டெங்கு நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்திடம் உதவி கோரும் இலங்கை


டெங்கு நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோயினால் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு துரித கதியில் ஏதேனும் ஓர் வழிமுறையை பரிந்துரை செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உலக சுகாதார ஸ்தாபனத்திடம் கோரியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதிகள் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

தாய்லாந்தின் டெங்கு ஒழிப்பு நிபுணத்துவ மருத்துவர் மற்றும் தொற்று நோய் தடுப்பு தொடர்பிலான விசேட நிபுணத்துவ வைத்தியரையும் உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

டெங்குவை கட்டுப்படுத்த காத்திரமான ஓர் தீர்வுத் திட்டத்தை இன்றைய தினத்திற்குள் பரிந்துரை செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபன பிரதிநிதிகளிடம் சுகாதார அமைச்சர் கோரியுள்ளார்.

மேலும், டெங்கு தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். டெங்கு நோயினால் இதுவரையில் 245 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 80,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments