட்டுப் பேசக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. இதனை நாம் சாதகமாகப் பயன்படுத்தவே முயற்சிக்கின்றோம்.
அண்மையில் மூதூர் பிரதேசத்திலே மல்லிகைத்தீவு கிராமத்தில் இடம்பெற்ற அசிங்கமான சம்பவம் எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றது. சிறுவர் துஷ்பிரயோகத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் இன, மத, மொழி, வேறுபாடுகளுக்கு அப்பால் தண்டிக்கப்பட வேண்டியவர்களே; இதுவே முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாகும்.
ஆனால் இப்பிரச்சினையை இனவாத நோக்குடன் அணுகுகின்றபோது முஸ்லிம் மக்கள் நீதிக்காக குரல்கொடுக்கும் நிலையில் இருந்து பின் தள்ளப்படுகின்றார்கள். இது ஆரோக்கியமானதல்ல, முஸ்லிம் சமூகத்தைச் சர்ந்த ஒருவர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற போது அவர்களை குற்றவாளியாகக் காண்பது தவறல்ல; அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிகளாக மாற்றிவிடக்கூடாது. நெடுந்தீவிலே வித்தியாவின் கொடூரப் படுகொலையின்போது குற்றவாளிகளை அடையாளம் கண்டோமே தவிர ஒட்டுமொத்த நெடுந்தீவு மக்களையோ, அல்லது ஒரு குறித்த சமூகத்தையோ நாம் குற்றவாளிகளாக காணவில்லை. எனவே இத்தகைய பக்குவநிலைகள் இரண்டு சமூகத்திலும் ஏற்படுத்தப்படவேண்டும். அப்போது மாத்திரமே இரண்டு சமூகங்களுக்குமிடையிலான ஆரோக்கியமான நல்லிணக்கம் ஏற்படும். என்றும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் காணப்படும் பிரதான சவால்கள் குறித்தும், அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ள மீள்குடியேற்றப் பொறிமுறையில் காணப்படும் முக்கிய குறைபாடுகள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது.
தகவல்.என்.எம்.அப்துல்லாஹ்


Comments
Post a Comment