ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் ஊழல், மோசடி: கடும் தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி


ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் நடந்த ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க தற்போதைய அரசாங்கம் நியமித்த ஜே.சீ. வெலியமுனக தலைமையிலான குழு முன்வைத்த பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை உடனடியாக அமுல்படுத்த அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை செய்துள்ள தவறுகள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோர் பணிப்பாளர் சபை மேற்கொண்டுள்ள ஊழல், மோசடிகள், தவறான நியமனங்கள் தொடர்பில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு எதிராக பணிப்பாளர் சபையின் 5 உறுப்பினர்கள் விடயங்களை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு எதிராக அமைச்சர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உண்மை எனவும் பணிப்பாளர் சபை பிளவுப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபை சம்பந்தமாக முக்கியமான முடிவுக்கு எடுக்கப்படும் என ஜனாதிபதி இறுதியில் கூறியுள்ளார்.

Comments