எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்
இரு பிரதான கட்சிகளின் ஒன்றிணைந்த பயணம் குறித்து பிரதமர் ரணில்
நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்கவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செல்வது மிகவும் கடினமான பயணமாகும்.
எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஒரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது. எனினும் இவையனைத்தையும் அறிந்த பின்னரே தேசிய அரசாங்கத்தை நிறுவினோம்.
ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் தேசிய அரசாங்கம் நிறுவியமையின் ஊடாக நாட்டின் கடன் சுமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடிந்துள்ளது. எமக்கு முன்பு போன்று ஆட்சி அமைக்கும் போது எவரது உதவியையும் கோராமல் இருந்திருக்கலாம்.
இதனால் நாட்டிற்கே பாதிப்பாக அமையும். ஆகவே தேசிய அரசாங்கத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது சுதந்திரக் கட்சிக்கோ இலாபம் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் புதிய அடுக்குமாடி வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் பல்வேறு துறைகளிலும் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் நாம் பெருமளவில் கடன் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்.
அதிகளவிலான முதலீடுகளை நாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
எமது நாட்டின் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட பல திட்டங்களை தற்போதைக்கு ஆரம்பித்துள்ளோம் . எனினும் தற்போது வரைக்கும் நாம் 4 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது.
ஆகவே கடனை செலுத்துவதற்கு போட்டித் தன்மையுடன் கூடிய சந்தை பொருளதாரம் அவசியம். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். வரி வருமானம் அதிகரிக்க வேண்டும்.
பொருளாதாரம் ஸ்திரமான நிலைமைக்கு வரும் போது அரசாங்கத்தின் சலுகையை குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மாத்திரம் வழங்க முடியாது. அனைவருக்கும் வழங்க வேண்டும். மக்களுக்கு மேலும் சலுகை வழங்க வேண்டும். இதன்படி தரம் 13 வரையான கல்வியை கட்டாயமாக்க வேண்டும். இதன்மூலம் பாடசாலை கல்வியை விருத்தி செய்ய முடியும்.
மேலும் பல்கலைக்கழக செல்ல முடியாதவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வியை வழங்க உள்ளோம். அத்துடன் சுகாதார சேவையை விருத்தி செய்யவேண்டும். எமது ஆட்சியில் மேலும் பல மருத்துவ பீடங்கள் ஆரம்பிக்கவுள்ளோம்.
இதனை தவிர வீடில்லாதவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டியுள்ளது. யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கும், மலையகம் மக்களுக்கும் , கொழும்பு வாழ் மக்களுக்கும் , தொழில் வல்லுநர்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும். அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும். இது பாரிய அபிவிருத்தி திட்டமாகும்.
இன்னும் பத்து வருடங்களில் நாட்டில் அனைத்து பிரதேசங்களும் நகர மயமாகும். வீடுகள் நிர்மாணிப்பதற்கு நாம் பாரிய வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். நாட்டுக்கு மத்திய தர வர்க்கம் மிகவும் முக்கியமாகும். ஆகவே நாட்டின் பல பகுதிகள் நகர மயமாகும் போது மாடி வீடுகள் நிர்மாணிக்க வேண்டியுள்ளது. வாகன நெரிசலையும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம்.
இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கவே தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளோம். எமக்கும் முன்பு போன்று நீங்கள் ஒருவரும் தேவையில்லை என்று கூறியிருக்கலாம். ஆனாலும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு இரு பிரதான கட்சிகளும் ஒன்றாக வேலை செய்து பார்ப்போம்.
நிச்சயமாக எம்மால் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இதனாலேயே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது.தற்போது வெளிநாட்டு உதவிகள் எமக்கு கிடைக்க பெறுகின்றன. தேசிய அரசாங்கத்தின் ஊடாக பிரச்சினைகளை தீர்த்தால் மக்கள் எம்மை போற்றுவர். தேசிய அரசாங்கம் நிறுவியதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கோ சுதந்திரக் கட்சிக்கோ இலாபம் கிடைக்காது. இலங்கை தேசமே நன்மை அடையும்.
ஆகவே, இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பது மிகவும் கடினமான பயணமாகும்.
இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிக்கும் பயணமானது ஒரளவேனும் பிழைத்தால் எங்கு போய் மோதுமோ தெரியாது. ஆகவே இது எச்சரிக்கையான பயணமாகும். ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு ஒன்றிணைந்து பயணிப்போம் என்றார்.


Comments
Post a Comment