நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகள் வாழ்நாளில் தொடர வேண்டும் – இம்ரான் MP

Ihzana Fareed

முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகள் வாழ்நாளில் தொடர வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இறை அச்சம், சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு போன்ற  நல்ல பல அம்சங்களை புனித நோன்பு நமக்கு கற்றுத் தந்துள்ளது. இவற்றின் மூலம் நாம்பக்குவப் படுத்தப் பட்டுள்ளோம். இந்தப் பக்குவம் தொடர்ந்து இருக்க வேண்டும். அதன் மூலம் இறை அன்பையும், அருளையும் நாம்பெற்றுக் கொள்ள முடியும்.
           
இன்று நமது நாட்டு நிலை முஸ்லிம் சமூகம் திருப்திப் படக் கூடிய அளவுக்கு இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். எல்லா மட்டங்களுக்கும் நாட்டின் தற்போதைய நிலை நன்கு தெரியும். இருந்தும் நாம் எதிர்பார்க்கின்ற சமாதான, சகவாழ்வு சூழ்நிலை அடிக்கடி மாற்றமடைகின்றது. சில விடயங்களில் நமக்குரிய நீதி தாமதமடைந்துள்ளது. 

இந்நிலையில் நாம் நிதானமாக செயற்பட வேண்டியுள்ளது. உணர்வுகளுக்கு முக்கியம் கொடுத்து செயற்படுவது சமூகத்தை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளி விடும். எனவே, ஓன்று பட்டு நிதானமாக  நமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு புனித நோன்பின் மூலம் பெற்ற பயிற்ச்சிகளை நாம் பயன்படுத்த வேண்டும். 

அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என அல் குர்ஆன் குறிப்படுகின்றது.இதனைக் கவனத்திற் கொண்டு  நமது எல்லா செயற்பாடுகளும் அமைய  வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு செயற்பட நாம் திடசங்கற்பம் பூணுவோம்.

இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments