செயற்திறனற்ற அரசாங்கம்
நாட்டில் ஆட்சியிலுள்ள தேசிய அரசாங்கத்தின் வினைத்திறனின்மை மற்றும் செயற்திறனின்மை என்பன நாட்டை மென்மேலும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்லுமா எனும் கவலையை தோற்றுவித்துள்ளது.
நல்லாட்சி எனும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த இரு கட்சி தேசிய அரசாங்கத்தினால் நாட்டின் நிர்வாகத்தை திறம்பட முன்கொண்டு செல்ல முடியவில்லை என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது.
வெறுமனே அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றார்களே தவிர அவற்றின் செயற்திறனை அதிகரிப்பதில் எந்தவித முன்னேற்றங்களையும் காண முடியவில்லை.
இனவாத சக்திகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மீளத் தலைதூக்கி இன மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகின்ற போதிலும் அதனைக் கட்டுப்படுத்த இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை. நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஒரு சாதாரண பிக்குவைக் கூட கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தத் திராணியற்ற நிலையிலேயே இந்த அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.
கடந்த வருடமும் இவ்வருடமும் பாரிய அனர்த்தங்கள் நாட்டில் ஏற்பட்டன.
இருப்பினும் இவற்றை சரியாக எதிர்கொள்ளவும் முகாமை செய்யவும் மக்களை அதன் பாதிப்புகளிலிருந்து மீட்கவும் அரச இயந்திரம் தவறிவிட்டது.
ஊழல் மோசடிகளைப் பொறுத்தவரை கடந்த அரசாங்கத்தைப் போலவே இந்த ஆட்சியிலும் உள்ளரங்கமாக பல்வேறு மோசடிகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் அரங்கேறவே செய்கின்றன.
சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பவர்களாகவும் தமது கடந்த கால எஜமானர்களுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்துபவர்களுமாகவே நடந்து கொள்கிறார்கள்.
இப்பின்னணியில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமது கட்சிகளின் நலன்களையும் வாக்கு வங்கிகளையும் குறிவைத்து நடந்து கொள்கிறார்களே தவிர தம்மை நம்பி வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்.
இவ்வாறு மிகவும் கவலை தரும் நிலையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடந்த கால ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் மீண்டும் தலைகாட்டவும் தம்மிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்குமாறும் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
நாட்டு மக்களைப் பொறுத்தவரையில் இன்று எல்லா அரசியல் தரப்புகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. யாரையும் திறமானவர்கள் என்று விரல் நீட்ட முடியாத நிலையிலேயே இலங்கையில் அரசியல் இருந்து கொண்டிருக்கிறது.
இந் நிலை மாற்றப்பட வேண்டும். அதற்காக தூய்மையான சிவில் சமூக சக்திகள் களத்தில் இறங்கி உழைக்க வேண்டும்.
சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்களிலுள்ள சிவில் மற்றும் மத தலைவர்கள் ஒன்றுபட்டு இது தொடர்பில் மக்களை அறிவூட்டி அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்க முன்வர வேண்டும். இன்றேல் நாடு நம் கண்முன்னேயே சின்னாபின்னமாகிப் போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்.


Comments
Post a Comment