கீழ்த்தரமான அரசியல் சதிகள் மூலம் ஆட்சிக்கு வரும் கனவு பலிக்காது: ஜனாதிபதி திட்டவட்டம்
நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பி தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபட்டு வரும் போது எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர கனவு காணும் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன தெரிவித்துள்ளார்.
படைவீரர்களுக்கு வீட்டு உறுதிகளை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார், தொடர்ந்து தெரிவிக்கையில்,
சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் சதிகளை தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தெரிவித்தார்.
வீரமிகு படையினர் சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியிருந்த நிலையை மாற்றி உலகில் எந்தவொரு நாடோ, சர்வதேச அமைப்போ அவர்கள் மீது கைவைக்க முடியாதவாறு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஊடகவியலாளர்களை கொலை செய்து, அவர்களை காணாமல் போகச் செய்து, ஊடக நிறுவனங்களுக்கு தீ வைத்த காலத்தை முடிவுறுத்தி அனைத்து ஊடகவியலாளர்களினதும் உயிர்களை பாதுகாப்பதற்கும், ஊடக நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்த தற்போதைய அரசாங்கத்தையே விமர்சித்து நாட்டில் பிரச்சினைகள் இருப்பதாக மக்களுக்கு காட்டுவதற்கு முயற்சிக்கும் சில ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவலையடைவதாக குறிப்பிட்டார்.
படைவீரர்கள் நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தையும், படைவீரர்களையும் பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதுடன் படைவீரர்களின் நலன்களுக்காக அரசாங்கம் அமுல்படுத்தும் திட்டங்களின் கீழ் மிகவும் குறுகிய காலத்தினுள் படைவீரர்களின் வீட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசாங்கத்தால் முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது பத்து படைவீரர்களுக்கான வீட்டு உறுதிகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment