ஜப்பானிய சக்கரவர்த்தி தன்னை அழைத்ததாக பொய் கூறிய மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மக்களை ஏமாற்றுவதற்காக பொய்களை கூறி வருவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்பாக மகிந்த ராஜபக்ச அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மங்கள வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நாட்டில் போர் முடிவடைந்த பின்னர் நாட்டை அபிவிருத்தியை நோக்கி உயர்த்த சந்தர்ப்பம் கிடைத்தது.
எனினும் அதற்கு பதிலாக மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது ஆலோசகர்கள் நாட்டை அதளபாதாளத்திற்குள் தள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
மிகவும் அநீதியான முறையில் அதிகளவான வணிக வட்டியில் வெளிநாட்டு கடன்களை பெற்று நாட்டை கடன் சுமைக்குள் தள்ளினர்.
மறுபுறம் இலங்கையையும் நாட்டு மக்களை உலகில் தனிமைப்படுத்தும் வழியை ஏற்படுத்தினார். மகிந்த ராஜபக்சவும் அவரது ஆலோசர்களும் எடுத்த முடிவுகள் காரணமாக இலங்கையிடம் இருந்து சர்வதேசம் விலகிச் சென்றது.
சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்த போது இலங்கைக்கு உதவி வழங்கும் பல பிரதான நாடுகள் பல முறை இலங்கைக்கு எதிராக வாக்களித்த தகவல்களை ராஜபக்ச நாட்டுக்கு மறைத்தார்.
தனது பதவிக்காலம் முடியும் முன்னர் அவரே தேர்தலை அறிவித்து ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற பின்னர், அந்த தோல்வியை ஒப்புக்கொள்ளவோ அதனை தாங்கி கொள்ளும் நிலைமைக்கோ இன்னும் வரவில்லை என்பது தெரிகிறது.
அதிகாரத்தின் மீதுள்ள பேராசையை காரணமாக கொண்டு மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது ஆலோசகர்களும் செயற்பட்டு வருகின்றனர்.
அவர்களின் தனிப்பட்ட சுபாவத்தை மாத்திரமல்லாது, ராஜபக்சவின் அரச நிர்வாகத்தின் அங்கமான பொய், மோசடி, நரித்தனம் என்பவற்றை வழமைப் போல் தற்போதும் அரங்கேற்றி வருகின்றனர்.
மகிந்த ராஜபக்ச அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக அவர் மக்களை எப்படி ஏமாற்றினார் என்பதை நாங்கள் கண்டோம்.
ஜப்பானிய சக்கரவர்த்தியின் அழைப்பின் பேரிலேயே தான் ஜப்பான் செல்வதாக மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்வி பதிலளித்திருந்த ஜப்பானுக்கான இலங்கை தூதரகம், மகிந்த கூறியதை நிராகரித்திருந்தது.
மகிந்த ராஜபக்ச அவர்களே மக்களை ஏமாற்றுவதற்காக ஏன் இப்படியான பொய்களை கூறுகின்றீர்கள்?.
புத்த பகவானின் தர்மத்தை கடைப்பிடிக்கும் பக்தன் என நாட்டுக்கு மக்களுக்கு காட்ட முயற்சிக்கும் நீங்கள், பஞ்சசீலன்களின் ஒன்றையாவது கடைப்பிடித்து நாட்டுக்குள் பொய்க் கூறுவதை தவிர்க்கக் கூடாதா?.
“ஜீ.எஸ்.பி. பிளஸ் சம்பந்தமாக அரசாங்கம் வெற்றியளிக்காத எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கக்கூடாது” என்ற தலைப்பில் மகிந்த ராஜபக்ச வெளியிட்டிருந்த அறிக்கையில், இலங்கை உயர்ந்த மத்திய தர வருமானம் பெறும் நாடாக இன்னும் குறுகிய காலமே இருப்பதால், ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற்றது சிறிய விடயம் எனக் கூறியிருந்தார்.
எனினும் மகிந்த ராஜபக்ச பிரதான பிரச்சினையை அவர் வேண்டும் என்றே மறைத்துள்ளார். ஒரு நாடு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்ள பொருத்தமற்ற நாடாக மாற வேண்டுமாயின் தொடர்ந்தும் மூன்றாண்டுகள் உயர்ந்த வருமானத்தை பெற்ற நாடாக இருக்க வேண்டும்.
அதனை உலக வங்கி தரப்படுத்த வேண்டும். இலங்கை நாளைய தினமே உயர்ந்த வருமானத்தை பெறும் நாடாக மாறினாலும் தொடர்ந்தும் மூன்றாண்டுகளுக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.


Comments
Post a Comment