குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக பொது பல சேனா குற்றச்சாட்டு .


திருகோணமலை - மூதூரில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொது பல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருகோணமலை மல்லிகைத்தீவு தெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவிகள் மூவர் கடந்த 28ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல கோணங்களில் விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

தெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற அறநெறி கல்விச் செயற்பாடுகளுக்கு சென்ற  மூன்று மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த சம்பவம் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள பொது பல சேனா அமைப்பினர் பக்கசார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனா்.


மேலும் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அரசாங்கம் சமூக நீதியையும் தமது பொறுப்பையும் நிறைவேற்றுமென நம்புவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, குற்றவாளிகளை பாதுகாக்காது என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விரிவான விசாரரணைகளை மேற்கொள்வதோடு, உண்மையான குற்றவாளிளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது பல சேனா அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Comments