இலங்கை முகாமில் இருந்த அகதிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸாருக்கு விளக்கமறியல்


இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொஹிஞ்சா முஸ்லிம் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸாரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் குறித்த நபரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தரப்பு சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியன்மார் நாட்டை சேர்ந்த 30 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள், மிரிகானா சட்ட விரோத தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 22 வயதான பெண் ஒருவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த யுவதியை சிகிச்சை முடிந்து அழைத்து சென்ற சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கொஹூவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments