ஞானசார தேரர் இஸ்லாத்தை ஏற்றாலும் இந்த நாட்டில் இனவாதம் ஒழியாது!

இலங்கை முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக ஈடுபட்டுவரும் கலகொட அத்தே ஞானசார தேரர் புனித இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினாலும் இலங்கையில் வேரூன்றி காணப்படும் இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது கடினமான காரியமாகும்.

இனவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து முஸ்லிம்களுடைய பாதுகாப்பு, இருப்பு என்பன போன்ற விடயங்களை நிரந்தரமாக்கிக் கொள்ள முஸ்லிம் சமூகம் முன்வராத வரையில் இந்த நிலை தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

குறுகிய காலத்திற்குள் முஸ்லிம் அரசியலில் கால்பதிக்க வேண்டும் என சில அரசியல்வாதிகள் கட்சிகளை ஆரம்பித்து முஸ்லிம்கள் மத்தியில் இனவாத கருத்துக்களை விதைத்து சிங்கள,தமிழ் முஸ்லிம் என பாகுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்த சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தி தங்களுடைய அரசியல் அடையாளத்தை பெற முயற்சிப்பவர்களுக்கு பின்னால் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பயணித்தால் பயணத்தின் இறுதியில் மரணக்குழியில் விழும் நிலை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்த அதிகார நோய்பிடித்தவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரம் அல்லாது தமிழ் சிங்கள மக்கள் மத்தியிலும் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை, என்றாலும் கடந்த காலங்களில் தமிழ் சமூகம் பிரிந்து நின்றதன் பாரதூரமான விளைவுகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பாடமாகவும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் சிங்கள சமூகத்திற்கு படிப்பினையாகவும் அமைந்திருக்கிறது.

சகவாழ்வு, சமாதானம் என்பவற்றை நாட்டின் மூவின மக்கள் நேசித்தாலும் அதை இனவாத கட்சிகளின் தலைமைகள் விரும்பாதவரையில், அந்த கட்சிகளை சமூகங்கள் நிராகரிக்காத வரையில் நிரந்தர சமாதானம் என்பது கனவு வார்த்தைதான் என்பதை அனைத்து சமூகங்களும் நினைவில் கொள்ளவேண்டும்.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் இந்நாட்டின் எதிர்கட்சி அரசியல் அர்த்தமற்று போனது என்பதே உண்மையாகும், பிச்சைக்காரனுக்கு புண் எவ்வாறானதொரு மூலதனமோ அதே போல் அரசியல்வாதிகளுக்கு சமூகங்களுக்கு இடையிலான பிளவு அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

எப்போதாவது ஆட்சி மாறும் என்ற கனவுகளுடன் இருந்த எதிர்கட்சி அரசியல் தலைவர்களில் ஒருவரான, தற்போதைய பிரதமர் அவர்களின் வழமையான சிந்தனையே ஞானசார தேரர் என்ற கடும் போக்குவாதியை உருவாக்கியது, அதன் மூலமாக சிங்கள பெரும்பான்மை மக்களை தூண்டிவிட்டு சிறுபான்மை இனத்தை சீண்டுவதனால் இன ஐக்கியத்தை கேள்விக்குற்படுத்தி ஆட்சியை பிடிக்கலாம் என்பதும் அதற்காக துணைபோனவர்கள் அவருடைய அரசாங்கத்தில் தற்சமயம் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதையும் முஸ்லிம் சமூகம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தங்களுடைய அரசியல் அந்தஸ்தை இழக்கவிடா
மல் பாதுகாக்கும் ஞானசார தேரரையும், அவருடைய அட்டகாசங்கள் அனைத்துக்கும் அனுமதி வழங்கி பாதுகாப்பவர்கள் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்துக் கிடப்பது முட்டாள்தனமாகும்.

ஞானசார தேரர் அவர்கள் தாமாகவே முன்வந்து புனித இஸ்லாத்தை ஏற்றாலும் தற்போதைய அதே சவால்களை ஓராயிரம்ஞானசாராக்களை உருவாக்கவும் அவர்களை வைத்து இனவாதத்தை தொடரும் சிந்தனை கொண்ட அரசியல் தலைவராக ஐ.தே கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அவர்கள் இருக்கிறார். 

ரணில் விக்கிரமசிங்க என்பவர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக, அல்லது எதிர்கட்சி தலைவராக அல்லது ஆட்சியாளராக, அவர் எந்த தரப்பில் இருந்தாலும் சிங்கள தமிழ் முஸ்லிம் ஒற்றுமை இலங்கையில் மலராது என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அரசியல் அடையாளத்துடன் இருக்கும் வரையில் இந்த நாட்டில் இனவாதம் என்ற வாசகம், இலங்கை அரசியலில் நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. அப்படிப்பட்ட ஒருவருடைய நிகழ்ச்சி நிரல்களுக்கு விலைபோன சிறுபான்மை இனவாத கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய அரசியல் இருப்பே வேண்டி அவருடைய வாடி வீட்டில் குடியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமூகம் அடையாளம் கண்டு அவர்களை அரசியலில் இருந்து தூரப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் முஸ்லிம்கள் வேண்டி நிற்கும் சகவாழ்வு சமாதானம் நீடிக்கும்
 
அஹமட் புர்க்கான் கல்முனை

Comments