தமிழ் - முஸ்லிம் அமைச்சர்களும் வெறுப்புணர்வை தூண்டுகின்றனர்
அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் மாத்திரமல்ல, அவரைப்போல் முஸ்லிம், தமிழ் அமைச்சர்களும் எம்பிக்களும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை பேசுகிறார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பொலிஸார் சிலரை கைது செய்துள்ளார்கள். என்றாலும் பொலிஸாரின் முன்னெடுப்புகள் போதாது. அவர்கள் துரிதமாக செயற்படவேண்டும்.
எமது நாட்டில் ஜனநாயகத்துக்கு சவால்விடும் சில குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்கள் உலகில் தீவிரவாத குழுக்களுடன் சம்பந்தப்பட்டவைகளாகும்.
இவ்வாறான குழுக்களின் செயற்பாடுகள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது. நாட்டின் சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் கடுமையாக அமுல் நடத்தப்படவேண்டும்.
முஸ்லிம்கள் தமது கடைகள், பள்ளிவாசல்களுக்கு எதிராக 25 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். இந்துக்கள் கிழக்கில் 61 கோயில்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். கிறிஸ்தவர்கள் தங்கள் ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். பௌத்தர்கள் தங்கள் தொல்பொருள் பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் முறையிடுகிறார்கள்.
இச்சம்பவங்களின் பின்னணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் இருக்க வேண்டும். பொலிஸார் இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களை தராதரம் பாராது கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இலங்கையில் மாத்திரமல்ல உலகெங்கும் இவ்வாறான சம்பவங்கள் நடந்தேறுகின்றன. ஜேர்மனியில் 97 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இதேபோன்று இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்காவில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கில் கொலை செய்யப்படுகிறார்கள். ஷியா – சுன்னி கலவரத்தில் அநேகர் இறக்கிறார்கள்.
ஞானசாரதேரரை நான் ஒளித்து வைக்கவில்லை
ஞானசாரதேரரை நான் பாதுகாக்கவில்லை. ஒளித்து வைக்கவில்லை. ஞானசாரதேரரை ஒளித்து வைக்க வேண்டிய தேவையுமில்லை. ஞானசாரதேரர் ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து 2004 ஆம் ஆண்டு விலகிச் சென்றார். நாம் பிக்குகளுடன் செயற்படும் போது அவர்களுக்கு கௌரவமளிக்கும் வகையில் செயற்பட்டோம். ஞானசாரதேரர் எம்முடன் இருக்கும் போது எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை.
2004 இல் எம்மிடமிருந்து பிரிந்து சென்ற ஞானசாரதேரர் 2005 இல் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டார். பின்பு 2010 இல் சரத்பொன்சேகாவுடன் செயற்பட்டார். அதன் பின்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவாளரானார். திஸ்ஸ விதாரண ஞானசாரதேரர் தொடர்பில் என்னை குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால் ஞானசாரதேரர் மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்த போது திஸ்ஸவிதாரணவும் கூட இருந்தார். யார் ஞானசார தேரருக்கு பதவிகள் வழங்கியது, வாகனம் வழங்கியது என்று திஸ்ஸவிதாரணவுக்குத் தெரியும். கோதாபய ராஜபக் ஷவும் மஹிந்த ராஜபக் ஷவும் அன்று அவருக்கு அடைக்கலம் வழங்கியிருந்தார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இணைந்த எதிர்க்கட்சியினருக்கும் சட்ட ஆலோசனை வழங்கும் ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரே ஞானசாரதேரரின் சட்டத்தரணியாக செயற்படுகிறார்.
அப்படியென்றால் எப்படி நான் ஒளித்து வைக்க முடியும். அரசியல் சேறு பூசுவதற்காகவே என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
மஹிந்த ராஜபக் ஷ இப்போதாவது நேர் பாதையில் பயணிக்க வேண்டும் என்றார்.


Comments
Post a Comment