கல்குடா மதுபான நிறுவன அனுமதி தொடர்பில் விரைவில் அம்பலமாகும்: ரவி கருணாநாயக்க


மட்டக்களப்பு, கல்குடா, கும்புறுமூலை வேம்பு பகுதியில் சுமார் 20 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் கட்டப்பட்டு வருகின்ற மதுபானசாலைக்கான அனுமதி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக அம்பலப்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்னர் பௌத்த மக்களின் பெருந்தலைவர்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயகர்களை சந்திப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் இன்று கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எத்தனோல் போன்ற போதைப்பொருள் உற்பத்திகளால் எழுந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைந்து முற்றுப்புள்ளி வைத்ததைப் போன்று இந்தப் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வொன்று கிடைக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டிலுள்ள பிரபல மதுபான உற்பத்தி நிறுவனம் தனது கிளை ஒன்றை மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவது தொடர்பில் பல தரப்பட்ட வகையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

குறித்த மதுபானசாலை நிறுவனம் அமைக்க உத்தேசிக்கப்பட்ட இடத்திற்கு மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பாக அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர்கூட அண்மையில் தாக்கப்பட்டடிருந்தனர்.

தற்பொழுது இரு ஊடகவியலாளர்களுக்கான விசாரணைகூட வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன், மதுபான உற்பத்தித் தொழிற்சாலையை உடன்' நிறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன் கடும் எதிர்ப்பை மக்களோடு மக்களாக நின்று வெளியிட்டு வருகின்றனர்.

கல்குடா மதுபான உற்பத்தித் தொழிற்சாலைக்கு முன்வைக்கப்பட்ட அனுமதிக்கான கோரிக்கைக்கு எவ்வாறு அனுமதி பெறப்பட்டதென தற்போது விசாரணை இடம்பெறுகின்றது. அதனூடாக உண்மையை தெரிந்துகொள்ள முடியும்.

நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு பயோ பூல் முறைக்கு மாற்றுவது தொடர்பாகவும் தெரியமுடியும். எத்தனோல் என்ற சொல் ஊடகங்களே வெளியிட்டன. எத்தனோலை உற்பத்தி செய்ய எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.

எனவே இந்தப் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வுகண்டதுபோல இந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாணமுடியும்.நாட்டை சிறந்த பாதையில் இட்டுச்செல்வதே எமக்கு உள்ள அவசியமாகும் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments