தராவிஹ் தொழுகைக்கு செல்வதில் பெரும் அச்சம் – முன்னாள் அமைச்சர் அஸ்வர்
நாட்டில் முஸ்லிம் சமூகம் முன்னெப்போதும் இல்லாதவாறு அச்சத்துடனும், பீதியுடனும் நாட்களைக் கடத்துகிறது.
பெரும்பான்மைச் சமூகம் வாழும் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் பெண்கள் இரவில் தராவீஹ் தொழுகைக்கு கூட செல்வதற்குப் பயப்படுகின்றனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஜனாதிபதியை உடனடியாகச் சந்தித்து இந்நிலைமையைத் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம்.அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் தொடராக இடம்பெற்று வரும் பள்ளிவாசல்கள் தாக்குதல்கள் தொடர்பில் ஏ.எச்.எம்.அஸ்வர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன சர்வமத தலைவர்களை அழைத்து மதங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கலந்துரையாடுவதற்கு முன்பு முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். இதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் உடனடியாக ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனாதிபதியை முஸ்லிம் அமைச்சர்கள் தனித்தனியே சந்தித்து முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகளை முன்வைப்பதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
ஒவ்வொரு வருடமும் ரமழான் காலத்திலே முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. நாட்டில் ஓர் அசாதாரண நிலையை உருவாக்குவதற்கு இனவாதக் குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. எனவே அரசாங்கம் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. வர்த்தக நிலையங்கள் எரிக்கப்படுகின்றன என்று கோஷமெழுப்பப்பட்டது. முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலே முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அச்சத்துடனும், பீதியுடனும் வாழ வேண்டியேற்பட்டுள்ளது. நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வுக்கு எதிராக கோஷமெழுப்பப்படுகிறது.
குர்ஆன் அவமதிக்கப்படுகிறது. எனவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் பொறுமை காக்கக்கூடாது. மௌனம் சாதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment